{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uknqgke5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uknqgke5/", "kind": "article", "headword": "உடலியங்கியல்சார் மானிடலியல்", "romanization": "uṭaliyaṅkiyalcār māṉiṭaliyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.706137+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு உருவ அமைப்பிலும் உடலியக்க அமைப்பிலும் மனிதர்கள் கொண்டுள்ள தகவமைப்பு முறைகளை அறியும் ஒரு மானிடவியல் துணைப்பிரிவே உடலியங்கியல்சார் மானிடவியல் (Physiological Anthropology) ஆகும்.", "body_ta": "பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு உருவ அமைப்பிலும் உடலியக்க அமைப்பிலும் மனிதர்கள் கொண்டுள்ள தகவமைப்பு முறைகளை அறியும் ஒரு மானிடவியல் துணைப்பிரிவே உடலியங்கியல்சார் மானிடவியல் (Physiological Anthropology) ஆகும். இப்பிரிவு மானிடவியலில் தனிப் பெருந்துறையாகக் காணப்படவில்லையாயினும், இன்றைய மானிடவியலாளர்கள் மக்களின் தகவமைப்புகளை விரிவான பல பரப்புகளில் ஆராய்ந்து வருகின்றனர்.\n\nமனிதனின் உடல் அமைப்பும் செயல்களும் அவன் சார்ந்துள்ள வாழிடப் பரப்பிற்கேற்பவும் காலநிலைக்கு (Climate) ஏற்பவும் செயற்படுவன. இதனையொத்தே மனிதனின் உடலியக்கத் துலங்கல்களும் (Physiological Responses) வாழ்க்கையமைப்பை ஏற்பதில் தகுதிகளும் அமைகின்றன என்பது உடலியங்கியலாரிடையே வழங்கப்படும் பெருவழக்காகும். மானிடவியலாளருள் சிலரும் உடலியங்கியலாருள் ஒரு சிலரும் 20–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மக்கள் குழுவினர் உடலியங்கு முறையில் சூழ்நிலையோடு பெற்றிருக்கும் தூண்டுதல்களில் வேறுபடுகின்றனரா என்பதை ஆராய்வதில் ஈடுபட்டனர். மனிதன் தோன்றிய காலந்தொட்டே பல வகைப்பட்ட சூழ்நிலை அழுத்தங்களும் (Environmental Stress) உடலியல் மாற்றங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதை முழுதளாவிய முறையில் கண்டறியப் பல அணுகுமுறைகளைக் கண்டனர். இவற்றுள் அடிப்படையானது உருவ அமைப்பில் காணப்படும் மாற்றங்கள் உடலியங்கு முறையில் உண்டாக்கும் விளைவுகளை மதிப்பீடு செய்வது ஆகும்.\n\nஉடலியங்கியல்சார் மானிடவியலின் தொடக்க கால ஆய்வுப் பரப்பு மிகக் குறைந்த அளவினதாகும். ஆனால் 20–ஆம் நூற்றாண்டின் ஐம்பதுகளிலிருந்து இதன் பரப்பு கீழ்வரும் ஆய்வுப் பரப்புகளைக் கொண்டு, விரிவானதொரு துணைப் பரப்பாக மானிடவியலில் இடம் பெற்றுவிட்டது. பாக்கர் (Baker) உடலியங்கியல்சார் மானிடவியலின் பரப்பைப் பின்வருமாறு குறிப்பிடுவார். இத்துறை சூழ்நிலைத் தூண்டுதல்களுக்கு மனிதன் கொண்டுள்ள அனைத்து உடலியக்கத் துலங்கல்களையும் உடலியக்க நிலையில் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளையும் இதற்கான காரணங்களையும் அறிய முற்படுவதாகும். எடுத்துக்காட்டாக, குளிர், வெப்பம் முதலான காலநிலைகளில் மக்களின் தகவமைப்பையும், இவர்களின் உருவ அமைப்பிற்கும் மரபுப் பண்பின் வேறுபாட்டிற்கும் (Genetic Variation) உள்ள தொடர்புகளையும் கண்டறிவது முதன்மையானதாகும். இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் போது தகவமைப்புச் சார்ந்த நிகழ்வுகளை அறியும் படிமலர்ச்சிக் கோட்பாடுகளை