{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4t4kp4y5/", "data": {"id": "4t4kp4y5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4t4kp4y5/", "kind": "article", "headword": "உண்ணாமுலை எல்லப்ப நயினார்", "romanization": "uṇṇāmulai ellappa nayiṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.186524+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.", "body_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் 25 கல் தொலைவில் உள்ள தாழைநகர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சைவ சமயத்தைச் சேர்ந்த இவர் வன்னியகுல சத்திரிய மரபினராவர். இவர் எல்லன், எல்லநயினான், காலிங்கராயன், எல்லபூபதி, எல்லான், காலிங்கராயன், உண்ணாமுலை எல்லப்ப நயினார், எல்லான் காலிங்கராயன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டார். இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். இவர் சிறந்த தேவி வழி- பாட்டாளராகத் திகழ்ந்துள்ளார். சக்தி என்னும் தேவியின் வழிபாட்டினைச் சிறப்பிக்கும் யாமளை சாத்திரப் பயிற்சி மிக்குடையவர். இவரது உரை விளக்கங்களால் யாமள தந்திர நூல்கள் தெளிவுபடுத்தப்பட்டன. இவர் பல திருக்கோயில்களில் சத்தி தெய்வத்திற்கான பிரதிட்டைகள் அமைத்து, சத்தி வழிபாடு தழைத்தோங்க வழி செய்தார். இச்செய்தி ‘தண்டாத (கா) கித் தலத்துவிடை பஞ்சசத்தி கண்டானெல் லன்காலிங் கன்’ என்று முடியும் வெண்பாவால் தெரிகிறது ‘அண்ணாமலையார் தம் பாகத் தம்மையுமம்மையைச் சூழ்பஞ்ச சத்தியுமே’ என இவரைப் பற்றியுள்ள சாசனப் பாடல் தொடரால் பஞ்ச சத்தி திருவண்ணாமலையில் அம்மன் சந்நிதிக்குள் அமைந்துள்ளமை தெளியலாம். இவர் பாடிய கல்வெட்டுப் பாடல்களால் சிவநேசன், உலகநாதர் ஆகிய இரு துறவிகளின் தூண்டுதலினால் செவ்வப்ப நாயக்கர் என்ற அரசர் கி.பி. 1572–இல் திருவண்ணாமலை அருணாசலேசுவரர்கீழைக் கோபுரத்தைக் கட்டி முடித்தார் என்னும் செய்தி புலனாகிறது.\n\nஇவர் வீரைக் கவிராச பண்டிதரியற்றிய சௌந்தரியலகரிக்குச் சிறந்த உரையும், திருவாரூர்க் கோவை, திருவருணையந்தாதி, திருவிரிஞ்சைப்புராணம், திருப்பாலைப்பந்தல் உலா ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார் என்று கூறுவாருமுளர், திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருப்பாலைப்பந்தல் என்ற ஊர்க்கல்வெட்டினால் எல்லப்ப நயினார் திருப்பாலைப் பந்தல் உலாவை இயற்றினார் என்பது தெரியவருகிறது. திருவாரூர்க்கோவை டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களால் அரும்பதவுரையுடனும் ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் சிறந்த முறையில் அச்சிடப் பெற்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. திருவருணைக்கலம்பகம் இயற்றிய சைவ எல்லப்ப நாவலர் இவரின் வேறானவராவார். அவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டாகும்."}}