{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yw6ed98q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yw6ed98q/", "kind": "article", "headword": "இலக்குவனார், சி", "romanization": "ilakkuvaṉār, ci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.738542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் வாய்மேடு என்னும் சிற்றூரில் 17–11–1910–இல் பிறந்தார்.", "body_ta": "இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் வாய்மேடு என்னும் சிற்றூரில் 17–11–1910–இல் பிறந்தார். மு. சிங்கார வேலுத் தேவர், அ. இரத்தினம்மாள் ஆகிய பெற்றோர்க்கு இலக்குவனார். மூன்றாம் மகனாவார்.\n\nஇவர் 1936–ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். சாமி சிதம்பரனார், கரத்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, சுப்பிரமணிய சாத்திரியார் முதலிய தமிழ் அறிஞரிடம் பாடம் கேட்டார். இவர் 1936 முதல் 1943 வரை பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், 1945 முதல் 1965 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி, விருதை செந்திற்குமாரநாடார் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார்.\n\nஇலக்குவனார், சி.\n\nதமிழ்நாட்டில் 1965–இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்தமையால் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் இரண்டாண்டுக்காலம் அரசியல் ஈடுபாடும் மொழிக்காப்பு முனைப்பும் கொண்டு எழுதியும் பேசியும் வந்தார். மாத இதழாகத் தாம் நடத்தி வந்த ‘குறள்நெறி’ ஏட்டை ‘நாளிதழ்’ நிலைக்கு உயர்த்தினார்.\n\nஅறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஓராண்டு (1967–68) அப்பதவியில் இருந்தார். பின்னர், ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இரண்டாண்டுகள் (1968–70) பணிபுரிந்தார்.\n\nஇலக்குவனார் தம் பணிக்காலத்தில் ஆசிரியப் பணியோடு அமையாது பல்கலைக்கழகக் கல்வி அமைப்புகளிலும் இடம்பெற்று விளங்கினார். சென்னை, அண்ணாமலை, உசுமானியா ஆகிய பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவின் உறுப்பினராகிப் பணிபுரிந்துள்ளார். சென்னை, உசுமானியா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் விளங்கினார். தமிழ்நாடு பல்- கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழகப் புலவர் குழுவின் செயலராகவும் தொண்டாற்றியுள்ளார்.\n\nஇலக்குவனார் தம் வாழ்க்கைப் போரின் நடுவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்த் தொண்டையே தம் வாழ்நாட் பணியாக ஏற்று வாழ்ந்த பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் அவர்கள் 3–9–1973–இல் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். வீ.மு."}}