உடன்கொண்டு அறியவேண்டும். மனிதத் தகவமைப்பு ஆய்வுகள் அண்மைக் காலங்களில் பெருமளவில் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவின்படி மனிதத் தகவமைப்பு மரபுப் பண்புகளின் தகவமைப்பையும் மரபுசாராப் பண்புகளின் தகவமைப்பையும் கொண்டதாகும் என அறிய முடிகிறது. மரபுப் பண்பின் தகவமைப்பு என்பது மரபணுவின் அடுக்கு நிகழ்வில் (Gene Frequency) ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பதாகும். மரபணுவின் அடுக்கு நிகழ்வில் ஏற்படும் மாற்றமானது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வளரும் மக்கள் தொகையின் இனப்பெருக்கச் செயல்திறனையும் நிருணயிப்பதாகும். பரவலான அடிப்படையில் மனிதன் மரபுத்தோற்ற நெகிழ்வுத் தன்மையினைக் (Genotypic Plasticity) கொண்டுள்ளான். இதன் விளைவால் சூழ்நிலைக்கும் புறத்தோற்ற அமைப்பிற்கும் இடையே ஏற்படும் வினைகள் ஒவ்வோர் உயிரியின் (Organism) உருவ அமைப்பிலும் நடத்- தைக் கோலத்திலும் மாறுபாடுகளைத் தோற்றுவிக்கின்றன.\n\nமனித உடலியக்க முறைகளுக்கும் சூழ்நிலை அமைப்பிற்கும் உள்ள தொடர்புகளை அறிய, அறிவியலார் உயிரினக் கோளத்தைப் (Biosphere) பல பெரும் மண்டலங்களாகப் பிரித்து ஆராய்வர். மோரன் (Moran) என்பவர் உயிரினக் கோளத்தை வடதுருவ மண்டலம் (Arctic Zone), உயரமிகுந்த நில மண்டலம் (High Altitude Zone), வறட்சி மண்டலம் (Arid Zone), புல்வெளி மண்டலம் (Green Land), ஈரமுள்ள வெப்பமண்டலம் (Humid Tropics) என ஐந்து மண்டலங்களாகப் பிரிப்பர். மேற்கண்ட ஒவ்வொரு பகுதியிலும் மக்களும் உயிரினங்களும் பல தகவமைப்பைப் பெற்று வாழ வேண்டியுள்ளனர். கடுங்குளிர், கடுவெப்பம், தண்ணீர்ப் பற்றாக்குறை, ஈரப்பதம், உயரம் (Altitude) முதலான பல காரணிகள் வாழ்க்கைத் தொழிலோடும் உடல் தொழிலோடும் பங்கேற்று உள்ளதால், ஒவ்வொன்றின் செயல்தன்மையும் உடற்றொழிலில் மரபுவழியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை அறியவே உடலியங்கியல்சார் மானிடவியலார் மனிதத் தகவமைப்புகளை மூன்று வகையாகப் பிரிப்பர். மோரன் என்பார் கூற்றுப்படி, உயிரினங்கள் வளர்நிலைத் தகவமைப்பு (Developmental Adaptation), இணக்கநிலைத் தகவமைப்பு (Acclimatory Adaptation), நிலைப்படுத்தும் தகவமைப்பு (Regulatory Adaptation) ஆகிய மூன்று வகையான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.\n\nவளர்நிலைத் தகவமைப்பும் இணக்கநிலைத் தகவமைப்பும் மாறுபட்டனவாகும். ஒவ்வொருவரும் வாழ்க்கையமைப்பிலும் வளர்நிலைப் பருவத்திலும் பல பின்னோக்கா மாற்றங்களைப் (Irreversible Changes) பெற்று வளர்ந்துவிடுவர். வளர்ச்சியடைந்த பருவத்தில் ஒருவனுக்கு ஏற்படும் சிற்சில பண்பாட்டு, சமூக நடத்தைசார் உள்தகவமைப்புகளை அமைத்துத் தருவதே இணக்கநிலைத் தகவமைப்பு ஆகும். இது பின்னோக்குடையதும் (Reversible) பின்னோக்கற்றதும் ஆகிய இரண்டு தகவமைப்புப் பண்புகளை ஏற்றதாகும். இந்த நிலையில் வாழ்க்கையின் இயல்பு நிலை அமையப் பெறும்போது அப்பண்புகளைத் தொடர்ந்து கொண்டு செல்லுவதே நிலைப்படுத்தும் தகவமைப்பாகும். படிமலர்ச்சி (Evolution) மாற்றங்களில் இயற்கைத் தேர்வு (Natural Selection) பெரும்பான்மையான பங்கினைப் பெற்றுள்ளது. சிறுவயது முதல் ஒவ்வொரு