{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xxttah9k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xxttah9k/", "kind": "article", "headword": "சூல் கால நச்சுத் தன்மை", "romanization": "cūl kāla naccut taṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.381325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சூலியிடம் தோன்றும் தொடர்ச்சியான நோயூக்கு நிலைகளே சூல் கால நச்சு நிலையாகும்.", "body_ta": "சூலியிடம் தோன்றும் தொடர்ச்சியான நோயூக்கு நிலைகளே சூல் கால நச்சு நிலையாகும். பொதுவாக, சூல் நிலை முடிந்தவுடன், இக்கோளாறுகள் மறைந்து விடுகின்றன. குழந்தை பிறந்த பின் அல்லது கருச் சிதைவுக்குப் பின் நச்சு விளைவின் அனைத்து அறிகுறிகளும் மறைந்து விடுகின்றன; இக்கோளாறுகள் தீவிரமாக நீண்ட காலம் நீடித்தால், பின் விளைவுகளும் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.\n\nபல்வேறு நச்சுப் பொருள்கள் பெண்ணுடலின் மீது வினை புரிவதே இந்நச்சு நிலைக்குக் காரணம். இத்தகைய நச்சுப் பொருள்கள் உண்டாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவை உடலிலேயே உருவாகின்றன. எனச் சிலர் கருதினர். ஆக்கச் சிதை மாற்றக் கோளாறால், பெண்ணாலேயே நச்சுப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், நச்சுப் பொருள்கள், கருக் குடையிலிருந்து உருவாகின்றன எனச் சிலர் கருதினர். இதன் படி, சீர் குலைந்த கருக் குடையின் பணிகளால், நச்சுப் பொருள்கள் தோன்றின அல்லது நிறை சூலியின் பகுப்படைந்த கோரியான் பொருள்கள் குருதி ஓட்டத்திலும் செல்வதால், நச்சுப் பொருள்கள் உண்டாயின எனலாம், குழந்தையின் ஆக்கச் சிதை மாற்றம் கழிவுப் பொருள்கள் தாயின் உடலில் நடு நிலைப்படுத்தப்படா விட்டால், அல்லது உரிய காலத்தில் வெளியேற்றப்படா விட்டால், (தேக்க நச்சு நிலை) தேக்கமடைந்து சூலில் நச்சு நிலையைத் தோற்றுவிக்கின்றன என மற்றொரு கோட்பாடு கூறுகிறது.\n\nஇத்தகைய நச்சுப் பொருள்களை நீக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. எனவே, நச்சு நிலைக்குக் காரணம், நச்சுப் பொருள்களே என்னும் கோட்பாட்டுக்கு அடிப்படை இல்லை. சூல் நச்சு நிலைக்கு, தடுப்பாற்றியல் கோட்பாடு குறிப்பிடத் தக்கது. இக்கோட்பாட்டின் படி, அயல் புரதங்களுக்குப் பெண்ணின் கூருணர்ச்சி விளைவாக, நோய் நிலை தோன்றுகிறது. இந்த அயற் பொருள்கள் கருவிலிருந்தும், கருக் குடையிலிருந்தும் தோன்றிச் சூலிக்குச் செல்கின்றன.\n\nமற்றொரு கோட்பாட்டின்படி, நாளமில் சுரப்பிகளின் சீர் குலைந்த பணிகளால் நச்சு நிலையில் தோன்றுகிறது. ஆனால், பேறு கால நச்சு நிலையில் தோன்றும் ஹார்மோன் சம நிலை மாற்றங்களே காரணம் என்று கொள்வதை விட இதன் விளைவுகள் எனக் கொள்ளலாம்.