{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2mqwbspx/", "data": {"id": "2mqwbspx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2mqwbspx/", "kind": "article", "headword": "இன்மை அறிவு", "romanization": "iṉmai aṟivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.146869+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இன்மை அறிவு வடமொழியில் ‘அனுபலப்தி’ என வழங்கப்படுகிறது.", "body_ta": "இன்மை அறிவு வடமொழியில் ‘அனுபலப்தி’ என வழங்கப்படுகிறது. இதனை ஆறாம் பிரமாணமாகக் கருதுகின்றனர். பிரமாணம் என்பதற்கு ஏற்புடைய அறிவு அல்லது ஒரு பொருளைப் பற்றிய உண்மையான அறிவு என்பது பொருள். பிரமாணங்களைப் பத்து வகையாகப் பிரித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரமாணம் பற்றிய கருத்தையும் சில தத்துவப் பிரிவுகள் ஏற்றுக் கொள்கின்றன; சில தத்துவப் பிரிவுகள் அப்பிரமாணம் கூறும் அறிவு சரியானதென்று ஏற்றுக் கொள்வதில்லை.\n\nஇங்கும் பத்துப் பிரமாணங்களும் அவற்றின் பொருளும் அப்பிரமாணத்தின் கருத்தை ஏற்றுக் கொண்ட தத்துவப் பிரிவுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இன்மை அறிவு (Non–Cognition) என்பதைக் குமாரிலபட்டர் அறிவு ஆராய்ச்சியியலில் எவ்வாறு விளக்குகிறார் என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாகக் கூறலாம். ‘இங்கே பானை இல்லை’ என்பதில் ‘இன்மை’ பார்க்கப்படுவதன்று. ஆகையினால், காட்சிப் பொருள்களுக்குப் பதிலாக அனுபலப்தியைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, பானை இருக்கும்போது அதனைக் காண்பதைப் போல, அது இல்லை என்பதைப் பார்த்தறிவதேயாதலின், அதனைக் காட்சியளவையில் வைத்து ஏற்புடைய அறிவாக ஏற்றுக்கொள்ளலாம் என்று இந்தியத் தத்துவ அறிவு ஆராய்ச்சியியலில் குறிப்பிடுகின்றார்."}}