நிலைவிலும் பல தகவமைப்புகளைப் பெற்று ஒவ்வொருவரும் வாழ்கின்றனர். இதனைப் போன்றே ஒவ்வொரு சமூகமும் சமுதாயமும் பல நிலைகளில் சுற்றுச்சூழலின் மாற்றத்தோடு ஒப்புற்றுப் படிமலர்ச்சியடைந்து வருகின்றது. மரபு வழியில் தொடரும் இப்பண்புகள் ஒவ்வொரு மக்கள் குழுவிலும் மாறுபடுவதால், ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியாக அறிதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மிகுந்த உயரப் பகுதியில் வாழும் குழந்தைகள் பெரிய நுரையீரல்களையும் பெரிய மார்பகத்தையும் பெற்றுவிடுவர். மிக உயரமான மலைப் பகுதிகளிலும் மேட்டுப் பகுதிகளிலும் உள்ள காற்றில் உயிர்வாயு (Oxygen) குறைந்திருத்தலினால் இவை ஏற்படுவனவாகும். இது ஒரு வளர்நிலைத் தகவமைப்பு (Developmental Adjustments) ஆகும்.\n\nமனித உடலியங்கியல் துலங்கல்கள்\n\nதான் வாழும் சூழ்நிலைக்கேற்ப மனித உடற் செயல்கள் தகவமைந்திருத்தலை முப்பெரும் பகுதிகளாகப் பகுத்து ஆராயலாம். அவை 1. மனித உடல் வெப்பச் சீரமைப்பு முறை (Human Thermo Regulation), 2. சர்கேடியன் ஒழுங்கியல்பு (Circadian Rythms), 3. வேலையும் அடிப்படை உணவும் (Work and Diet Subsistence) ஆகும்.\n\nமனித உடல் வெப்பச் சீரமைப்பு முறை\n\nமனிதத் தகவமைப்பின் முதன்மையான கூறு தன் உடலின் வெப்ப நிலையைச் சீராகத் தானே செயற்படுத்தும் தன்மையேயாகும். மனிதனின் சராசரி உடல் வெப்ப நிலை 36.5°C முதல் 37.5°C வரையிலானதாகும். இந்த வெப்பநிலையிலிருந்து மாறி 24°C வரை கீழிறங்கினாலோ 45°C வரை மிகுதியாளாலோ உயிர் பிழைத்தல் கடினமானதாகிவிடும். வெப்பப் பரிமாற்ற (Heat Exchange) நிகழ்வினாலேயே உடல் அதன் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்கிறது. இந்த நிகழ்வில் இரண்டு முதன்மையான நிலைகள் உள்ளன. ஒன்று வளர்சிதை மாற்றத்தினால் (Metabolism) உண்டாக்கப்படுகிறது. மற்றொன்று உடலிலிருந்து சூழ்நிலைக்கு வெப்பத்தைக் கடத்திவிடுவது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைப் பெறுதலும் உடலுக்கு மிகுதியான வெப்பத்தை வெளியேற்றுதலும் கடத்துதல் (Conduction), புடைப்பெயர்ச்சி (Convection), கதிர்வீச்சு (Radiation) ஆகிய மூன்று முறைகளால் நடைபெறுகின்றன. மனித உடலின் வெப்பச் சீரமைப்பு முறையை அறிவதற்கு உடலில் வெப்பம் எவ்வாறு உண்டாகிறது என்பதனை அறிதல் வேண்டும். உடல் முழுமையாக ஓய்வு நிலையில் உள்ளபோது நடைபெறும் குறைந்தபட்ச வளர்சிதை மாற்றச் செயல் ‘அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம்’ (Basal Metabolic Rate,–BMR) எனக் கூறப்படும். இது உணவு உட்கொள்ளாமல் உடல் எட்டுமணி நேரக் காலத்திற்குப் பின் உள்ள நிலையினைக் குறிப்பதாகும். வயதுவந்த இளைஞனுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஓர் உடல் மேற்றளத்திற்குச் சராசரி 40 கிலோ கலோரி (40 K.Cals) தேவைப்படுகிறது.