{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3r6m5y9u/", "data": {"id": "3r6m5y9u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3r6m5y9u/", "kind": "article", "headword": "உண்டியல்கள்", "romanization": "uṇṭiyalkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.140281+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உண்டியல்கள் என்பவை கடன் கருவிகளில் ஒரு வகையினவாகும்.", "body_ta": "உண்டியல்கள் என்பவை கடன் கருவிகளில் ஒரு வகையினவாகும். இவை மாற்றுமுறை ஆவணச் சட்டத்திற்கு (Negotiable Instruments Act) உட்பட்டு வரையப்படும்பொழுது மாற்றுச் சீட்டுகள் (Bills of Exchange) என்றும் பெயர் பெறுகின்றன. வணிகத்தில் பண்டங்கள் கடனுக்கு வாங்கப் படலும் விற்கப்படலும் இயல்பாகலின் உண்டியல்கள் (Hundies) எழுதுவதற்கான தேவை எழுகிறது. மாற்று முறை ஆவணச் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு அல்லது அவர்தம் ஆணைக்கு அல்லது அதனைக் கொணர்பவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வகையில் கட்டுப்பாடற்ற முறையில் ஆணையிட்டு, ஆவணத்தை உருவாக்குபவரால் கையொப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணம் உண்டியலாகும். இயங்கும் முறை: இரு வணிகர்கள் கடன் அடிப்படையில் செயற்படுவதாகக் கொண்டால் அதில் ஒருவர் கடனாளி (Debtor), பிறிதொருவர் கடன் ஈவோர் (Creditor) ஆவர். கடன் ஈவோர்க்கு உடனடியாகப் பணம் வேண்டும்; ஆனால் பொருள்களை அங்காடியில் விற்ற பிறகே கடனாளி பணம் தரும் சூழ்நிலை உள்ளது. எனவே இவர்களிடையே எழும் பேரம் உண்டியல் மூலம் ஓர் ஒப்பந்தம் தோன்றிட வழி வகுக்கிறது. கடன் ஈவோர் கடனாளியின் மீது ஒரு மூன்று மாதக் கால உண்டியலை வரைய ஒப்புக் கொள்வதன் மூலம் இப்பேரத்தை நிறைவு செய்யலாம்.\n\nஇங்குக் கடன் ஈவோர் உண்டியலை வரைவோராவர் (Drawer); கடனாளி வரையப்படுவோர் (Drawee) ஆகிறார். கடன் ஈவோரால் உண்டியல் வரையப்பட்டுக் கடனாளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வுண்டியலில் கடன் பெறுவோரின் பொறுப்பும் கடனைத் திருப்பித் தரும் தவணைக் காலமும் குறிப்பிடப்பட்டுள்ளன. கடனாளி இவற்றை ஏற்று, உண்டியலின் மேல் தம்முடைய ஏற்பினைத் (Acceptance) தெரிவிக்கிறார். உண்டியலை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கடனாளி ஏற்போர் (Acceptor) ஆகிறார். இவ்வாறு உண்டியலை ஏற்றுக் கொண்டதும் அவர் அப்போதைக்கு அப்பேரத்தினை நிறைவு செய்கிறார். மூன்று மாதங்கள் சென்ற பின் எவரிடம் உண்டியல் உள்ளதோ அவருக்கு உண்டியலில் குறிப்பிட்டுள்ளபடி கடன் தீர்வு செய்திட அவர் முன்வர வேண்டும்.\n\nசிறப்பியல்புகள்\n\n(1) உண்டியல் எழுத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். வாய்ச்சொல் உறுதியின் அடிப்படையில் இது உருவாக்கப் பெறுவதில்லை. (2) இது கடனுக்குப் பண்டங்களை விற்பனை செய்தவர் அவற்றை வாங்கியவர்மீது அப்பண்டங்களின் மதிப்புக்கான தொகையினைச் செலுத்திடுமாறு விடுக்கும் ஆணையாகும். (3) இவ்வாணை கட்டுப்பாடற்ற