{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/58tta764/", "data": {"id": "58tta764", "url": "https://nigandu.oliyonresearch.com/e/58tta764/", "kind": "article", "headword": "சூல் குழல்", "romanization": "cūl kuḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.394632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பெண் உடலின் சூல்பையின் இரண்டு பக்கமும் உள்ள குழல்களைச் சூல் குழல்கள் (fallopian tubes) என்பர்.", "body_ta": "பெண் உடலின் சூல்பையின் இரண்டு பக்கமும் உள்ள குழல்களைச் சூல் குழல்கள் (fallopian tubes) என்பர். கருப்பையின் மேற்பகுதியில் உள்ள இக்குழல், வெளிப் புறமாகவும் பின் புறமாகவும் அகன்ற பந்தகத்தின் மேற்பகுதியில் காணப்படுகிறது. உடற்கூற்று இயல்படி, இக்குழல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் படுகிறது. அவை, சிற்றிடை வெளிப் பகுதி, குறுகலான பகுதி, குடுவை விரிவு, கூம்புப் புழை எனப்படும்.\n\nசிற்றிடை வெளிப்பகுதி. இது கருப்பையின் சுவர் வழியாகச் செல்கிறது. 1 மி. மீட்டருக்கும் குறைந்த துளை கொண்டுள்ளது.\n\nகுறுகலான பகுதி. கருப்பையின் பக்கத்தில் சிறிது அகலமாக உள்ளது.\n\nகுடுவை விரிவுப் பகுதி. இது மிகவும் அகன்ற பகுதி.\n\nகூம்புப் புழை. இதில் விரல்களைப் போன்ற ஊது குழல் வடிவ அமைப்புகள் (fimbria) காணப்படுகின்றன. இதில் ஓர் அமைப்பு மிகவும் நீளமாகச் சூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூல் குழலில் மூன்று உறைகள் காணப்படுகின்றன. அவை அகன்ற பந்தகமான உதரவுறை, வெளியே நீள வாட்டத்திலும் உள்ளே வட்ட வடிவத்திலும் அமைந்த தசை இழை உறை, சீதச் சவ்வு ஆகியன. இதில் அசையும் இழை கொண்ட தூண் வகைப் புறத் தோல் (epithelium) உள்ளது. இது சூலகத்திலிருந்து வெளிப்படும் முட்டையைக் கருப் பையை நோக்கித் தள்ளுகிறது. இதிலுள்ள காப்ளெட் செல்களின் சுரப்பு, முட்டைக்கு ஊட்டம் அளிக்கிறது.\n\nசூலகக் குழலுக்கான குருதிப் பரிமாற்றம் சூலகத் தமனியிலிருந்தும், கருப்பைத் தமனியிலிருந்தும் கிடைக்கிறது. இவ்வகை இரு நாளக் குருதிப் பரிமாற்றம் சூல் குழலுக்குப் பாதுகாப்பளிக்கிறது. சிரை குருதி நிண நீர், கீழ் முதுகு நிணச் சுரப்பிகளை அடைகிறது. சூலகப் பிணயத்திலிருந்தும், துணைப் பரிவு நரம்பு மண்டலத்திலிருந்தும் நரம்பூட்டம் கிடைக்கிறது.\n\nஅண்மை உறுப்புகள். சூல் குழலின் மிக அருகே கருப்பை உள்ளது. வெளிப்புறமாகக் கூம்புப் புழையின் பந்தகங்களும், கூபகத்தின் பக்கச் சுவர்களும் உள்ளன. முன் புறமாகவும், பின் புறமாகவும், மேற்புறமாகவும் உதரவுறைக் குழிவும் சிறு குடல்களும் காணப்படுகின்றன. கீழ்ப் புறமாகச் சூலகங்களும், அகன்ற பந்தகமும் உள்ளன.\n\nசூல் குழலின் பணிகள். விந்தணுவைப் போன்று அசையும் ஆற்றல் இல்லாத முட்டையை உந்தித் தள்ளுவதே இதன் பணியாகும். தசை இழைகள், குற்றிழைகள் ஆகியவற்றின் அலை அசைவால் இச்செயல் நடைபெறுகிறது. கேப்ரியல்லா ஃபல்லோ பியோ என்னும் இத்தாலிய உடற்கூறு இயலாளர், சூல் குழலைப் பற்றி விவரித்தமையால், இதற்கு 'fallopian tube\" என்னும் பெயர் ஏற்பட்டது. —அ. கதிரேசன்"}}