\n\nஉடலிலிருந்து வெப்பம் வெளியேறுதலில் பல தன்மைகள் காணப்படுகின்றன. உடலின் உட்கூறினுள் இருந்து புற உடலிற்கு வெப்பம் மாற்றப்படுவதைப் பல காரணிகள் செயற்படுத்துகின்றன. இவற்றுள் கொழுப்புச் சேர்மம், உடல் எடை இரத்த மண்டலம் முதலானவை முதன்மையானவை. உடல் வெப்ப நிலையைச் சீரமைப்பதில் இரத்த மண்டவத்திற்குப் பெரும்பங்குண்டு. உடலின் அக உறுப்புகள் வெப்பத்தைப் பெற்று, மற்றப் புற உறுப்புகளுக்குப் பகிர்ந்து அளித்தலில் இரத்த நாளங்களின் நிலை இன்றியமையாதது. சூழ்நிலைத் தன்மைக்கேற்ப இரத்த நாளங்கள் ‘தந்துகி விரிவு’ (Vasodilation), ‘தந்துகிச் சுருக்கம்’ (Vase Constriction) ஆகியவற்றை அடையுந் தன்மையன. பல்வேறு புவியமைப்பில் வாழ்ந்துவரும் மக்களினத்தவர்களை ஆராயும் உடலியங்கியல்சார் மானிடவியலார் (Physiological Anthropologists) குளிர், வெப்பம் ஆகிய இருபெரும் காலநிலைத் தகவமைப்புகளை விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.\n\nசர்கேடியன் ஒழுங்கியல்பு\n\nமனித உடலியக்கத் தகவமைப்பின் இயல்நிகழ்ச்சிகளுள் (Phenomenon) உயிரியல்சார் ஒழுங்கியல்பும் (Biological Rythms) ஒன்றாகும். இது சர்கேடியன் ஒழுங்கியல்பு (Circadian Rythms) என்று கூறப்படும். இது ஒவ்வோர் உயிரியின் ஒரு நாளைய உயிர்வேதியியல் (Biochemical), உடற்றொழில் (Physiological) முதலான செயல்களின் பண்புகளை அறிவதாகும். இவற்றுடன் வடதுருவம், தென்துருவம் முதலான பல உச்சக் கால நிலைகளையுடைய மக்களின் உயிரியல் கடிகார (Biological Clock) அளவுகளைக் கணித்தாய்தலும் இதனுள் அடங்கும். எடுத்துக்காட்டாக, வடதுருவ மக்களுக்கு ஒளி முதன்மையானதாகும். இவர்களின் உயிரியல் கடிகார அளவையின்படி குளிர் காலங்களில் சீரான வாழ்க்கை நிலையையும் கோடைக் காலங்களில் வேறுபாடுகளையுடைய தகவமைப்பையும் பெற வேண்டியுள்ளனர். இந்தத் துருவத்தில் கோடையில் 24 மணி நேரம் ஒளியுடனும் குளிர்காலத்தில் 24 மணிநேரம் ஒளியின்றியும் இருக்க வேண்டியுள்ளது. இந்த அமைப்பு மாற்றிக் கொள்ள முடியாதது. இதனாலேயே வடதுருவ மக்களான எசுகிமோக்கள் (Eskimos) குளிர் காலங்களில் தாமாகத் தொகுப்பிணைக்கும் கால்சியம் சத்தினை மிகக் குறைவாகப் பெறுகின்றனர். உடற்றொழிலியல் செயல்களில் ஒளியின் பங்கு பெரிது. இதைப் போன்றே தென் துருவப் பகுதிகளில் வாழும் அண்டார்டிக்குப் பகுதி மக்களிடையே ஒளி முனைப்புத்தன்மை பலவாறாக மாறுபடுவதால் தூக்கமின்மை, மனவெழுச்சி, உளச்சோர்வு முதலான குறைபாடுகள் காணப்படுவதாக இவர்களை ஆராய்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருசில வடதுருவ மக்களிடையே வடதுருவ மன அதிர்ச்சி நோய் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இவையனைத்தும் இடைக்கால மனக்கோளாறுகளால் ஏற்படுவனவாகும். இது நனவு மனத்துடன் தொடர்புடையதால் நனவு மனநிலை பாதிக்கபடும்போது நினைவு இழத்தல், உளவழி உடல்நோய், கை கால் வலிப்பு (Epilepsy) முதலான தோய்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இந்நோய்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் மிகுதியாகக் காணப்படுவதாக உடலியங்கியல்சார் மானிடவியலார் கண்டறிந்துள்ளனர்.