{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xhgh6xun", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xhgh6xun/", "kind": "article", "headword": "அடை", "romanization": "aṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:33.270476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அடை என்பது ஒரு சொல்லைச் சிறப்பிக்க வரும் சொல்லாகும்.", "body_ta": "அடை என்பது ஒரு சொல்லைச் சிறப்பிக்க வரும் சொல்லாகும். நல்ல பையன் என்ற தொடரில் பையன் என்பது பெயர்ச்சொல். இப்பெயரைச் சிறப்பிப்பது ‘நல்ல’ என்னும் பண்பு குறித்து வரும் சொல், இதனை அப்பெயர்ச் சொல்லுக்கு அடையாகக் கொள்வர்.\n\nஆசிய மொழிகளில் பெயர்ச் சொல்லுக்கும் அடைக்கும் இடையே ஒரு வகை இயைபு உண்டு. இந்தி மொழியில் ‘அச்சா லட்கா’ என்பது ‘நல்ல பையன்’ என்று பொருள்படும். ‘நல்ல’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இந்தியில் ‘அச்சா’ என்றும், ‘அச்சீ’ என்றும் இரண்டு வடிவங்கள் அமைந்து விளங்கக் காணலாம். பெயர்ச் சொல் ஆண்பாலைக் குறிக்குமானால் அடைச்சொல் வடிவம் ஆகாரத்தில் முடியும். எனவே, இந்தியில் உள்ள பெயரடைகளுக்கெல்லாம் இருவகை வடிவங்கள் உண்டு. ஒன்று ஆகார இறுதி வடிவம்; மற்றொன்று ஈகார இறுதி வடிவம். கருப்பு என்ற அடைக்கு இணையாக இந்தியில் காலா, காலீ என்ற இரண்டு சொற்கள் உண்டு. முதற்சொல் ஆண்பால் பெயருடன் வருவது; இரண்டாவது பெண்பால் பெயருடன் வருவது. வடமொழி போன்ற மொழிகளில் அடைகளுக்கு மூவகை வடிவம் உண்டு. ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்ற மூன்று வகைப் பெயர்ச் சொல்லோடும் வரும் அடைகள் மூவகையினவாகும்.\n\nதமிழ் மொழியில் பெயரடைகளுக்கும் பெயர்ச் சொற்களுக்கும் இடையே இத்தகைய இயைபு இல்லை. இவ்வகையில் ஆங்கிலமும் தமிழும் ஒற்றுமை உடையன. ஆங்கிலத்தில் குட் (Good) என்ற அடைச்சொல் பாய் (Boy) என்ற ஆண்பாற் சொல்லுடன் வந்தாலும் கியர்ல் (Girl) என்ற பெண்பாற் சொல்லுடன் வந்தாலும் வேறு எப்பாற் சொல்லுடன் வந்தாலும் மாறுபடாத ஒரே வடிவத்தில் வரக்காணலாம். தமிழிலும் இதே நிலைதான். ஆண்பாற் பெயரோடும் பெண்பாற் பெயரோடும், இவையல்லாத பாற் பெயரோடும் வரும் அடை, நல்ல என்னும் ஒரே வடிவம் கொண்டு விளங்குகின்றது.\n\nபெரும்பாலான மொழிகளில் அடைகள் பெயர்ச் சொல்லுக்கு முன்னரே வரும். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டாகும். பிரெஞ்சு மொழியிலோ அடைகள் பெயர்ச் சொல்லுக்குப் பின்னரும் வரக்காணலாம்.\n\nதமிழில் ‘மாணவர் விடுதி’ போன்ற தொகையுடன் ‘புதிய’ போன்ற அடை வரும்போது, ‘புதிய மாணவர் விடுதி’ போன்ற தொடர் உண்டாகும். இத்தொடர் இரு பொருள் உடையது. மாணவர் புதியவரா, மாணவர்க்கான விடுதி புதியதா என்பதைப் பொறுத்து, இரு வகையாகப் பொருள் கொள்ளலாம்.\n\nதமிழ் மொழியில் பெயர்ச் சொற்களே பெரும்பாலும் அடைகளாக அமைந்து விளங்குவதைக் காணலாம். முள்வேலி என்ற தொடரில் முள் என்னும் பெயர்ச்சொல் வேலிக்கு அடையாக வந்துள்ளது. பெயருக்கு முன்னர் வரும் டுகர, றுகரக் குற்றியலுகரங்களில் முடிகின்ற அடைகள் இரட்டித்து வருவதைக் காணலாம். எடுத்துக்காட்டு: காடு வழி–காட்டு வழி, ஆறு மணல்–ஆற்றுமணல், கிணறு நீர் –கிணற்று நீர், உதடு சாயம்–உதட்டுச்சாயம்.\n\nஅம் ஈறு பெற்ற பெயர்ச் சொற்கள் பொதுவாக இறுதியிலுள்ள மகரத்தை இழக்கும். அதன் பின்னர் வரும் பெயர்ச்சொல் வல்லின எழுத்தில் தொடங்குமானால் அந்த வல்லெழுத்து இரட்டிக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: மரம்+நாற்காலி = மரநாற்காலி; மரம்+பெட்டி = மரப்பெட்டி.\n\nபழந்தமிழில் மென்றொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள் அடையாக வரும்போது, அவற்றில் உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்குப்பிடி.\n\nசில பெயர்ச் சொற்கள் அடையாக வரும்போது அவற்றுடன் — ஆன என்ற உருபோ – உள்ள என்ற உருபோ சேர்ந்து வரக் காணலாம். எடுத்துக்காட்டு: அழகான பெண்; ஆழமான கிணறு; நியாயமான வேண்டுகோள்; அன்புள்ள நண்பன்; கீழ்ப்படிதலுள்ள மாணவன்; இரக்கமுள்ள மனிதர்.\n\nஉயர்ந்த, சிறந்த, நீண்ட, கெட்ட, உற்ற, நெருங்கிய என வரும் சொற்கள் அடைகளாக அமைதல் உண்டு. இவை முறையே உயர், சிற, நீள், கெடு, உறு நெருங்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிறந்த பெயரெச்ச வடிவங்களே. ஆனால், நாளடைவில் இவை பெயரெச்சத் தன்மை கெட்டு வெறும் அடைகளாயின.\n\nஅழகு போன்ற பெயர்ச் சொற்கள் வினைகளாக மாறி, இறந்தகாலப் பெயரெச்ச வடிவில் அடைகளாதலையும் காணலாம். எடுத்துக்காட்டு: அழகிய வீடு.\n\nபெரு(மை) போன்ற சொற்கள் இறந்த கால எதிர்காலப் பெயரெச்ச வடிவில் அடைகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டு: பெரிய வீடு, பெருங்குன்று.\n\nபுது(மை) போன்ற சொற்கள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: புதிய பாதை, புதுவாழ்வு.\n\nநன்(மை) போன்ற சொற்கள் கால இடைநிலையற்ற பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நல்ல வீடு, நல்வினை.\n\nவினைச் சொற்கள் அடிச்சொல் நிலையில் அடைகளாக வருதலும் உண்டு. இதனை வினைத்தொகை என மரபு இலக்கியம் கூறும். எடுத்துக்காட்டு: தொங்கு பாலம், ஆழ்கடல்.என்.கு."}}