\n\nஇந்நிலை பெண்ணின் நரம்பு மண்டலத்தின் பணி சார்ந்த பண்புகளைப் பொறுத்துள்ளது. சூலால் பெண்ணின் உடலில், மிகைச் சுமை ஏற்றப்படுவதால், ஆக்கச் சிதை மாற்றத்தில் மாற்றங்களை உண்டாக்க அனைத்து உறுப்புகள், மண்டலங்கள் ஆகியவற்றின் பணிகள் மாற்றப்படுகின்றன. இவை உடலியங்கியல் சார்ந்தவையாகவோ, தக அமைவு மாற்றங்களாகவோ இருக்கலாம். இவை, சூலில் இயல்பான போக்குக்கும், கருவின் வளர்ச்சிக்கும் ஏற்ப அமைகின்றன. இம்மாற்றங்கள் தோன்றுவதும், வளர்ச்சியடைவதும் நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டிலேயே நிகழ்கின்றன. சூலியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், உடலின் தக அமைவு மறு வினை சீர் குலைகிறது. சில உறுப்புகள், மண்டலங்கள் ஆகியவற்றின் பணிகளில் ஏற்படும் மாற்றங்கள், நோயூக்குபவையாக மாறுகின்றன. ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலைகிறது, பல் வேறு அக வழி, புற வழித் தூண்டல் களுக்கான மறு வினைகளும் மாறுகின்றன. இக்கோளாறுகள் அனைத்தும் நச்சு நிலை உண்டாவதை ஊக்குவிக்கின்றன. நரம்பு மண்டலப் பணியில் மாற்றம், நச்சு நிலை உண்டாவது ஆகியவை பின் வரும் காரணங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை, கடந்த காலக் கடும் நோய்கள், தவறான அல்லது குறைந்த ஊட்டம், முறையற்ற நல வாழ்வு, மிகையான உளைச்சல், பெண்ணுடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைக்கும் கூறுகள் முதலியன.\n\nசூலின் இறுதியில் தோன்றும் நச்சு நிலை மிகவும் ஆபத்தானது. குருதி மிகை அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், கல்லீரல் கோளாறுகள், நாளமில் சுரப்பி நோய்கள், நீரிழிவு, தைராய்டின் மிகையான நச்சு நிலை ஆகியவற்றைக் கொண்ட பெண்களில், சூல் நச்சு நிலை தோன்றுகிறது. ஏனைய நோய்களின் பின்னணியில் தோன்றும் நச்சு, கூட்டான நச்சு நிலை எனப்படும்.\n\nசூலின் தொடக்க கால நச்சு நிலை. சூல் கால வாந்தி, கட்டுப் படுத்த முடியாத வாந்தி, மிகையான உமிழ் நீர்ச் சுரப்பு, இறுதிக் கால நச்சு நிலை, சிறு நீரக நோய், இசிவு முன் நிலை, இசிவு நிலை முதலியவை சூலின் நச்சு நிலைகளாம்.\n\nசூலின் இறுதிக் கால நச்சு நிலை. சூலின் இறுதிக் கால நச்சு நிலை என்பது ஒரு நோய் நிகழ்வின் வளர்ச்சியில், பல கட்டங்கள் ஆகும். தொடக்க நிலையான மகோதரம், மிகக் கடுமையான சிறுநீரக நோயாக மாறுகிறது, சிறுநீரக நோய் எக்ளாம்ப்சியா முன் நிலையாக மாறிப் பிறகு, எக்ளாம்ப்சியாவாக மாறுகிறது. எக்ளாம்ப்சியா முன் நிலையையும், சிறுநீரக நோயையும் தொடர்ந்து எக்ளாம்ப்சியா நோய் உண்டாகிறது.