\n\nவேலையும் அடிப்படை உணவும்\n\nமனித உடற்றொழில் செயல்களுக்கும் உடலின் சீரான பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் போதுமான அளவு எரி சக்தி தேவைப்படுகிறது. இது சீரான இடைவெளியில் கொடுக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் உடல் சீரமைப்புக் தொடர்ச்சிக்கும் தேவையான ஆற்றல் கணக்கீட்டை அவன் ஓய்வு நிலையில் இருக்கும்போது அளவிட்டு ‘அடிப்படை வளர்சிதை மாற்று வீதத்தை’ (BMR) கணக்கிடலாம். இது ஒவ்வொருவரும் தான் உண்ணும் உணவு முறைக்கேற்றது. மக்கள் தம் சூழிடப் பரப்பில் கிடைக்கும் ஆதாரப் பொருள்களுள் எவற்றை உண்ணலாம்; எவற்றைத் தவிர்க்கலாம் என்னும் அறிதிறனைப் பன்னெடுங்காலமாக வளர்ந்து வந்திருப்பர். எடுத்துக்காட்டாக, சில பழங்குடியினர் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தினைத் தம் உணவு முறையில் கொண்டுள்ளனர். கலகாரிப் பாலைநிலத்தினர், அமேசான் பழங்குடிகள், ஆசுத்திரேலிய முதுகுடிகள் ஆகியோர் சில பூச்சி வகைகளைத் தம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.\n\nஉடலியங்கியல்சார் மானிடவியலார் இவர்களை ஆய்வு செய்த போது, இது இவர்களின் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து முதலான அனைத்தையும் ஈடு செய்கிறது என மதிப்பிட்டுள்ளனர். மக்களுள் பெரும்பான்மையோர் சில உணவுப் பொருள்களில் மிகக் குறைவான அளவில் நச்சுத் தன்மை இருப்பின் அவற்றை நீக்கி உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். மரவள்ளியில் (Manihot esculents) உள்ள ஒருவகை அமிலம் நச்சுத்தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்தும்போது இம்மக்கள் பல்வேறு உணவு முறைகளை ஏற்றுத் தகவமைந்துள்ளனர். உடல்சார்ந்த தொழில்களைப் போன்றே பண்பாட்டு முறையிலும் மக்கள் பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளனர். குளிர்ப்பகுதி மக்கள் உடுத்தும் துணி வகைகள், இருப்பிடம், விளக்குகளுக்குக் கடல்நாய் எண்ணையைப் பயன்படுத்துதல் முதலான பல தகவமைப்புகளை ஏற்படுத்தி உடல் வெப்பத்தைக் காக்கின்றனர். பண்பாட்டின் அமைப்பில் வரும் அனைத்துக் கூறுகளையும் உட்படுத்தி உடற்றொழிலை ஆராயும் இப்பெரும்பிரிவு உடலியங்கியல்சார் மானிடவியலில் முதன்மையானதாகும்.\n\nவேலைத்திறனும் உணவமைப்பும்\n\nஉணவுத் தகவமைப்பிற்கும் உடற்றொழிலுக்குமுள்ள உறவினைப் பற்றி அறிவதும் இத்துறையின் மற்றுமொரு பிரிவாகும். ஒரு பிரிவு மக்கள் கோகோ இலையைத் தின்பது தம் உழைப்புத் திறனை மிகுதியாக்குகிறது என நம்புகின்றனர். ஆப்பிரிக்கப் பண்ணைத் தோட்டங்களில் கோகோ இலையைத் தராமலிருப்பின் வேலையைச் செய்வதில் தயக்கம் காட்டுவர் என இவர்களை ஆராய்ந்த பண்பாட்டு மானிடவியலார் குறிப்பிடுகின்றனர். இந்த இலையை உண்பதால், சிறிய அளவில் தந்துகிச் சுருக்கம் (Vasoconstriction) ஏற்பட்டு வெப்பம் வெளியேறுவது குறைவதால் சுறுசுறுப்புடன் காணப்படுகின்றனர் எனவும், குடற்பகுதியில் உணவுப் பொருட்களை உரிஞ்சும் தன்மை மிகுதியாகிறதெனவும் கூறுகின்றனர்.\n\nஉணவமைப்பு முறையும் சூழ்நிலையமைப்பும் கொண்டுள்ள தொடர்பினுக்கிணங்க வேலைத்திறன் அமைகிறது. உயரமான பகுதிகளில் உள்ள பெரும் பண்ணைகளில் பணிபுரியப் பல மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட புதிய சூழ்நிலையில் வாழ முற்படும் போது பல உடல்சார்ந்த அமைப்புகளில் மாற்றம் பெற வேண்டியுள்ளது. இம்மாற்றங்கள் பல நிலைகளில் அவர்களின் உழைப்புத் திறனை மாற்றி அமைக்கின்றன. உயரமிக்க பகுதிகளுக்குக் குடியேறிய மக்களிடையே கருவளத்தன்மை குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.