{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/55mrzgez/", "data": {"id": "55mrzgez", "url": "https://nigandu.oliyonresearch.com/e/55mrzgez/", "kind": "article", "headword": "அலகுமுறை", "romanization": "alakumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.392470+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கற்பிக்கும் பாடப்பகுதிகளில் ஒரு பெரும் பிரிவு ‘அலகு’ என்று கொள்ளப்படும்.", "body_ta": "கற்பிக்கும் பாடப்பகுதிகளில் ஒரு பெரும் பிரிவு ‘அலகு’ என்று கொள்ளப்படும். அலகு என்பது சிறு கூறுகளை ஒருங்கே அமைத்து மாணாக்கரின் கவனத்தை ஈர்க்கத்தக்க வகையில் ஒரு குறிப்பிட்ட அளவில் அமைவது. இந்த வகையில் அமைக்கப் பெறும் அலகு பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதில்லை. சான்றாக, ஒரு பாடநூலை எடுத்துக் கொண்டு, அதனை நான்கு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் ஓர் ‘அலகு’ என்று அமைக்கலாம். அவ்வாறே, ஒவ்வொரு பாகத்தையும் பல பிரிவுகளாகப் பிரித்துக் கிளை அலகாக அமைக்கலாம். அந்த ஒவ்வொரு பகுதியும் பல உட்பிரிவுகள் கொண்டதாகவும் அமையலாம். இத்தகைய உட்பிரிவுகளில் சிறிய பகுதிகளை ‘அடிப்படைகள்’ எனக் கூறலாம். ஒவ்வோர் அலகும் பொருளுடன் அமைந்து முழுப் பாடத்தின் நடைமுறைக் கூறாக விளங்க வேண்டும். இந்திய வரலாற்றினை இந்து, மொகலாய, ஆங்கிலேய, சுதந்திரத்திற்குப் பிந்திய காலப் பகுதி என்று நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அலகினையும் அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளலாம்.\n\nஇத்தகைய அலகுகளை அமைத்துக் கொண்ட பின் அதற்கேற்பக் கற்பிக்கும் முறைகளை முடிவு செய்ய வேண்டும். ‘அலகு முறை’ (Unit Method) என்பதைவிட ‘அலகு முறைகள்’ என்பதே விளக்கமாகும் என்று வெசுலி (Wesley) கருதுகிறார். அலகு என்பது பல பொருள்களையும், அனுபவங்களையும் கோவையாக அமைப்பதன் மூலம் மாணாக்கர்களிடம் பயிற்றுப் பயனை ஏற்படுத்த உதவுவதுதான் என்பது வெசுலி அவர்களின் கருத்து. ஆகையால் பாடப் பகுதிகளை இணைப்பதில் மாணாக்கர்களின் தேவைகளை மனத்திற் கொள்ள வேண்டும். சமூக அறிவியல் பாடப் பகுதியில், இந்த ‘அலகு முறை’ நல்ல பயனளிக்கும். ‘நம் நாட்டின் குடிநீர் வசதி’ என்ற அலகை எடுத்துக் கொண்டால், அதனுடைய பல பகுதிகளை மாணாக்கர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சூழலை அமைத்துக் கொள்வோமேயானால், அது குறிப்பிடத்தக்க அளவில் பயிற்றும் பயனை ஏற்படுத்தும். இவ்வாறே ஆற்றங்கரை நாகரிகம், மக்களாட்சி, தேசிய மன்னர்கள் ஆட்சி ஆகியவற்றை ‘அலகு’ முறையில் ஒழுங்கமைக்கும் பொழுது, அந்த அலகைப் பற்றிய பாடப் பொருள் அடிப்படைகள் இடம் பெற வேண்டும். தொடர்பற்ற விவரங்களை அறவே விலக்க வேண்டும்.\n\n“அலகுப் பாட முறைகளை”த் திட்டமிடுதல் மிக இன்றியமையாததாகும். பாடங்களை மட்டும் மனத்திற் கொண்டு தனித்தனியே திட்டம் வகுத்தல் அலகுப் பாட முறைக்கு அடிகோலாது. கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்தில் வரும் விவரங்களையும், கருத்துகளையும் சீரிய முறையில் பாகுபாடு செய்து, ஒப்பிட்டுத் தெளிவாகப் புரிந்து கொள்ளுவதற்கு அல- குப்பாட முறை இன்றியைமயாததாகும். இந்த முறை, படித்த பாடப் பொருள்களை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. கற்றல் என்பது மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்ததாகும். செயல்முறை வழி வந்த கல்வியே அலகு முறைப் பாடத்திட்டத்தின் உயிர் நாடியாகும். குறிக்கோள், அதை அடைதற்கு வேண்டிய கற்றல் அனுபவங்கள், அவ்வப்பொழுது மதிப்பீடு செய்தல் ஆகியவை அலகுப்பாட முறையின் சிறந்த கூறுகளாகும். அலகுப்பாட முறை மாணவர் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது; மாணவர் முழுமையான அறிவைப் பெற ஒரு சிறந்த கருவியாக அமைந்துள்ளது; அவர்களுடைய ஆர்வங்களைத் தூண்டி, விரும்பத்தக்க மனப்பான்மையை அமைத்துப் பயன்தரக் கூடிய கண்ணோட்டத்தோடு செம்மைப்படுத்துகிறது.