{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zdva2h6g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zdva2h6g/", "kind": "article", "headword": "நுரையீரல் மீன்", "romanization": "nuraiyīral mīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.629564+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குளிர் குருதி விலங்கானமீன், நீரில் வாழும் தாடையுடைய முதுகெலும்பியாகும்.", "body_ta": "குளிர் குருதி விலங்கானமீன், நீரில் வாழும் தாடையுடைய முதுகெலும்பியாகும். இதற்கேயுரிய சிறப்பு உறுப்பான துடுப்பு (fin) நீரில் நீந்துவதற்கு உதவுகிறது. மேலும், தடையின்றி நீரில் நீந்திச் செல்ல வசதியாக, இதன் உடலமைப்பு கதிர் வடிவமாக உள்ளது. உடலில் செதில்கள் காணப் படுகின்றன.\n\nபொதுவாக மீன், குருத்தெலும்பு மீன் (Cartilaginous fishes), எலும்பு மீன் (bony fishes) என இரு வகைப் படும். மீன்கள் அனைத்துமே சுவாசித்தலின் போது, நீரிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றன. இதற்கு ஏற்றாற் போல், செவுள்கள் (gills) அமைந்துள்ளன. ஆனால், எலும்பு மீன்களின் சில வகைகளில் துணைச் சுவாச உறுப்பாக நுரையீரல்கள் காணப் படுகின்றன. இவற்றின் உதவியால், இவ்வகை மீன், நீர் வற்றிய காலங்களில், காற்றிலுள்ள ஆக்சிஜனைச் சுவாசித்தலின் போது எடுத்துக் கொள்கிறது.\n\nஇவ்வாறு நுரையீரல் வழியே சுவாசிப்பதால், இதை நுரையீரல் மீன் (lung fish) என்பர். இரு வாழ்வி உயிரிகளுக்கு, (amphibians) இது நெருங்கிய உறவுடையது என்றும் கூறுவர்.\n\nநுரையீரல் மீன், எலும்பு மீன்களில் மூக்குத் துளையுடைய மீன்களின் வகையைச் சார்ந்தது. நுரையீரல் சுவாசத்திற்கு (Lung breathing) ஏற்றவாறு, இதற்கு உள் மூக்குத் துளைகள் உள்ளன. இவ்வகை மீன்களிலிருந்தே நீர், நில வாழ்வன தோன்றியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. உள் மூக்குத் துளையுடைய மீன்களின் வகையைச் சார்ந்த டிப்னாய் வரிசை மீன்களே உண்மையான நுரையீரல் மீன்களாகும். நன்னீரில் வாழும் இம்மீன்கள் ஆறு வகைகள் அடங்கிய சிறு குழுவாக விளங்குகின்றன. தற்போது மூன்று பொது இனங்களே உள்ளன.\n\nஎபிசெரட்டோடஸ் (Epiceratodus) என்னும் மீன் ஆஸ்திரேலியா நாட்டின் குளங்களிலும், ஆறுகளிலும் வாழ்கிறது. புரோட்டாப்டீரஸ் (Protopterus) என்னும் மீன் ஆப்பிரிக்காவில், ஆறு குளங்களிலுள்ள சேற்றில் வாழ்கிறது. லெபி டோசைரஸ் (Lepi dosiren) தென் ஆப்பிரிக்காவின் சேற்று நிலங்களில் வாழ்கிறது. இவை யாவும் இரு விதங்களில் சுவாசிப்பதால், செவுள்களையும், நுரை யீரல்களையும் பெற்றுள்ளன. டிவோனியன் காலத்தில், இவை