\n\nபாலைநிலத் தகவமைப்பும் வறண்ட வெப்பத் தகவமைப்பும்\n\nபாலை நில மக்கள் தம் வாழ்க்கையமைப்பிற்கு ஏற்பப் பல தகவமைப்புகளை ஏற்றுள்ளனர். இந்நிலத்தின் மக்களைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்து இவர்களின் வாழ்க்கைத் தகவமைப்புகளை அறிந்துள்ளனர். பெரும்பாலும் பாலை நிலத்தில் குடியேறும்போது அச்சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாவதற்கு 15 முதல் 30 நாட்கள் வரை பிடிக்கும் என அறியப்படுகிறது. இவர்களிடையே குறைவான நாடித் துடிப்பும் வியர்வை வெளியேறும் வீதம் மிகுதியாதலும் காணப்படும். பாலை நில வாழ்க்கைக்கு நன்கு தகவமைந்த மக்களின் உடல் உயரமாகவும் கை கால்கள் நீண்டும் மெலிந்தும் இருக்கும். உயரமான உடலமைப்பு உடலின் பரப்பை மிகுதிப்படுத்தி விரைவில் உடலின் வெப்பத்தைக் குறைத்துக் கட்டுப்படுத்தும். மெலிந்த உடல்கள் கொழுப்புப் பொருளைப் பயன்படுத்தி வெப்பத்தின் ஊடுருவலைக் குறைத்து, உடலை வேகமாகக் குளிர்ந்த நிலையை அடையச் செய்யும். பாலைநில மக்களின் வியர்வையில் உப்பின் அடர்த்தி குறைந்து காணப்படும். இத்தன்மை இரத்தக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகளையும் தசைப் பிடிப்புகளையும் தடுக்கிறது. சூடான் நாட்டில் வாழும் நைல் ஆற்று மக்களைப் பாலைநிலத் தகவமைப்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் காட்டுவர்.\n\nஇவர்களது வாழ்க்கையமைப்பின் ஒவ்வொரு நிலையினையும் உடலியங்கியல்சார் மானிடவியலார் அறிகின்றனர். உயிர்சார் காரணிகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அடிப்படைப் பண்பாட்டுத் தகவமைப்புகளான உடை, உறைவிடம், உணவு முதலானவற்றை எடுத்துக் கொண்டு அந்த அமைப்புகள் இவர்களின் உயிர்சார் காரணிகளோடு தொடர்பு கொண்டுள்ள முறைகளை ஆராய்வர். இவர்கள் இறுக்கமற்ற ஆடைகளை அணிந்து உடலுக்கும் வளி மண்டலத்துக்கும் இடைவெளி ஏற்படுத்துகின்றனர். இதனால் எளிதில் உடல் வெப்பம் குறைகிறது. இவர்கள் அணியும் காலணி காலின் வெளி விளிம்பிலிருந்து அனைத்துப் பக்கங்களிலும் ஓர் அங்குலம் வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. இது தரையிலிருந்து வெளிப்படும் வெப்பத்தைக் காலின்மீது மிகுதியாகப் படாமல் தடுக்கிறது.\n\nஇனப்பெருக்க முறையிலும் பாலைநில மக்களிடையே மாற்றங்கள் காணப்படுகின்றன. பிறந்த குழந்தை ஒரு நாளைக்குச் சராசரியாக 1000 கிலோ கலோரிகளைத் தன் தாயிடமிருந்து பெறுகிறது. இதனால் தாய் உடனடியாகக் கொழுப்புச் சத்தினை மீட்டுக் கரு முதிர்ச்சி அடைய முடியாமற் போகிறது. இதனால் குழந்தை தாயிடமிருந்து பாலைக் குடிக்கும் காலம் மிகுதியாகிறது. தாயின் கருக்கொள்ளும் காலமும் நீட்டிக்கப்படுகிறது. ஆப்பிரிக்கப் பாலை நிலப் பழங்குடிகளான குங் புசுமென் (Kung Bushman) குடிகளின் உணவு முறையில் விலங்கு, தாவரப் புரோதச் சத்து மிகுதியாக உள்ளது. மாவுச் சத்தும் கொழுப்புச் சத்தும் குறைவாக உள்ளன. இதனால் உடலின் கொழுப்புச் சத்தின் விகிதமும் உடல் எடையின் விகிதமும் மாறுவதால் மாதப்போக்கு கால தாமதமாகிறது. இதனால் முதிர்ந்த கருமுட்டையைச் வெளிப்படுத்துவதில் காலம் தாமதப்படுகிறது. குங்புசுமென் மக்களிடையே ஒரு குழந்தையைப் பெற்ற தாய் சராசரியாக நான்கு ஆண்டுகள் கழித்தே மறு குழந்தையைப் பெறுவதாக இவர்களை ஆய்வு செய்த மக் ஆர்தர் (Mc Aruther) கூறுவர்.