தன்மையையுடையது. (4) உண்டியல் எழுதுபவரால் கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும் (5) இவ்வுண்டியல் மூலம் நிகழும் வணிகக் கொடுக்கல் வாங்கலில் மூவர் இடம்பெறுகின்றனர். கடன் வழங்குவோர் ‘வரைபவர்’ ஆவார். கடன் பெற்றோர் பெயரில் உண்டியல் வரையப்படுவதால் அவர் ‘வரையப்படுபவர்’ அல்லது ‘ஏற்பவர்’ ஆகிறார். இவரன்றி, உண்டியலுக்குரிய தொகையைப் பெற உரிமை பெற்றுள்ளோர் ‘பெறுவோர்’ (Payee) ஆவார். இம்மூவரும் எவரென உறுதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். (6) கொடுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவென உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். (7) இவ் ஆவணம் பணத்தினைக் கொடுக்குமாறு மட்டுமே வரையப்படும் ஆணையாகும். (8) வரையப்படும் உண்டியல் எவர் பெயரில் வரையப்படுகிறதோ அவர் ஒப்புதலைப் பெற வேண்டும். இல்லையெனில் அது மதிப்பற்றதாகும். மேற்கூறிய இலக்கணங்களைக் கொண்ட உண்டியலின் மாதிரி ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவகைகள்\n\nமேலே காணும் மாதிரி உண்டியலில் காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளமை காணத்தக்கது. இது தவணை உண்டியல் (Time Bill) எனப்படுகிறது. இதுவன்றிக் கேட்டவுடன் பணம் கொடுக்கத் தக்க வகையில் எழுதப்படும் உண்டியல்களைக் கேட்பு உண்டியல் (Demand Bill) என்கின்றனர். உண்டியல்கள் அவை எழுதப்பட்ட நாட்டின் அடிப்படையில், அதாவது வரைபவர், வரையப்படுபவர் ஆகியோர் வாழும் நாட்டின் அடிப்படையில் உள்நாட்டு உண்டியல்கள் (Inland Bills), வெளிநாட்டு உண்டியல்கள் (Foreign Bills) என்றும் வகைச் செய்யப்படுகின்றன.\n\nகேட்பு உண்டியல் வரையப்படுவோர் கால இழப்பின்றி உடன் பணம் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், தவணை உண்டியலாயின் குறிப்பிட்டுள்ள தவணை முடிந்த பின்னரே பணம் கிடைக்கும். எனவே, அக்குறிப்பிட்ட நாளுக்கு முன்னர், ஓர் உண்டியலின் உரிமையாளர் அதற்குரிய தொகையைப் பெற விழையின், அதனை அவருடைய வங்கியிடம் கொடுத்துக் கழிவு செய்து (Discount) பெற்றுக் கொள்ளலாம். வங்கி தம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளத் தக்க உண்டியல்களை ஏற்கும். இப்பணிக்கு ஈடாக உண்டியலின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கழிவுத் தொகையாக எடுத்துக் கொண்டு மிகுதித் தொகையை வரைபவருக்குச் செலுத்திவிடும். இவ்வாறு உண்டியலில் காலத் தவணைக்கு முன்னர், அதற்குரியவர் அதனை ஒரு வங்கியிடம் கொடுத்து அதற்குரிய தொகையினைப் பெறுதல் உண்டியல் கழிவு செய்தல் எனப்படுகிறது. உண்டியலைக் கழிவு செய்து தந்த வங்கி அதனைத் தவணைத் தேதியில் வரைபவரிடம் கொடுத்து அதன் மதிப்பைப் பெற்றுக் கொள்கிறது. உண்டியல்கள் அவற்றின் உரிமையாளரால் ‘மேல் எழுத்து’ச் (Endorsement) செய்வதன் மூலம், எளிதே பிறருக்கு மாற்றியளிக்கப்படுகின்றன. இவ்வகையில் உண்டியல் மிகவும் எளிதான கடன் கருவியாகும். கடன் ஈவோரிடமிருந்து உண்டியலை வாங்கிய நிதியாளராகிய வங்கிக்குத் தவணைக் காலத்திற்கு முன்னர்ப் பணம் தேவைப்படுமாயின், இந்த உண்டியலை வங்கி சந்தையில் மறு கழிவு (Rediscount) செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆர்.இ.