\n\nஎக்ளாம்ப்சியா முன் நிலை. சூலிக்குத் தேவையான சுகாதார நெறி முறைகளைப் பின்பற்றா விட்டாலோ, சிறுநீரகப் பாதிப்புக்கு உரிய மருத்துவம் அளிக்கா விட்டாலோ எக்ளாம்ப்சியா முன் நிலை நோய் தோன்றுகிறது.\n\nஅறிகுறிகள். வீக்கம், குருதி மிகு அழுத்தம், சிறுநீரில் அல்புமின் ஆகியவை சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். சிறுநீரகப் பாதிப்பு, எக்ளாம்ப்சியா முன் நிலையை அடையும் போது, மேற்காணும் அறிகுறிகளின் தீவிரத் தன்மை அதிகரிக்கும். குருதி மிகு அழுத்தம், வீக்கம், சிறுநீரில் அல்புமினுடன் தலைவலி, கண்ணின் முன்பு பட்டாம் பூச்சிப் பறப்பது போன்ற தோற்றம், வயிற்று வலி, வாந்தி, தூக்கமின்மை, சிடு சிடுப்பு ஆகியவை உண்டாகின்றன, தலை வலியும், பார்வைக் கோளாறுகளும் பெருமூளை குருதி ஓட்டச் சீர் குலைவின் அறிகுறிகளாகும். விழித் திரையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் பார்வை மந்தம் (வீக்கம், குருதிப் பெருக்கு, விழித் திரைக் கிழிசல்) உண்டாகும். குருதி ஓட்டக் கோளாறுகள், சிறுநீரக, கல்லீரல் பணிச் சிதைவுகள், பாதிக்கப்பட்ட ஆக்கச் சிதை மாற்றம் ஆகியவை சிறுநீரகப் பாதிப்பில் இருப்பதை விட, எக்ளாம்ப்சியா முன்நிலையில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மூச்சுத் திணறலும் மிகையாக இருக்கிறது.\n\nஎக்ளாம்பசியா முன் நிலை, எந்த நேரத்திலும் எக்ளாம்ப்சியாவில் முடியலாம். எக்ளாம்ப்சியாவாக மாறாமலேயே, இன்றியமையாத உறுப்புகளில் குருதிப் பெருக்கு ஏற்படலாம். தாய்க்கும், சேய்க்கும் தீமை பயக்கும் கருக் குடையின் உரிய காலத்திற்கு முன்பான பிரிவும், பேறு காலச் சிக்கல்களும் உண்டாகலாம். குழந்தை மூச்சுத் திணறிக் கருப்பையினுள் ளேயே இறந்து விடக் கூடும் அல்லது மகப் பேற்றின் போது இறந்து விடலாம்.\n\nமருத்துவம். நோயாளியை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து விட வேண்டும். தனி அறையில் வைத்து இடை விடாது கண்காணிக்க வேண்டும். ஒலி, ஒளிர்வான வெளிச்சம், வலி, கிளர்ச்சியூட்டும் உணர்வுகள் போன்ற உறுத்தக் கூடிய அனைத்தும் அகற்றப்பட வேண்டும். வீக்கத்தின் போது சிறுநீர்ப்பெருக்கிகள் பயன்படுகின்றன. அமைதியூட்டி மருந்துகளும் பயனளிக்கின்றன. உரிய மருத்துவத்தால், எக்ளாம்ப்சியாவைத் தவிர்த்து விடலாம். பெண்களின் நிலையும் சீரடைந்து, சூலுக்கு எந்த ஊறும் நேராது,\n\nஎக்ளாம்ப்சியா. சூல் நச்சு நிலையின் இறுதிக் கட்டமே எக்ளாம்ப்சியா பேறு கால வலிப்பு நோய் ஆகும். எக்ளாம்ப்சியா முன் நிலையிலிருந்தோ, சிறுநீரகப் பாதிப்பிலிருந்தோ இது உண்டாகிறது. இன்றியமையாத உறுப்புகள், மண்டலங்களின் பணிகள் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் வெளிப் படுகின்றன. எக்ளாம்ப்சியாவின் மிக முக்கிய அறிகுறி உடல் தசைகளின் வலிப்பாகும். இதைத் தொடர்ந்து, ஆழ் மயக்கம் (coma) உண்டாகிறது.