{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2rk3ae9u/", "data": {"id": "2rk3ae9u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2rk3ae9u/", "kind": "article", "headword": "இலாகூர்", "romanization": "ilākūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.251555+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாகிசுத்தான் நாட்டுப் பஞ்சாபு மாநிலத்தின் பெருநகரங்களுள் ஒன்று.", "body_ta": "பாகிசுத்தான் நாட்டுப் பஞ்சாபு மாநிலத்தின் பெருநகரங்களுள் ஒன்று. சிந்து ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான இரவி ஆற்றின் இடக்கரையில் இந்தியாவின் எல்லைக்கு அண்மையில் இலாகூர் அமைந்துள்ளது. கராச்சிக்கு அடுத்த நிலையில் பாகிசுத்தானின் மிகப் பெரிய நகரம் இலாகூர். கங்கைச் சமவெளியிலிருந்தும் சிந்து வெளியிலிருந்தும் காசுமீரத்திலிருந்தும் வரும் வழித்தடங்கள் இங்குக் கூடுவதால் இலாகூர் சுறுசுறுப்பான நகராக விளங்குகிறது. தொழில்வளம், வாணிகம், பண்பாடு போன்றவற்றின் மையமாக இந்நகரம் திகழ்கிறது.\n\nஇலாகூர் மிகத் தொன்மையான நகரமாகும். இந்நகரம் கி.பி. 11, 12–ஆம் நூற்றாண்டுகளில் செல்வச் செழிப்பில் திளைத்திருந்தது. பின்னர், கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவை மொகலாயர்கள் ஆண்டபோதும் இலாகூர் பெருமையெற்ற நகரமாக விளங்கிற்று. சிலபோது இந்நகரம் மொகலாயப் பேரரசின் தலைநகர் போன்றும் அமைந்திருந்தது. இது கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சிறப்பிழந்து நலிவுற்றது. ஆனால் கி.பி. 1775–ஆம் ஆண்டிலிருந்து முதன்மையிடமாக மாறியது. ஆங்கிலேயரின் காலத்தில் கி.பி. 1849–இல் அவர்கள் வசமாயிற்று. அப்போது தான் இலாகூர் பஞ்சாபின் தலைநகராயிற்று. இந்தியா–பாகிசுத்தான் பிரிவினைக் காலம்வரை இந்நிலையே நீடித்தது. இவ்வூரில் இரு பெரும் மசூதிகள் உள்ளன. வசீர் கான் மசூதி அவற்றுள் ஒன்று. இது கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாகும். வைசாகி மசூதி இரண்டாவதாகும்; இது மிகப் பெரியது; பரந்தது. இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலாகூருக்குச் சில கி.மீ. தொலைவில் அதன் கிழக்கில் கி.பி. 1637–இல் உருவாக்கப்பட்ட சாலிமார்த் தோட்டங்கள் அமைந்துள்ளன.\n\nபருத்தி ஆடைநெய்தல், உணவுத்தானியத் தயாரிப்பு, எண்ணெய் எடுத்தல், பழங்களைப் புட்டிகளில் அடைத்தல், பொறியியல் பணிபுரிதல், இரசாயன மரச்சாமான்கள், சினிமாப் படம் தயாரித்தல் போன்றவை இலாகூரின் சிறப்பான தொழில்களாகும். தோல்பொருள்கள், பட்டு, பீங்கான், இரும்பு போன்றவையும் இவ்வூரில் தயாராகின்றன. கச்சாப் பருத்தி, எண்ணெய் விதைகள், கோதுமை, சர்க்கரை, அரிசி போன்றவை பெரும் பரப்பில் விளைகின்றன. இலாகூரின் மக்கள்தொகை 13,00,000 ஆகும்."}}