{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4kwukfm8/", "data": {"id": "4kwukfm8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4kwukfm8/", "kind": "article", "headword": "இலான்சுபரி, சார்சு", "romanization": "ilāṉcupari, cārcu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.744366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பார் பிரிட்டிசு சமதரும வாதிகளுள் ஒருவர்; சப்போக்கில் (Suffolk) பிறந்தவர்; போ (Bow) பாப்லர் (Poplar) போன்ற ஊர்களில் தல ஆட்சியில் பெரும் பங்கு வகித்தவர்.", "body_ta": "என்பார் பிரிட்டிசு சமதரும வாதிகளுள் ஒருவர்; சப்போக்கில் (Suffolk) பிறந்தவர்; போ (Bow) பாப்லர் (Poplar) போன்ற ஊர்களில் தல ஆட்சியில் பெரும் பங்கு வகித்தவர். இலான்சுபரி சார்சு (Lansbury, George) 1910 முதல் 1912 வரை தொழிற்கட்சியின் சார்பாகப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்குரிமை கேட்ட பெண்களுக்குப் பரிந்து பேசியதாலும், போர்க்காலத்தில் அமைதிக் கொள்கையைப் பின்பற்றியதாலும் இவர் 1922-ஆம் ஆண்டு வரை பொதுமக்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே இருந்தார். தெய்லி ஏரால்டு (Daily Herald) என்னும் நாளிதழில் இவர் தலைசிறந்த எழுத்தாளராக இருந்தும், இவரால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. தொழிற்கட்சி அரசாங்கத்தில் 1929–31 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோதிலும், மக்டொனால்டு பால்டுவின் கூட்டாட்சி அமைச்சரவையில் சேர இவர் மறுத்துவிட்டார். இவர் 1931–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தொழிற் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் அல்லாத உறுப்பினர்களுள் ஒருவர். இவர் தொழிற்கட்சியின் தலைவராக இருந்து 1932–35 வரை ஆட்சி நடத்தினார். எனினும், இவருடைய அன்பின் வழியாக வந்த கிறித்தவச் சமதருமக் கொள்கைகயின் விளைவாகப் பல தொழிற்சங்கத்தினரின் ஆதரவை இவர் இழந்தார். இவரை ஆதரிக்க மறுத்தவர்களுள் பெவினும் (Bevin) ஒருவர். தொழிற் கட்சித் தலைவர் பதவியைத் துறந்துவிட்டு, 1937–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இவர் இட்லரைச் சந்தித்து, ஆங்கிலச் செருமானிய உறவை வலுவூட்ட முயன்றும் வெற்றி பெறவில்லை. இவர் 1940–ஆம் ஆண்டில் காலமானார்."}}