மிகுந்த எண்ணிக்கையில், உலகத்தின் பெரும் பகுதிகளிலும் பரந்து காணப் பட்டன. ஆனால், இப்போது உலகில் ஆங்காங்கே காணப் படுகின்றன. வறட்சிக் காலங்களில் நீர் தேங்கி விடுவதால், அதில் உள்ள தாவர வகைகள் அழுகி, நீர் மாசடைகிறது. இந்நிலையில், நீரில் உயிர்க் காற்று குறைந்து விடுவதால், இம்மீன், நீரின் மேற் பரப்பிற்கு வந்து காற்றைச் சுவாசிக்கும். இது மிகவும் மந்தமான பழக்க வழக்கங்களையுடையது. 1.5 மீ. நீளம் வரை வளரும், இது கணுக்காலி, புழு, நத்தை போன்ற சிறிய விலங்குகளை உட்கொண்டு வாழ்கிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து, பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> நுரையீரல் மீனின் உடல் வட்டமான செதில்களால் (Cycloid scales) மூடப் பட்டிருக்கும். வால் துடுப்பு (tail fin) இரு சம பாதிகளையுடைய (diphycercal) வகையைச் சேர்ந்தது. முதுகு நாண் (Notochord) தலையிலிருந்து வால் வரை தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இது முள்ளெலும்புகளால் பிரிக்கப் படவில்லை. மண்டை வன் கூட்டின் (Skull) மேல் பகுதியில், சில எலும்புத் தகடுகளே உள்ளன. தாடை, நேர்முக இணைப்பு முறையில் கபாலத்திலிருந்து தொங்க விடப் பட்டுள்ளது. பற்கள் ஒன்று சேர்ந்து, பெரிய பற் தட்டுகளாக அமைந்துள்ளன. குடலின் நன்கு வளர்ச்சியுற்ற சுருள் தடுக்கிதழ் ஒன்று உள்ளது. உணவுக் குழல், இரைப்பை, குடல் ஆகியவை குற்றிழைகளைப் (Cilia) பெற்றிருக்கின்றன.\n\nநுரையீரல் மீனுக்கு, நான்கு இரட்டைச் செவுள்கள் உள்ளன. இவை இரு வரிசைச் செவுள் இழைகளைக் கொண்டு, முதல் நான்கு செவுள் வளைவுகளால் தாங்கப் பட்டுள்ளன. செவுள் பிளவுகள், செவுள் முடியால் மூடப் பட்டுள்ளன. நீர்ச் சுழலில், ஏனைய மீன்களில் சுவாசம் நடை பெறுவதைப் போல், இதிலும் செவுள்களால் சுவாசம் நடை பெறும்.\n\nநுரையீரல், உணவுப் பாதையின் முதுகுப் பக்கத்தில் காணப் படும் ஒற்றைப் பையாகும். இது உணவுக் குழலில் வயிற்றுப் பக்கத்தில் ஒரு புற வளர்ச்சியாகத் தோன்றி, பிறகு, அதன் வலப் புறமாகச் சுற்றிக் கொண்டு, மேல் நோக்கிச் சென்று, ஒரு பையாக அகன்றிருக்கிறது. இதன் உட்சுவர், மடிப்புகளாகவும், குருதிக் குழாய்களைப் பெற்றுமிருக்கும். இது ஓர் இரட்டை நுரையீரல் தமனிகள் மூலம், குருதியினால் பெறுகிறது. இதிலிருந்து, இரு நுரையீரல் சிரைகளால், குருதி எடுத்துச் செல்லப்படுகிறது.\n\nநீர் அற்ற காலங்களில், காற்றைச் சுவாசிக்கும் போது, காற்று புற மூக்குத் துளைகள் வழியாக நுரையீரலை அடைகிறது. நுரையீரலில், இக்காற்றுக்கும், நுரையீரல் தமனியால் கொண்டு வரப் பட்ட குருதிக்குமிடையே வளிமப் பரிமாற்றம் உண்டாகிறது. அடுத்து, நுரையீரல் சுருங்கும் போது, அதனுள்ளிருக்கும் தூய்மையற்ற காற்று வெளியேற்றப் படுகிறது.