\n\nபொதுவாக, கருவுயிர்க்கும் போதே, எக்ளாம்ப்சியா தோன்றுகிறது. அரிதாக, பேறு காலத்தின் போதும் உண்டாகிறது. சில போது, குழந்தை பிறந்த பின் எக்ளாம்ப்சியா தோன்றலாம். இந்நோய், தலைச் சூலிகளிடம் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சூல், குறுகலான கூபகம், சிறுநீரக, குருதி நாள நோய் கொண்ட பெண்களில் இந்நோய் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.\n\nஎக்ளாம்ப்சியாவின் மருத்துவ வெளிப்பாடுகள். எக்ளாம்ப்சியா முன் நிலை அல்லது சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றின் அறிகுறிகளுடன் வலிப்பும் தோன்றுகிறது. இதற்கு முன்னர், தீவிரமான தலைவலி, பார்வை பாதிப்பு, தூக்கமின்மை. அமைதியற்ற நிலை, குருதி மிகு அழுத்தம், சிறுநீரில் அல்புமின் ஆகியவை உண்டாகின்றன. ஒவ்வொரு வலிப்பும் ஓரிரு நிமிடங்கள் நீடிக்கிறது.\n\nஉடலின் அனைத்துத் தசைகளும் பாதிக்கப் பட்டு உடல் இறுக்கமடைகிறது. மூச்சு விடல் பாதிக்கப்படுகிறது; முகம் நீல நிறமடைகிறது. முகம், உடல், கை, கால்கள் ஆகியவற்றில் வலிப்பு தோன்றி, 30–40 நொடி நீடிக்கின்றது. பின்னர், படிப் படியாகக் குறைகிறது. வாயில் நுரை வெளிப்படுகிறது (சரியாகப் பாதுகாக்கப்படா விடில், நோயாளி தன் நாக்கைக் கடித்துக் கொள்ளக் கூடும்). வலிப்பு நின்றவுடன், குறிப்பிட்ட நேரம் வரை நோயாளி நினைவிழந்த நிலையில் இருக்க, நினைவு மீண்டும் வருகிறது. நினைவிழப்பு நிலையின் போது, சில சமயம் மீண்டும் வலிப்பு தோன்றுகிறது. நவீன மருத்துவத்தில், இத் தகைய தாக்குதல்களைக் குறைக்க முடிகிறது. குழந்தை பிறந்த பின்னர், வலிப்புத் தோன்றுவதில்லை. சூலின் போது தோன்றக் கூடிய வலிப்புகளை உரிய மருத்துவம் மூலம் தவிர்க்கலாம்.\n\nஎக்ளாம்ப்சியாவில் இன்றியமையாத பல பணிகள் பாதிக்கப்படுகின்றன. மைய நரம்பு மண்டலப் பணிகள் சீர் குலைகின்றன. இதன் காரணமாகக் கிளர்த்தல் தன்மை அதிகரிக்கிறது. ஒலி, ஒளிர் வெளிச்சம் போன்றவை வலிப்புகளை ஊக்குவிக்கும். தாய்க்கும், சேய்க்கும் எக்ளாம்ப்சியா தீமை பயக்கிறது. எக்ளாம்ப்சியாவின் முதல் தாக்குதலின் போது அல்லது தாக்குதல் குறைந்த பின், பெண் மரணமடையலாம். மூளையில் குருதிப் பெருக்கு, மூச்சுத் திணறல், இதய முறிவு. நுரையீரல்களில் நீர்த் தேக்கம் ஆகியன மரணத்திற்குக் காரணமாகின்றன. உடனே, மருத்துவ உதவி கிடைக்கா விடில், காயங்கள் ஏற்படலாம். ஊமைக் காயங்கள், எலும்பு முறிவுகள், நாக்குக் கடிப்பு, உள்ளிழுப்பு நிமோனியா, சிறுநீரகக் கோளாறு, உள நோய்கள் போன்றவையும் எக்ளாம்ப்சியா தாக்குதலின் பின்னர் ஏற்படலாம்.