{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3mpmeesb/", "data": {"id": "3mpmeesb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3mpmeesb/", "kind": "article", "headword": "ஆரீலியா", "romanization": "ārīliyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.054955+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று.", "body_ta": "சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று.\n\nஉலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படுவது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப்பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப்பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பினின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப்பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலையடைகின்றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல் உள்ள நுண் மயிர்களால் நீந்திச்சென்று, ஏதாகிலும் ஓர் அடித்தளத்தில் ஒட்டிக்கொள்கிறது பின்பு நுண்மயிர்கள் விழுந்து விடுகின்றன ; ஒட்டப்படாத நுனியில் வாய் தோன்றுகிறது. பின்னர் நான்கு பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்நிலையில் இப்பிராணிக்கு வெளித் தோலும் உள் தோலும் சீரணக்குழியுமுண்டு. உள்தோல் சீரணச் சுழற்சி வளையுள் நெடுக்காக நான்கு மேடுகள் உடையதாக இருக்கிறது. இம் மேடுகள் அகட்டு மேடுகள் எனப்படும். இவை ஆரிலியா சாதிக்கு உள்ள சிறப்பியல்பு. அடுத்தபடியாக மற்றப் பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இப்போது லார்வாவுக்கு சைபிஸ்டோமா (Scyphist( ma) என்று பெயர். இந்நிலையில் இப் பிராணிக்கு 10 பற்றுறுப்புக்களுண்டு. பின்பு இப்பிராணி குறுக்காகச் சிறு வளையங்களாக உடைந்து தோன்றுகிறது. அப்போது இப்பிராணி சற்றுத் தட்டையான பல கோப்பைகளை அடுக்கி வைத்தது போலிருக்கும். ஆகையால் இந்நிலை ஸ்ட்ரோபிலா (Strobila) அல்லது கிண்ண வடுக்கு நிலை என்பார்கள். பின்னர் ஒவ்வொரு கிண்ணத்தின் ஓரமும் பிரிவுபடுகிறது. ஒவ்வொரு கிண்ணம் போன்ற பாகமும் எட்டுப் பாகங்களாலான குடையும், கைப்பிடியும், கைப்பிடியில் சதுரமான வாயுமுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் இப்பிராணிக்கு எபைரா (Ephyra) என்று பெயர். பின்பு ஒவ்வொரு சிறு எபைராவும் தனியாகப் பிரிந்து சென்று, கவிழ்ந்து நீந்தித் தனி வாழ்க்கை நடத்தி வளர்ந்து பெரிய ஆரீலியாவாக மாறுகின்றது. எஸ். ஆ.]]"}}