{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3tazk889/", "data": {"id": "3tazk889", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3tazk889/", "kind": "article", "headword": "அமைப்புக்கோட்பாடு", "romanization": "amaippukkōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:36.416112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இக்கோட்பாட்டின்படி உள்ளத்திலுள்ள நிலைகளும் அவற்றின் அளவுகளுமே உளவியலின் ஆராய்ச்சிப் பொருள்களாகும்.", "body_ta": "இக்கோட்பாட்டின்படி உள்ளத்திலுள்ள நிலைகளும் அவற்றின் அளவுகளுமே உளவியலின் ஆராய்ச்சிப் பொருள்களாகும். உளக்கூறுகளின் இயல்புகளையும் அளவுகளையும் அறிவதே உளவியலின் இறுதி நோக்கம் ஆகும். இதனை அகக்காட்சிக் கொள்கை என்றும் கூறலாம். இக்கொள்கையே உளவியலை விரிவுபடுத்துதலில் முதன்முதலாகத் தோன்றியது. இதன் தோற்றுவிப்புக்கு உண்ட்டு (Wilhelm Wundt) காரணமாக இருந்தார். ஆயினும் திச்சனரால் (E.B. Titchner, 1867–1977) இது ஒரு நிலையான கொள்கையாக நிலை நிறுத்தப்பட்டது. அகக்காட்சிக் கொள்கை, உளவியலின் எல்லை, பிரிவுகள் ஆகியவை பற்றிச் சில நிலையான கருத்துகளைக் கொண்டுள்ளது. விரைவாக வளர்ந்து வரும் உளவியல் துறை ஒரு பயன் முறை அறிவியலாகத் திகழ்வதில் அமைப்புக் கோட்பாடு (Structuralism) இடையூறாக நிற்கிறது. எனவே, நனவு நிலையின் தன்மையையும் அமைப்பையும் ஆய்கின்ற தூய அறிவியலாகத் திகழ்ந்தால் மட்டுமே, உளவியல் ஒரு பயனுள்ள அறிவியலாக வளர முடியும் என்று திச்சனர் எடுத்துரைத்தார். இவர் கூற்றுப்படி, புலன் உணர்ச்சிகள், சாயல்கள் ஆகிய அடிப்படை மூலப் பொருள்களைக் கொண்டு நனவு நிலை உண்டாக்கப்படுகிறது எனலாம்.\n\nதிச்சனர், உளவியலின் நோக்கம், அனுபவ நிலையைப்பற்றிய என்ன? எப்படி? ஏன்? எனும் மூன்று கேள்விகளுக்கும் விடை தருவதேயாகும் என என்றுகிறார். உளச்செயல்முறையில், அகக்காட்சி மூலம் தெரிந்து கொள்வது என்ன? எப்படி ஒரு சிக்கலைப் பகுத்தறிவது? எவ்வாறு உளச்செயல்முறைகள் ஒன்றற்கொன்று இணைந்து செயல்படுகின்றன என்பனவற்றை அறிவதே உளவியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். உண்ட்டின் கருத்தினைப் போன்றே திச்சனர் உளவியலை உள வேதியியல் என்று கருதுகிறார். திச்சனர், உடல்–உள்ளம் என்பது வேறுபட்ட, ஆனால், இணைந்த தன்மையுடைய இரு கூறுகள் என்பதை வலியுறுத்துகிறார். உளவியல் துறையின் உதவியால் நனவு அனுபவங்களை மட்டுமே அகக்காட்சியின் மூலம் உணரமுடியும் என்று வலியுறுத்தி வந்ததால் மனித நடத்தைகள் பற்றிய பல்வேறு சிக்கல்களையும், மனித வேறுபாடுகளையும் இத்துடன் இணைத்துக் கூறவில்லை. ஆதலின் விலங்கு உளவியல், குழந்தை உளவியல் ஆகியவற்றைத் துறையின் பகுதிகளாக இக்கோட்பாடு இணைக்கவில்லை. பிற்காலத்தில் இக்கோட்பாட்டைக் குறைகூறியதற்கு முதன்மையான காரணம் இதன் குறுகிய வரையறையாகும்.சா.சா.\n\nதுணை நூல்கள்\n\nWoodworth, R.S. & Marquia, D.G., “Psychology”, Methusen, London, 1959.\n\nFlugel, I.C., “A Hundred years of Psychology”, Ronald, Macmillan, New York, 1933.\n\nWoodworth, R.S., “Contemporary Schools of Psychology”, Ronald, New York, 1948.\n\nChapline and Krawice, “Systems and Theories of Psychology”, Holt Rinehart and Winston, 1974."}}