{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/23jn6zw5/", "data": {"id": "23jn6zw5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/23jn6zw5/", "kind": "article", "headword": "அசுமீர்", "romanization": "acumīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.202791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள நகரம்.", "body_ta": "இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள நகரம். தில்லிக்குத் தென்மேற்கில் 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் ஒரு இருப்புப்பாதைச் சந்திப்பு. வேளாண்மைப் பகுதியின் மையமான இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்ற சந்தையினையுடையது.\n\nஇராசபுத்திர மரபுகளில் ஒன்றான செளகன் மரபு அரசர்களின் தலைநகர் அசுமீர் (Ajmir). தில்லியில் அடிமை வமிசத்தை நிலை நாட்டிய குதுப்புதீன் அய்பெக்கு என்பார் கட்டிய மசூதியின் அழிவுச் சின்னத்தை இன்றும் இங்குக் காணலாம். 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட முகலாயப் பேரரசர்களின் விருப்பத்திற்குகந்த தலைமையிடமாக அசுமீர் கருதப்பெற்றது. இங்குப் பேரரசர் அக்பர் கட்டிய அரண்மனை இன்று அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. பேரரசர் சாசகான் காலத்தில் கட்டப்பெற்ற பளிங்கு மண்டபங்களை இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இங்கு காசா நசுமுத்தீன் சிசுத்தி (Khaja Najmuddin Chisthi) என்ற ஒரு இசுலாமிய முனிவரின் கல்லறை இருப்பதால், இது இசுலாமியருக்கு ஒரு புனிதத் தலமாகவும் இருக்கிறது.\n\nகி.பி. 1616–ஆம் ஆண்டில் இந்நகரில்தான் சகாங்கீர் கிழக்கிந்திய வணிகக்குழுவின் தூதரான சர்தாமசு ரோ (Sir Thomas Roe) என்பாரை முகலாய அரண்மனையில் வரவேற்றார். இந்நகரம் ஆங்கில ஆட்சியின்போது அசுமீர்–மீர்வாரா என்ற மாநிலத்தின் தலைநகராக இருந்தது. 1950-க்குப் பின்னர் இது அசுமீர் மாநிலமாயிற்று. இது, 1956–இல் இராசசுத்தான் மாநிலத்தில் இணைக்கப்பெற்றது. மக்கள் தொகை 3,74,350 (1981)."}}