\n\nஎக்ளாம்ப்சியாவில், கருப்பையுள் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். அண்மைக் காலமாக, எக்ளாம்ப்சியாவால் ஏற்படும் இறப்பு வீதம் குறைந்து வருகிறது; இதற்கு முன் காப்பு முறைகளும், மருத்துவமும் காரணமாக உள்ளன.\n\nமருத்துவம். கிளர்த்தலை உண்டாக்கும் சூழ்நிலைகளிலிருந்து, நோயாளிகளை அப்புறப்படுத்தி வைக்க வேண்டும்; அவர்களுக்குத் தூக்க மருந்துகள் கொடுக்கலாம். ஒலி எதுவுமில்லாத, நல்ல காற்றோட்டமுள்ள அறையில் நோயாளி இருக்க வேண்டும். ஆய்வு, ஊசிகள், உட்குழல் செலுத்தல் போன்ற அனைத்துச் செய்முறைகளும் நோயாளியின் தூக்க நிலையிலேயே செய்யப்பட வேண்டும்.\n\nமார்ஃபீன், குளோரால் ஹைட்ரேட் கொண்டு எக்ளாம்ப்சியா தாக்குதல்களைக் குறைக்க வேண்டும். (0.15 கி. மார்ஃபீன், 1 மணி நேரம் கழித்து இனிமா மூலம் 2கி. குளோரால் ஹைட்ரேட், 3 மணி நேரத்திற்குப் பின் 0.015 மார்ஃபீன், 7 மணி நேரத்தில் 2 கி. குளோரால் ஹைட்ரேட், 13–21 மணி நேரத்தில் 1.5 கி. குளோரால் ஹைட்ரேட்).\n\nகுழந்தைப் பிறப்பைப் படலங்களை உடைத்தல், இடுக்கி, புறச் சுழற்சி ஆகியவற்றால் விரைவுபடுத்தலாம். உடலின் பிற மண்டலப் பணிகளைச் சீராகப் பேண வேண்டும்.\n\nதற்கால மருத்துவம். எக்ளாம்ப்சியாவில், மூளையின் உணர்வு, இயக்க நிலைகள், கிளர்த்தல் நிலையில் உள்ளன. பல்வேறு தூண்டல்கள், ஒளிர் வெளிச்சம், ஒலிப் பாதைகள் வழியாக வலிப்புகளை ஊக்குவிக்கக் கூடும். இதற்கு முழுமையான ஓய்வே முதன்மையானது. பார்வை, கேட்பது, தொடல், வலி பற்றிய எந்தத் தூண்டல்களும் கூடா. நோயாளி அனுமதிக்கப்பட்டவுடன், வெளிப்புற யோனி ஆய்விற்கு முன்னர், ஊசிகள் போடு முன்பும், உட்குழல் செலுத்தும் போதும், சிரை அறுவையின் போதும், ஈதர் கொண்டு உணர்வு நீக்கம் செய்ய வேண்டும் மகப் பேறு மருத்துவ மனைகளில் எக்ளாம்ப்சியாவுக்குச் சிறப்பு அறைகள் கட்ட வேண்டும்.\n\nஅறைக்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்: நோயாளியைக் கம்பளி கொண்டு போர்த்த வேண்டும். புரண்டு படுக்கச் செய்து, குடல், சிறுநீரகப் பணிகளை நோக்க வேண்டும். குருதி அழுத்தத்தை அளவிட்டு, மூச்சு விட ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.