\n\nபொதுவாக உண்டியல் தவணை உண்டியல், கேட்பு உண்டியல், உள்நாட்டு உண்டியல், அயல்நாட்டு உண்டியல், பணவசதி உண்டியல், ஆவணங்கள் சேர்ந்த உண்டியல், கொணர்பவர் உண்டியல் கட்டளை உண்டியல், பொருள் மயக்கம் தரும் உண்டியல், நிறையுறாத உண்டியல், பெயரளவு உண்டியல், கருவூல உண்டியல், உண்டியல் கோவை, இடங்குறி உண்டியல் எனப் பதினான்கு வகைப்படும். அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதப்படுகின்ற உண்டியல்களும் உண்டு. இவை வணிகர்களின் பழக்க வழக்கங்- களையொட்டி நடைபெறுகின்றன. நாட்டு மாற்று முறை ஆவணச் சட்டதிட்டங்கள் இவற்றைக் கட்டுப்படுத்தா. ஆனால், அதில் ஈடுபடுபவர்கள் பழக்க வழக்கங்களை விடுத்துச் செயலாற்றினால் சட்டமுறைப்படி கட்டுப்படுத்தப்படுபவர்களின் சில உண்டியல்கள் காசோலை போல் தோன்றுகின்றன. ஏற்பு எழுத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. மறுப்பு அறிவிக்கை விடவேண்டிய தேவையுமில்லை. இல்வகை உண்டியல்கள் இருவகைப்படும். (1) காட்டப்பட்டதும் பணம் செலுத்தக்கூடிய தர்சானி (Dharshani) என்பது. (2) குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணம் செலுத்தக்கூடிய முடாட்டி அல்லது மியாடி (Muddat or Miadi) என்பது. மேற்கூறிய வகைகளைச் சார்ந்து பொதுவாகப் பழக்கத்திலிருக்கும் உண்டியல்களாவன: (1) சாசோக்கு (Shabjog), (2) நாம்சோகு (Namjog), (3) தானிசோகு (Dhonijog), (4) சோக்மி (Jokmi) எசு. சோவாபி (S. Jowabi).\n\nசாசோக்கு என்ற உண்டியலில் மேலெழுதுதல் தேலையில்லை. இது குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைக்குச் (Crossed Cheque) சமமாகும். நாம்சோகு என்ற உண்டியல் யாருடைய பெயரில் எழுதப்பட்டுள்ளதோ அவருக்குத்தான் பணம் செலுத்தப்படும். ஆணை பெற்றவருக்குத் தரக் கூடிய முறையான ஓர் ஆணை ஆவணம் என்றும் இதைச் சொல்லுவர். கொணர்பவருக்குச் செலுத்தக்கூடியதுதான் தானிசோகு என்ற உண்டியல். தானி என்றால் உரிமையாளர் அல்லது பெற்றிருப்போர் என்று பொருள்படும். சோக்மி என்பது ஒரு கட்டுப்பாடான உண்டியலாகும். உண்டியல் எழுதப்பட்ட தொகையைச் சரக்குகள் வந்தால்தான் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இவ் உண்டியல் ஏற்றுள்ளது. மாற்றுச் சீட்டையும் காப்பீட்டு ஒப்பந்தத்தையும் சார்ந்த ஓர் ஆவணமாக இது தோன்றுகிறது. பணம் முன்னதாகச் செலுத்துவதற்கும், கப்பல் பாதுகாப்பாக வந்தடைந்த பின் பணத்தைப் பெறுவதற்கும் உள்ள வேறுபாட்டை இது விளக்கும். உண்டியலைப் பெற்றுள்ளோரிடம் சரக்குக்கான பணத்தைத் தரச்சொல்லி வாங்குவோரிடம் விற்போர் கேட்டுக் கொள்வார். சரக்குகளைப் பெற்ற பிறகுதான் உண்டியலில் குறிப்பிடப்பட்ட பணம் வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுடன் வாங்குவோர் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். காப்பீட்டு நிறுவன இழப்பை இது ஏற்கிறது. எனவே, இவ்வகையான உண்டியல் வாங்குவோருக்கும் விற்போருக்கும் நன்மை பயக்கிறது. விற்போருக்குப் பணம் வருகிறது. வாங்குவோருக்குச் சரக்குகள் வந்தாலொழிய பொறுப்பில்லை. சோவாபி என்பது பணம் செலுத்தியவருக்குப் பணம் பெறுபவர் தரும் பதில் கடிதம் போலுள்ள பற்றுச்சீட்டு (Receipt) ஆகும். ஒருவர் மற்றோரிடத்திலுள்ள ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் பெறுபவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை வங்கியரிடம் தருகிறார். வங்கியர் மேலெழுதிப் பெறுபவர் இடத்திலிருந்து அண்மையிலுள்ள வங்கிக்கு அனுப்புகிறார். பெறுபவரும் பெற்றுக்கொண்டு பதில் கடிதம் போன்ற பற்றுச் சீட்டு தருகிறார். இந்தப் பற்றுச் சீட்டு முன் போலவே எழுதுபவரை அடைகிறது. உண்டியல் ஏற்கப்படாதபோது அதை முன்னர் வைத்திருந்தவர்கள் பயன்படுத்த அளிக்கும் பாதுகாப்புக் கடிதத்திற்குச் சிக்கிரிச் சிட்டு (Zikkiri Chit) என்று பெயர். மாற்றுச் சீட்டை மதிப்பதற்கு ஏற்கும் ஒருவரின் நிலையைப் போல் இது தோன்றுகிறது.\n\nபயன்கள்\n\nஉண்டியல் பயனுள்ள பல நோக்கங்களை நிறைவேற்றுகிறது. இக்காலத்தில் அது பணப் பொருளாகவும் பணத்திற்குச் சரியான பதிலியாகவும் (Substitute) திகழ்கிறது. 1) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மதிப்பு வாய்ந்த பொருள்களை (Valuable Goods) மாற்றுவதற்கு இவ்வுண்டியல் பயன்படுகிறது. 2) தொலைதூரத்திலுள்ள இடங்களுக்கு நீர்மைப் பணத்தை (Liquid cash) அனுப்பாமல் கணக்குகளை முடிக்க இது பயன்படுகிறது. 3) கடன் உரிமை மாற்றத்திற்கு இது எளிய உறுதியான வழியை அளிக்கிறது. 4) வழக்குகளில் இது கடனுக்கு எளிய சான்றாகப் பயன்படுகிறது. 5) எதிர்காலத்தில் உள்ள அல்லது பின் தேதியிலுள்ள செலுத்து உண்டியலில் கடனாளர் முன்னதாகவே கொஞ்சம் தள்ளுபடி கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், இவர் வங்கியிடம் விற்றுப்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 6) உண்டியலில் பணம் செலுத்துவதற்கு இடம், காலம் போன்றவை குறிப்பிட்டிருந்தால் கடனைக் குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாகவும் அதிகமாகவும் ஆக்கிடலாம். 7) ஏற்பவர் உண்டியலில் கையெழுத்திடுவதால் அப்பொறுப்பை நிறைவேற்ற அவரால் ஆனதை முயற்சி செய்வார். இல்லாவிட்டால் அதன் விளைவு இன்னல் தரும்.\n\nஎவ்வகை உண்டியலாயினும் அதில் பணம் செலுத்துவதற்கான ஆணை, செலுத்த வேண்டிய தொகை முதலியன குறிப்பாகவும் தெளிவாகவும் பொருள் மயக்கமின்றியும் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள காலவரை முடிந்த பின்னர்ப் பணம் செலுத்தப்பட்டாலும் அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏற்பட்ட பின்னரும் உண்டியலிலுள்ள ஆணை கட்டுப்பாடற்றதாகத்தான் இருக்கும். நிகழ்ச்சி ஏற்படும் காலம் வேண்டுமானால் உறுதி- யாகச் சொல்ல முடியாமலிருக்கலாம். ஆனால், அது நிகழ்வது உறுதியாக இருக்க வேண்டும். மேலும், அப்பணம் எதிர்கால வட்டியுடன் திகழ வேண்டும். வட்டிவீதமும் குறிப்பிடப்பட வேண்டும். இது ஆவணத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது; அதன் உறுதித் தன்மையையும் குறைக்காது. இக்கட்டுப்பாடு கடனுறுதிச் சீட்டுக்கும் பொருந்தும். கே. என். இரா.\n\nதுணை நூல்கள்\n\nRedy, P.N. & Gulshan, S.S., Principles of Business Organisation and Management, Eurasia Publishing House Private Limited, New Delhi, 1978.\n\nKandasamy, P.S., The Essence of Mercantile Law, Sahaya Achagam, Tiruchirappalli, 1971."}}