{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2mfdbk8e/", "data": {"id": "2mfdbk8e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2mfdbk8e/", "kind": "article", "headword": "நுண்ணோக்கி", "romanization": "nuṇṇōkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.954763+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கண்களால் தெளிவாகக் கண்டறிய முடியாத சிறிய பொருள்களை உருப் பெருக்கமடைந்த பெரிய பிம்பங்களாகக் காணப் பயன்படும் ஒளியியல் கருவியே நுண்ணோக்கி (microscope) எனப் படும்.", "body_ta": "கண்களால் தெளிவாகக் கண்டறிய முடியாத சிறிய பொருள்களை உருப் பெருக்கமடைந்த பெரிய பிம்பங்களாகக் காணப் பயன்படும் ஒளியியல் கருவியே நுண்ணோக்கி (microscope) எனப் படும். பிம்பங்களைப் படமெடுத்தோ, ஒளி மின் கலன்கள் மூலம் உணர்வதன் மூலமோ, தேவைான விவரங்களைப் பெற இயலும் 17ஆம் நூற்றாண்டில் சாதாரணக் குவி வில்லைகளே உருப் பெருக்கிகளாகப் பயன் பட்டன. இதுவே நுண்ணோக்கி எனப் படும். கி. பி. 1648இல் ஹுக் என்னும் அறிவியலறிஞர் விலங்குகளிலும், காய்கறிகளிலுமுள்ள தசைகளில் செல்கள் உள்ளமையை ஆராய நுண்ணோக்கிகளைப் பயன் படுத்தினார்.\n\nஎளிய நுண்ணோக்கி. மையத்தில் தடித்தும், ஓரத்தில் மெல்லியதாகவும் உள்ள ஒளி புகு பொருள்களாலான வட்ட வடிவத் துண்டுகள், எளிய நுண்ணோக்கி அல்லது கை வில்லை எனப் படும். சிறிய பொருள்களைப் பெரிதாகக் காட்டும் உருப் பெருக்கிகள், தற்காலத்தில் பல வகையாக உள்ளன.\n\nபொதுவாக இரட்டைக் குவி வில்லை, சம தளக் குவி வில்லை. வில்லைத் தொகுதிகள் ஆகியன பயன் படுகின்றன. இவ்வில்லைகள் சாதாரணக் கைப்பிடிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன அல்லது எந்திரக் குவியல் அமைப்புகளாகவும், தளம், தாங்கிகளுடனும், ஆடியுடனும் அமைந்த உறுப்புக் காட்டும் நுண்ணோக்கிகளாகவும் உள்ளன.\n\nகூட்டு நுண்ணோக்கி. கூட்டு நுண்ணோக்கியில் இரு வில்லைகள் அல்லது வில்லைத் தொகுதிகள் பயன் படுகின்றன. ஒரு வில்லைத் தொகுதி, பொருளின் பெரிய பிம்பத்தினைத் தரும். இப்பிம்பம், இரண்டாம் வில்லையால் உருப் பெருக்கப் படும். மொத்த உருப் பெருக்கம், இரு தனித் தனி வில்லைத் தொகுதிகளின் உருப் பெருக்க மதிப்புகளின் பெருக்கற் பலனேயாகும். கொள்கையளவில், பல எளிய நுண்ணோக்கிகளை ஒரே வரிசையாக அமைத்து, உருப் பெருக்கம் ஏற்படச் செய்ய முடியுமானால், நடைமுறையில் பிறழ்ச்சி, எதிரொளிப்பு வில்லைக் குறைபாடு இவற்றின் காரணமாகக் கூட்டு நுண்ணோக்கிகளில் இரு வில்லைத் தொகுதிகள் மட்டுமே பயன் படுத்தப் படும்.\n\nமாதிரிக் கூட்டு நுண்ணோக்கி படத்தில் காட்டப் பட்டுள்ளது. இதில் ஒரு தாங்கியையும், பொருள்களையும் வைப்பதற்காகத் தளம், நகரும் வண்ணம் அமைந்த உடற்குழாய் முதலியன உண்டு. இக்குழாயில் இரு வில்லைத் தொகுதிகள் உள்ளன. பொருளுக்கு அருகிலமையும் வில்லைத் தொகுதி கண்ணருகு கருவி எனவும் வழங்கப் படுகின்றது. தளத்தினடியில் அமைக்கப்பட்டுள்ள ஆடியின் மூலம் கருவியினுள் ஒளியை எதிரொளிக்கச் செய்யலாம். மிக நீளமுள்ள பொருளருகு வில்லைகள் பயன் படும் போது, பொருளின் மீது ஒளியூட்டத்தை அதிகரிக்கக் குவிப்பான் பயன் படும். இரு முறை உருப் பெருக்கமடைந்த பிம்பங்களின் பகுப்பாய்வுக்குத் தேவைக்கேற்றவாறு, ஒளியியல் மற்றும் எந்திர அமைப்புகள் பெரிதும் துணையாகின்றன.\n\nஉருப் பெருக்கத் திறன். கூட்டு நுண்ணோக்கியின் உருப் பெருக்கத் திறன் எனப் படுவது, பொருளின் இறுதிப் பிம்பம் கண்ணில் தாங்கும் கோணத்திற்கும் தெளிவான பார்வைக்குரிய அண்மைத் தொலைவிலுள்ள அப்பொருள் கண்ணில் தாங்கும் கோணத்திற்குமுள்ள விகிதமேயாகும். கண், கண்ணருகு கருவிக்கு மிக அருகில் உள்ளமையால், பிம்பம் கண்ணில் தாங்கும் கோணம் என்பது கண்ணருகு கருவியில், அது தாங்கும் கோணத்தைக் குறிக்கிறது. கூட்டு நுண்ணோக்கியின் உருப் பெருக்கத் திறன் m= v/u (1+d/f) என்னும் சமன்பாட்டால் கணக்கிடப் படுகிறது. u, v என்பன முறையே வில்லையினின்று பொருள் மற்றும் பிம்பத் தொலைவுகளைக் குறிப்பிடுகின்றன <!---- search m= v/u (1+d/f) in google ---->. f வில்லையின் குவியத் தொலைவாகும். ‘d’ தெளிவான பார்வைக்குரிய அண்மை தொலைவைக் குறிக்கும்.\n\nதற்காலத்தில், எலெக்ட்ரான்கள் எக்ஸ் கதிர்கள், ஒலி மற்றும் பல கதிர் வீச்சு அமைப்புகள் ஆகியன பிம்பத்தை ஏற்படுத்தப் பயன் படுகின்றன. இப்பிம்பங்கள், நடைமுறையில் கட்புலனாகாதவையாதலின், ஒளிப் படலம் தொலைக்காட்சி மற்றும் தனிக் கதிர் வாங்கிகளைப் பயன் படுத்திப் பிம்பங்களைப் பதிவு செய்து ஆராயலாம். கதிர் வீச்சுகளுக்கேற்றவாறு, இவை எலெக்ட்ரான் எக்ஸ் கதிர், அயனி மற்றும் மீயொலி நுண்ணோக்கி என வழங்கப் படுகின்றன. —சிவ. சேதுராமன்"}}