\n\nமுகத் தசைகளின் துடிப்பு, கண்ணிமைகளின் துடிப்பு போன்றவற்றின் போது, மகப் பேறு மருத்துவர், வாய் விரிப்பியை உட்செலுத்த வேண்டும்; நாக்கைக் கடிப்பதைத் தவிர்க்க கடைவாய்ப் பற்களுக்கு இடையே இக்கருவியைச் செலுத்த வேண்டும். வலிப்புத் தாக்குதல்களின் போது, நோயாளி தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயாளி மூச்சு விடத் தொடங்கியதும், முகத்தின் நீல நிறம் மாறும் வரை, ஆக்சிஜன் கொடுக்க வேண்டும், உமிழ் நீர், மூச்சுப் பாதைக்குள் செல்லாதவாறு வாயைத் துடைக்க வேண்டும்.\n\nஎக்ளாம்ப்சியாவில் சிரை வழியாகக் குளூக்கோசை செலுத்துவது முக்கியமான முறையாகும். இதன் மூலம், கபால உள் அழுத்தம் குறைகிறது. சிறுநீர்ப் பிரிவு அதிகரிக்கிறது; மையோகார்டியத்தின் ஊட்டம் அதிகரிக்கிறது. ஹைபோதயசைடு (டைகுளோர்தயசைடு), மானிட்டால், ஃபுரோசெமைடு போன்ற வேறு பல சிறுநீர்ப் பிரிப்புகள், எக்ளாம்ப்சியாவின் (எக்ளாம்ப்சியா முன் நிலையிலும்) சிக்கலான மருத்துவத்தில் கையாளப்படுகின்றன. திசுக்களிலிருந்து மிகையான நீர்மம் அகற்றப்படுகிறது. உடலின் இன்றியமையாத பல பணிகள் சீரடைகின்றன. புரதக் குறை நிலையில் அல்புமின், உலர்ந்த பிளாஸ்மா போன்றவை கொடுக்கப் படுகின்றன.\n\nபேறு காலத்தை விரைவு படுத்த எக்ளாம்ப்சியாவில், பல முறைகள் கையாளப்படுகின்றன. கருப்பைக் கழுத்து அகலமாகத் திறந்திருந்தால் பனிக்குடத்தைத் துளை செய்யலாம். மகப் பேறு கிடுக்கி, புறச் சுழற்சி, கூபகத்தைப் பிடித்து வெளியேற்றுதல் போன்ற முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற முறைகள் பயனளிக்கா விடில், சீசேரியன் முறை கையாளப்படுகிறது. சிறுநீர் சுரக்காமை, விழித் திரை அழற்சி அல்லது விழித் திரைக் கிழிசல், கருக்குடை உரிய காலத்திற்கு முன்பாகப் பிரிதல் போன்ற பல சிக்கல்கள் தோன்றினால், கூபகம் வழியாகக் குழந்தை வர முடியாமையால், சீசேரியன் முறை கையாளப்படுகிறது.\n\nஎக்ளாம்ப்சியாவிலிருந்து சீரடைந்தவர்களுக்குச் சிறப்பு மருத்துவமும், பராமரிப்பும் அளிக்க வேண்டும். மகப் பேற்றின் பின்னர், ஒவ்வொரு நாளும் குருதி அழுத்தம் அளவிடப்பட வேண்டும். 2–3 நாளுக்கு ஒரு முறை சிறுநீர் ஆய்வு செய்ய வேண்டும். கருவுயிர்த்த பெண்ணின் பொது உடல் நிலை, அவள் இதயத்தின் பணி, மூச்சு மண்டலத்தின் நிலை, பால் உறுப்புகளின் உட்சுருள்வு ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். சீழ்த் தொற்று, நிமோனியா போன்ற பல சிக்கல்களும் தோன்றலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கால் வீக்கத்தையும், குருதி மிகு அழுத்தத்தையும் குறைக்க சிறுநீர்ப் பெருக்கிகளும், வலிப்பு வாராமல், தடை செய்யச் சிரை வழியாக டயசிபாம் அல்லது வினர்கான் போன்றவையும் கொடுப்பது சிறந்தது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obsterics, First Edition, Mir Publishers, Moscow, 1983."}}