\n\nமனிதர்களின் மீது ஒளியின் பாதிப்பு\n\nமனித உடலியக்கத்தை ஆராயும் உடலியங்கியலார் சூழ்நிலையில் ஒளியின் (Light) தன்மையையும் அது மக்களின் வாழ்க்கை அமைப்பில் ஏற்படுத்தும் மாறுதல்களையும் அறிவர். சூரிய ஒளியிலிருந்து மனிதன் நேரிடையாக ஆற்றலைப் பெறுகிறான். முன்னர்க் கூறியது போன்று ஒளியின் தன்மைக்கேற்ப உடலியக்கச் செயல்கள் தகவமைந்து ஏனைய உடற்கூற்று மண்டலத்தின் அமைப்பை மாற்றவல்லது. அமெரிக்காவில் மிசுசௌரி (Missouri) மாநிலத்திலுள்ள மக்களின் 71–91 விழுக்காடு வைட்டமின் ‘D’ சத்து, இரத்தத்திலுள்ள D இல் இருந்தும் அதன் சார்பான பொருள்களிலிருந்தும் பெறப்படுகின்றன. இது அப்பகுதியின் சூரிய ஒளியுடன் நேரடியாகத் தொடர்புற்றதாகும். போதுமான சூரிய ஒளி பெறாத குழந்தைகள் என்புருக்கி (Rickets) நோய்க்கு ஆளாகின்றனர். இந்நோயை வைட்டமின் ‘D’ மிகுந்த உணவை உண்டும் புற ஊதாக்கதிர்களைத் (Ultra Violet Rays) தோலின் மீது படச்செய்தும் குணப்படுத்துவர்.\n\nஉலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சூரிய ஒளியின் அளவு ஒரே அளவாக இருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆண்டு முழுவதும் சீராக இருப்பதில்லை. உடலின் மேற்றோல் உடல்வெப்ப நிலையைச் சீராக வைத்திருப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. அடிப்படையில் தோலின் அமைப்பில் மக்களினங்களுக்கிடையே வேறுபாடுகள் இல்லையாயினும் தொடர்ந்து பலகாலமாகச் சூரிய ஒளியின் தாக்கத்திற்கு உட்படும்போது வெளிர் நிறமிகளையுடைய மக்கள் நீக்கிரோ மக்களைப் போலல்லாமல் சிறிய அளவிலான மாற்றத்தைப் பெறுகின்றனர். இதைப் போன்றே வெண்மை நிறத் தோலினையுடையவர்கள் (Leucoderms), மஞ்சள் நிறத் தோலினையுடையவர்கள் (Xanthoderms), கருமை நிறத் தோலினையுடையவர்கள் (Melanoderms) முதலான முப்பெரும் இனத்தவர்களிடையே காணப்படும் உடல் அமைப்புகளை உடல்சார் மானிடவியலார் ஆராய்ந்துள்ளனர்.\n\nதாம்சன், பக்சுடன் (Buxton) ஆகியோர் பல்வேறு இனக்குழுக்களிடையே மூக்கு, தலை, முகம் ஆகியவற்றின் தகவமைப்புப் பண்புகளை ஆராய்ந்த போது, இவை சூழல் அமைப்பிற்கேற்பச் சில பண்புகளில் குறைந்த அளவிலான மாற்றங்களையாவது பெற்றுவிடுகின்றன எனக் குறிப்பிடுகின்றனர். சராசரி வெப்பநிலை குறைந்த பகுதியிலுள்ள மக்களின் மூக்கின் அளவு (Nasel Index) குறைவானதாகும். இவர்களது ஆய்வின்படி ஈரப்பதத்தைக் காட்டிலும் வெப்பநிலையே மூக்கின் அமைப்பைப் பெரிதும் மாற்றுகிறது எனக் கணக்கிட்டுள்ளனர்.\n\nமங்கோலியர்கள் கொண்டுள்ள தாழ்ந்து அகன்ற வட்டமான முகமானது இப்பகுதியின் படிமலர்ச்சிக் காலத்தில் வறண்ட குளிர் கால நிலையின் தாக்கமேயாகும். பனி அடர்ந்த காலநிலையின் தாக்கத்தினால் இவர்களின் மூக்குக் குறுகியும் கன்ன எலும்புகள் மெலிந்தும் காணப்படுகின்றன.