{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wfju3egc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfju3egc/", "kind": "article", "headword": "உட்கிடைக் குறைபாடு", "romanization": "uṭkiṭaik kuṟaipāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.358528+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குறைபாடு என்பது தேவையான ஏதாவது ஒன்று இல்லாமல் இருப்பது; முழுமை பெறாமல் இருப்பது, குறைபாடு இரு முறைகளில் இருக்கலாம்.", "body_ta": "குறைபாடு என்பது தேவையான ஏதாவது ஒன்று இல்லாமல் இருப்பது; முழுமை பெறாமல் இருப்பது, குறைபாடு இரு முறைகளில் இருக்கலாம். அது உட்கிடையாக உள்ளுறைந்து இருக்கலாம். அல்லது வெளிப்படையாக இருக்கலாம். உட்கிடைக் குறைபாடு (Latent Defect) என்பது சாதாரணமாக, கண்ணுக்குப் புலப்படாமல், ஒரு சொத்தினை அல்லது பொருளை விற்பவர் கூறினாலன்றி வெளிப்படாமல் இருக்கக் கூடிய ஒன்று. வெளிப்படைக் குறைபாடு (Patent Defect) என்பது வாங்குபவரின் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடியது.\n\nசொத்தில் அல்லது உரிமை மூலத்தில் (Title) உள்ள முக்கிய குறைபாடுகளை விற்பவர் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்புடையவர் எனச் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 55 (1) (அ) கூறுகிறது. சொத்தினை விற்பவர் தனக்குத் தெரிந்த, வாங்குபவருக்குத் தெரியாத, சாதாரணமாகப் புலனாகக் கூடிய சொத்து அல்லது உரிமை மூலத்தில் உள்ள முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதாக இப்பிரிவு கூறுகிறது. வெளிப்படைக் குறைபாடுகளைத் தெரிவிக்க வேண்டியதில்லை. தெரிவிக்க வேண்டிய குறைபாடுகளைத் தெரிவிக்காமல் இருப்பது மோசடியாகும். முக்கிய குறைபாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், வாங்குபவர் அதை அறிந்தால் வாங்காமல் இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நடப்பில் இருக்கக் கூடிய வில்லங்கமொன்று வாங்குபவருக்குத் தெரியாது. சாதாரணமாக அவருக்குப் புலனாகாத ஒன்று. இத்தகைய உட்கிடைக் குறைபாடு உரிமை மூலக் குறைபாடாகும். இக்காரணத்தால் விற்பவர் வெளிப்படுத்தாமலிருப்பின் வாங்குபவர் வாங்குவதைத் தவிர்க்கலாம். சொத்தின் நடுவில் செல்லும் நிலத்தடிப் பாலம், வசதியுரிமை ஆகியவை இவ்வகைக் குறைபாடுகள். உட்கிடைக் குறைபாடுகளுக்கு, ‘வாங்குபவனே விழித்திரு’ (Caveat emptor) என்ற முதுமொழி பொருந்தாது. இந்திய வசதியுரிமைச் சட்டத்தின் 57–ஆம் பிரிவு உரிமம் ஒன்றினை வழங்குபவர் உரிமம் பெறுபவருக்குச் சொத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது."}}