\n\nஇதயத்தின் கூம்புத் தமனியின் அறையில், பல வரிசை தடுக்கிதழ்கள் உள்ளன. மீன்களின் ஏனைய இனங்களில் காணப்படாத, நீர், நில வாழ்வனவற்றில் காணப் படும் அமைப்புகள், டிப்னாய் மீன்களில் காணப் படுகின்றன. வளர்ச்சியின் மிக முற்பட்ட படி நிலையில் உள்ள சில பண்புகளும் ஒருங்கே காணப் படுகின்றன. குடலிலுள்ள சுருள் தடுக்கிதழ், பொதுக் கழிவறை, கூம்புத் தமனியில் காணப் படும் தடுக்கிதழ் வரிசைகள், முள்ளெலும்புகளாகப் பிரிக்கப் படாத முதுகுத் தண்டு ஆகியவை முற்பட்ட நிலையிலுள்ள கூறுகளின் சிலவாகும். பற்களின் அமைப்பிலும், நேர்முக இணைப்பு வகை மண்டை வன் கூட்டைக் கொண்டிருப்பதிலும், இவை ஹோலோ செஃபாலியை ஒத்திருக்கின்றன. நுரையீரல், உள் மூக்குத் துளைகள், நுரையீரல் தமனிகள், சிரைகள், முன் வயிற்றுச் சிரை. கீழ்ப் பெருஞ் சிரை, இரட்டைப் பெரு மூளை, அரைக் கோளப் பகுதி ஆகியவை தற்கால மீன்களைப் போலல்லாமல், நீர், நில வாழ்வனவற்றில் காணப் படும் சிறப்புக் கூறுகளாகும். முன் தாடையெலும்பு, மேல் தாடையெலும்பு இவை இரண்டும் இல்லாமை, மண்டை வன் கூட்டின் முகடாக அமைந்துள்ளன. மைய சவ்வெலும்புகளை (median membrane bones) கொண்டிருத்தல், மேற்புறம் அமைந்துள்ள நுரையீரல் ஆகிய சிறப்புப் பண்புகள் வாழும் குழலால் வந்துள்ள மாற்றங்களாகும்.\n\nநுரையீரல் மீன்களில் இடுப்பு வளையம் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு குருத்தெலும்புத் துண்டாகும். தோள் துடுப்பும், இடுப்புத் துடுப்பும், முறையே அவற்றின் எலும்பு வளையங்களால் தாங்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு துடுப்பும், குருத்தெலும்புக் கோல்களால் ஆன ஒரு நடுவச்சுடன் காணப் படும். இதன் இரு பக்கங்களிலும், பல குருத்தெலும்பாரைகள் உள்ளன. இவ்வாரைகள், பல வன்மையான ஆரைகளைத் தாங்கிக் (Horny rays) கொண்டிருக்கின்றன. இவையே துடுப்பின் விளிம்பைப் பிடித்துக் கொண்டுள்ளன. இத்தகைய துடுப்பு, தொடக்கத் துடுப்பு (Archipterygium) எனப் படும்.\n\nகழிவு நீக்க இனப் பெருக்க உறுப்பு குருத்தெலும்பு மீன்களில் உள்ளதை ஒத்திருக்கும். ஓர் இரட்டைச் சிறுநீரகங்கள் உடற்குழியின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளன. சிறுநீர்க் குழாய்கள், பொதுக் கழிவறையினுள் திறக்கின்றன. ஆண் மீனின் விந்தகங்கள், விந்து நுண் குழல்கள் மூலம் சிறுநீரகங்களுடன் இணைக்கப் படுகின்றன. இதனால், சிறுநீர்க் குழாய்களே, விந்து நாளங்களாகவும் செயல் படுகின்றன. பெண் மீனில், ஓர் இரட்டைக் கருப் பைகள் உண்டு. இரண்டு கரு நாளங்கள் முன் முனையில், வயிற்றறையினுள்ளும் (abdominal cavity) மறு முனையில், பொதுக் கழிவறையினுள்ளும் திறக்கின்றன.