\n\nஉயர மிகுந்த மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் வாழ்ந்த மனித மூதாதையர்களிடமிருந்து தோன்றிய மனித உடலமைப்பு உயரமிகுந்த பகுதிகளில் வாழ ஏற்றதாக இல்லையெனச் சூழலியலார் கூறுகின்றனர். உலக மக்கள் தொகையின் 10 மிலியன் மக்கள் 3000 மீட்டர்கள் உயரமிகுந்த பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களுள் தென் அமெரிக்காவில் உள்ள பெரும் பகுதியில் செல்லும் ஆண்டீசு மலைத் தொடரிலும் இதர பகுதியிலும் 80 விழுக்காட்டினர் வாழுகின்றனர். இதைத் தவிர்த்து நேபாளம், இமாலயப் பகுதியிலும் குறிப்பாக இலடாக்குப் பகுதியிலும் பெரும்பான்மையோர் வாழுகின்றனர். இவர்களின் உடலமைப்பினை ஆராய்ந்த உடலியங்கியல்சார் மானிடவியலார் பல மாறுபட்ட பண்புகளைக் கண்டறிந்துள்ளனர். இப்பகுதிகளில் வாழும் மக்கள் அகன்ற மார்பினையும் குறைந்த உயரத்தினையும் கொண்டுள்ளனர்.\n\nஉடலியங்கியல்சார் மானிடவியலார் மக்களிடையே காணப்படும் நோய்களையும் அவற்றை அம்மக்கள் குணப்படுத்தும் முறைகளையும் கண்டறிவதில் நாட்டம் கொண்டுள்ளனர்.\n\nமக்களிடையே நோய் பரவலுக்கு அவர்கள் கொண்டுள்ள பண்பாட்டு நடைமுறைகளும் வழக்கங்களும் பெரிதும் காரணமாகின்றன. பழங்குடி மக்களிடையே காணப்படும் மாதப்போக்கு முறை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பண்பாட்டிலும் மாதப்போக்கு நிகழ்விற்குத் தனித்தனியான நடத்தைமுறைகள் காணப்படுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்கக் கங்குரு (Kanguru) பழங்குடிகளிடையே மாதப்போக்குடைய பெண் அன்றாடச் செயல்களிலிருந்து விலக்கப்படுகிறாள். விளை நிலங்களிலும் தோட்டங்களிலும் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீரோடைகளில் ஆண்கள் குளிக்கும் இடத்திற்குக் கீழாகக் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாள். ஆசுத்திரேலியப் பழங்குடிகளான அருண்டா (Arunt) குடிகளிடையே மாதப் போக்குக் காலத்தில் வரும் இரத்தமும் இனப்பெருக்க உறுப்புகளிலிருந்து வரும் எவ்வித இரத்தமும் நிலை குலைந்த வாழ்வை வளப்படுத்தும் என நம்புகின்றனர். இதைப் போன்றே ஆண்குறியின் நுனித்தோல் அகற்றப்படும்போது வெளிப்படும் கருத்திசுவை சாவா (Java) மக்கள் உலரவைத்துத் தூளாக்கி கருவளம்பெற உண்பர். சில பிரேசில் நாட்டு இந்தியர்களிடையே கருத்திசுவின் அனைத்துப் பகுதியையும் உண்ணும் பழக்கம் உள்ளது. சில பழங்குடிகளிடையே கருத்திசுவும் மாதப்போக்கு இரத்தமும் மருந்தாகக் கொள்ளப்படுகின்றன.\n\nஉடல்சார்ந்த அனைத்துச் செயல்முறைகளையும் உடலியங்கியல்சார் மானிடவியலார் அவர்களின் வாழ்க்கைச் சூழலுடனும் பண்பாட்டுச் சூழலுடனும் ஒப்பிட்டு ஆராய்த்து அவற்றின் தன்மையை அறிகின்றனர். இது இயற்கையோடு கொண்ட பண்பாட்டுத் தகவமைப்பையும் பண்பாட்டின் இதர அமைப்புகளுடன் பொருந்திய தொடர்பினையும் விளக்குவதாகும்.\n\nஇது தவிர்த்து உடலியங்கியல்சார் மானிடவியலார் மக்களின் பொருள்சார் பண்பாட்டின் அமைப்புகளான இருப்பிடம், தொழிற்கருவிகள், பிற உடைமைப் பொருள்கள் அனைத்தும் வாழ்க்கையின் செயல்களோடு கொண்டுள்ள இணக்கமுறை, தகவமைப்பு முதலானவற்றை அறிகின்றனர். எம்.சே.\n\nதுணை நூல்கள்\n\nAlbert Damon, Physiological Anthropology, Oxford University Press, New York, 1975.\n\nBaker, P.T., The Biology of High Altitude Peoples, Cambridge University Press, Cambridge, 1978.\n\nEmilio, F.M., Human Adaptability: An Introduction to Ecological Anthropology, Westview Press, Coloroda, 1979.\n\nMani, M.S., Fundamentals of High Altidude Biology, Oxford & IBH Publishing Company, New Delhi, 1974."}}