\n\nஅலகு முறையில் கற்பிப்பதற்கு, டாக்டர் மாரிசன் (Dr. Morrison) ஒரு முறையை ஏற்படுத்தியுள்ளார். அலகு என்பது கற்கவேண்டிய செய்திகளை இணைத்து, பெரும் பகுதியாகவும், அதே சமயத்தில் மாணாக்கர்களுக்குச் சிறந்த வகையில் முழுமையாகப் புரிய வைக்கும் சிறு பகுதியாகவும் அமைதல் வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார். அவரது திட்டத்தில் ஐந்து படிகள் கூறப்பட்டுள்ளன.\n\n::1) புத்தாய்வு செய்தல் (Exploration) ::2) முன்னிலைப் படுத்துதல் (Presentation) ::3) தன்வயப்படுத்துதல் (Asimilation) ::4) அமைப்புக்காணல் (Organisation) ::5) விவரங் கூறல் (Recitation)\n\nமுதற்படியில் மாணவனின் முன்னறிவை அல்லது பின்னணிச் சூழலைத் தகுந்த சோதனைகள் மூலம் அறிந்து அந்நிலையிருந்து பாடம் தொடங்க முற்பட வேண்டும். இரண்டாவது படியில் உரையாடல் அல்லது விரிவுரை மூலம் ஆசிரியர் பாடத்தின் தலையாய செய்திகளை எடுத்துக் கூற வேண்டும். மூன்றாவது படியில் மாணாக்கர் வேகமாகக் கற்றல், ஆசிரியர் மேற்பார்வை அல்லது ஆய்வுக்கூட முறையில் புரியாதவற்றைப் புரிய வைக்கும் பெரும்பகுதியாக அமைத்துக் கொள்ள வேண்டும். நான்காவது படியில் மாணவர்கள் வகுப்பில் கூடித் தாங்கள் கற்ற பாடத்தைக் காரண காரிய ஒழுங்குபடுத்தி, அதன் சுருக்கத்தை எழுத வேண்டும். ஐந்தாவது படியில் எழுதிய பாடச் சுருக்கங்களில் மூன்று அல்லது நான்கை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தல், ஒன்று கூடி உரையாடல் முதலியவை நடைபெறும். இவ்வாறு ஐந்து படிகள் மூலம் அலகு பற்றிய பாடப் பொருளைக் கற்பிக்க முற்படுவதால் மாணவர்கள் முழுத் திறமையைப் பெறுகின்றனர்.\n\nஅலகு முறையில் வேறு விதமான படிகள் அமைந்திருத்தலையும் காணலாம். நியூ செர்சி (New Jersy) கையேட்டில் பின்வரும் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை 1) நோக்கம் நிறுவுதல், 2) திட்டம் தயாரித்தல், 3) செயலாற்றல், 4) மதிப்பீடு செய்தல் என்பனவாகும்.\n\nஅலகு முறையின் சிறப்புக் கூறு, எல்லா மாணாக்கரும் ஊக்கத்துடன் முழுமையாகக் கற்று, சூழலின் பல பகுதிகளை அறிந்து வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வதுதான். ஆனால் இந்த முறையை அமைப்பது கடினமாகும். கால வரையறைப்படி திட்டம் வைப்பதில் கவனம் வேண்டும். இல்லாடில் காலம் வீணாகும் குழப்பமான வழிமுறையில் அலகை அமைத்துக் கொண்டால் பயிற்றுதலின் குறிக்கோளை அடைய முடியாது. ஆசிரியர் பின்பற்றும் வழிமுறைகளை ஈடுபாடின்றி மேற்கொண்டால் கற்றல் நிறைவுறாது. சொந்தச் சிந்தனையைக் கைவிட்டு வழிகாட்டிகளின் அடிச்சுவட்டில் சென்றால் கற்றல் ஏட்டளவில் சுருங்கும்.ஜெ.இரா.\n\nதுணை நூல்கள்\n\nArther C. Bining and David H. Bining, “Teaching the Social Studies in Secondary Schools”, Third Edition, Mcgraw Hill Book Company, 1952.\n\nEdge, “Teaching Social Studies in High Schools”, Third Edition, D.C., Heath and Company, Boston, 1950."}}