\n\nடிப்னாய் மீன்களிலிருந்து, நீர் நிலை வாழ்விகள் நேரடியாகத் தோன்றியிருக்கவில்லை. ஆனால், இவையிரண்டும் டிவோனியன் காலத்தில் வாழ்ந்த ஆஸ்டியோலெப்பிட்டிகளிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமெனபதற்குத் தக்க சான்றுகள் உள்ளன. ஆஸ்டியோலெப்பிட்டின் பண்புகளான, உள் மூக்குத் துளை, இரட்டைத் தடுப்புகளின் தன்மை, கீழ்ப் பகுதியில் சதைப் பற்றுள்ள துடுப்பு ஆகியவை நீர் நிலை வாழ்வனவற்றிலும், டிப்னாய் மீன்களிலும் ஒத்திருக்கின்றன. டிப்னாய் மீன்கள் தேங்கி நிற்கும் நீரில், குளங்களில் வாழ்வதற்கேற்பச் சிறப்புறுப்புகளைப் பெற்றுள்ளன. எனவே, ரோமர் என்பாரின் கூற்றுப்படி, டிப்னாய் மீன்கள் நீர், நில வாழ்வனவற்றிற்குத் தொடர்புடையன.\n\nடிப்னாய் மீன்களின் பாகுபாடு. டிப்னாய் மீன்களின் வரிசை, இரண்டு துணை வரிசைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. துணை வரிசை 1. ஒற்றை நுரையீரலுடையன. (Monopneumona): இத்துணை வரிசையில் அடங்கியுள்ள மீன்களில் ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே காணப் படும். தொடக்கத் துடுப்பின் ஆரைகள், நன்கு வளர்ச்சியுற்றிருக்கின்றன. எபிசெரட்டோடஸ் (Epiceratodus) என்பது இதில் இடங்கியுள்ள மீனாகும். ஏறத் தாழ 15 மீ. நீளமுடைய இது தேங்கி நிற்கும் நீரில் வாழும். மிகவும் மந்த நிலையிலே காணப் படும். கணுக்காலி, புழு மெல்லுடலி போன்றவற்றை உட்கொள்ளும். வறட்சிக் காலங்களில், இம்மீன் வாழும் நீர் நிலைகள் வற்றி விட்டால், இது மேல் மட்டத்திலுள்ள காற்றை உட்கொண்டு, நுரையீரல் முறை சுவாசத்தைக் கடைப் பிடிக்கிறது.\n\nதுணை வரிசை 2. இரு நுரையீல்களுடையன. (Dipneumona): இக்குழுவில் அடங்கும் மீன்கள், இரண்டு நுரையீரல்களைக் கொண்டிருக்கும். தொடக்கத் துடுப்பின் பக்க ஆரைகள் எச்ச நிலையிலிருக்கும். எ–டு: புரோட்டோப்டீரஸ். இது 2. மீ. நீளம் வரை வளரும். பெருமளவில் உணவை உட்கொள்ளும். முரட்டுத் தன்மை வாய்ந்த இது, தவளை, பூச்சி வகைக் கணுக்காலி, மெல்லுடலி போன்றவற்றை உட்கொள்ளும். வறட்சிக் காலங்களில், இது ஈர மண்ணில் 50 செ.மீ. ஆரத்திற்கு வளை தோண்டும். வளையின் இறுதிப் பகுதி குடுவை போன்று அகன்றிருக்கும். இப்பகுதியின் உட்பரப்பில் மீனின் தோல் சுரப்பிகளின் சுரப்பு உள்ளுறை போல் பரவியிருக்கும். இதனுள் மீன் சுருண்டு கோடை உறக்கத்தில் (Summer sleep) ஆழ்ந்து விடும். லெபிடோசைரின் என்பது பழக்க வழக்கங்களில் புரோட்டோப்டீரசை ஒத்திருக்கும். —கோ.இலட்சுமணன் —ஆ.ராமசாமி"}}