{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/25emn5pw/", "data": {"id": "25emn5pw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25emn5pw/", "kind": "article", "headword": "உட்ரெக்ட்டு", "romanization": "uṭrekṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.557965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உட்ரெக்ட்டு என்பது நெதர்லாந்து நாட்டிலுள்ளதொரு நகரம்.", "body_ta": "உட்ரெக்ட்டு என்பது நெதர்லாந்து நாட்டிலுள்ளதொரு நகரம். இந்த நகரம் இரைன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆம்சுடர்டாம் நகருக்குத் தென்கிழக்கில் 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரைத் தூபிகளும் பாலங்களும் மிகுதியாக உள்ள நகரம் (City of Spires and Bridges) என்பர். இங்குள்ள எண்ணற்ற திருச்சபைகளின் தூபிகளும், இந்நகரத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களுமே இப்பெயருக்குக் காரணமாகும். உட்ரெக்ட்டுச் (Utrecht) சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒருவகை மரம் மலிபான் (Maliebaan) எனப்படும். இம்மரமறுக்கும் ஆலைகள், இயந்திரக்கூடங்கள், சாராய உற்பத்திச் சாலைகள், சமுக்காள வேலை மையங்கள், வெல்வெட்டுத் துணி ஆலைகள், பஞ்சாலைகள், நார்மடி ஆலைகள், இசைக்கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் ஆகியவை இங்கு மிகுதியாகவுள்ளன.\n\nஉட்ரெக்ட்டு நகரம்\n\nஇத்தொன்மையான நகரத்தை மையமாகக் கொண்டு பல சுவையான நிகழ்ச்சிகளைக் கூறுவர். நெதர்லாந்து நாட்டின் வடக்கிலுள்ள ஏழு மறுப்புரையாளர் (Protestants) மாநிலங்கள் உட்ரெக்ட்டில் தான் கி.பி. 1579–ஆம் ஆண்டு ஒன்றாய் இணைந்தன. இவ்விணைப்பின் விளைவாய் உருவாக்கப்பட்டதே நெதர்லாந்து நாடாகும். இசுபானிய வாரிசுரிமைப் போர் முடிந்தவுடன் உடன்படிக்கையொன்று உட்ரெக்ட்டு நாரில்தான் கி.பி. 1713–ஆம் ஆண்டில் கையெழுத்தாயிற்று. இந்த உடன்படிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டு அமைதி உடன்படிக்கையாகும். இதன் தொடர்பான மாநாடு கி.பி. 1712–ஆம் ஆண்டிலேயே உட்ரெக்ட்டில் தொடங்கியது. அப்போது இசுபானிய வாரிசுரிமைப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. அன்றைய முக்கிய ஐரோப்பிய நாடுகளின் பேராளர்கள் இம்மாநாட்டில் திரண்டிருந்தனர். அவர்கள் உட்ரெக்ட்டு உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு கி.பி. 1713–இல் கையெழுத்திட்டனர்.\n\nஉட்ரெக்ட்டு உடன்படிக்கை ஐரோப்பாவில் பல மாறுதல்களைச் செய்தது. இது நாடுகளிடையே சக்தி சமன்நிலையை நிலைநாட்ட முயன்றது. இங்கிலாந்தின் குடியேற்றம், வணிகவியல் சக்தி ஆகியவற்றைப் பெருக்க வழிவகை செய்தது. பிரெஞ்சுக்காரரான ஆஞ்சு பிரபுவை இசுபெயின் அரசராக இவ்வுடன்படிக்கை ஏற்றுக்கொண்டது. எனினும், பிரான்சையும் இசுபெயினையும் இணைத்து ஓரரசர் ஆட்சி செய்தலைப் பிரான்சு ஏற்க மறுத்தது. இசுபெயினிடமிருந்து சிப்ரால்ட்டரையும் (Gibraltar) மினார்க்காவை (Minorca)யும் இங்கிலாந்து பெற்றது. இசுபானியக் குடியேற்றப் பகுதிகளில் ஆப்பிரிக்க அடிமைகளைக் கொணர்ந்து வழங்கும் ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாட்டிடமே ஒப்படைத்தது. சவாய்க் கோமகன் இசுபானியத் தீவான சிசிலியைக் (Sicily) கைப்பற்றிக் கொண்டார். மிலான் (Milan), நேபில்சு (Naples), சார்டீனியா (Sardinia) கத்தோலிக்க நெதர்லாந்து (Catholic Netherland) போன்ற பகுதிகளை இசுபெயினிடமிருந்து ஆசுத்திரியா பெற்றது. பிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தன் எல்லைப்புற நகரங்களைக் காத்துக்கொள்ளப் படைவீரர்கள் படைக் கருவிகள் பெற நெதர்லாந்து உரிமைபெற்றது.\n\nஅமெரிக்காவிலுள்ள பல இடங்கள் இவ்வுடன்படிக்கையின் பயனாக இங்கிலாந்துக்குக் கிடைத்தன. நோவாசுகோசியா (Novascotia), நியூபவுண்டுலாந்து (Newfoundland), அட்சன் விரிகுடாப் பகுதி (Hudson Bay Territory) போன்ற கனடாவிலிருந்த பகுதிகளை இங்கிலாந்து பிரான்சினிடமிருந்து பெற்றது. எனினும் குவிபெக்கு (Quebec) நகரத்தைப் பிரான்சே வைத்துக் கொண்டது. உட்ரெக்ட்டின் மக்கள் தொகை 2,34,543 (1982)."}}