{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/47drecw4/", "data": {"id": "47drecw4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/47drecw4/", "kind": "article", "headword": "அத்துவாக்கள்", "romanization": "attuvākkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:33.815241+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "‘வழி’ என்று பொருள்படும். உயிர் மேல்நிலை அடைவதற்குப் படிவழி போல இருப்பது அத்துவா.", "body_ta": "‘வழி’ என்று பொருள்படும். உயிர் மேல்நிலை அடைவதற்குப் படிவழி போல இருப்பது அத்துவா. உலகம், சொல்லுலகம் பொருளுலகம் என்று இருவகைப்படும். இவை, சுத்த மாயையான பிந்து தத்துவத்திலிருந்து தோன்றியவை. சுத்த மாயையிலிருந்து சூக்குமை (நுண்மொழி), பைசந்தி (ஒரு சிறிது விளங்கும் மொழி), மத்திமை (மெல்லிதாக ஒலிக்கும் மொழி), வைகரி (தெளிவாகக் கேட்கப்படும் மொழி) என்ற நான்கு வகை வாக்குகள் தோன்றுகின்றன. இவை சொல் உலகத்தின் வகைகள், இவை மந்திரம் (சொற்தொடர்), பதம் (சொல்), வன்னம் (எழுத்து) என மூன்றாகச் சொல்லப்படும். பிரம மந்திரங்கள் ஐந்து; அங்க மந்திரங்கள் ஆறு; ஆக, மந்திரங்கள் பதினொன்று; பதம் எண்பத்தொன்று; வன்னம் வடமொழிக்குரிய ஐம்பத்தோரெழுத்துகள்.\n\nஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு; வித்தியா தத்துவங்கள் ஏழு; சிவ தத்துவங்கள் ஐந்து; ஆக தத்துவங்கள் முப்பத்தாறு. இத்தத்துவங்களும் ஒவ்வோரண்டத்திலுள்ள நூற்றெட்டுப் புவனங்களும் சேர்ந்தது பொருள் உலகம்.\n\nஅசுத்த மாயையில் ஐம்பூதங்கள் போலச் சுத்த மாயையில் நிவிர்த்திகலை, பிரதிட்டைகலை, வித்தைகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை என ஐந்து கலைகள் உள்ளன. மேற்கூறப்பட்ட மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பவை ஆறு அத்துவாக்கள் எனப்படுவன.பெ.தி."}}