{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t92bsmvg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t92bsmvg/", "kind": "article", "headword": "அக்கரா", "romanization": "akkarā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.346443+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கானா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர்; அந்நாட்டின் மிகப்பெரிய நகரம்.", "body_ta": "கானா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர்; அந்நாட்டின் மிகப்பெரிய நகரம். கினி வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் சிறப்பான வாணிக மையமாகும். கானா நாட்டின் கோகோ விளையும் உள்நாட்டுப் பகுதிகளுடன் அக்கரா (Accra) மாநகர் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகருக்குக் கிழக்கில் 26 கி.மீ. தொலைவில் உள்ள தெமா (Tema) என்ற புதிய தொழிற்சாலை நகருக்கும் இந்நகருக்கும் இடையே இருப்புப்பாதைத் தொடர்புண்டு. அக்கராவில் ஆழ்நீர் செயற்கைத் துறைமுகம் ஒன்றும் உள்ளது. ஓல்டா ஆற்று (Volta river) நீர்மின் திட்டம் அக்கரா, தெமா ஊர்களுக்கு மின்சக்தி அளிக்கிறது. இங்குள்ள விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவுகிறது.\n\nஅகன்ற சாலைகளையும் அழகிய தோட்டங்களையும் மணற்பாங்கான கடற்கரைகளையும் கொண்டது இக்கால மாநகரம் அக்கரா. இங்குள்ள அரசு கட்டிடங்கள் மிக உயரமானவை. கானா 1957–இல் விடுதலையான பின்னர்ப் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பெற்றன. நாடாளுமன்றப் பெருமன்றம் வெள்ளையர் ஆட்சியின்போது கட்டப்பட்டது. வெப்பம் மிகுந்த மண்டலத்தில் அமைந்துள்ளதால், அக்கராவின் பல பகுதிகளில் பழந்தரும் மரங்கள் பெருகி வளர்ந்துள்ளன. அக்கரா கானா நாட்டின் கல்வி மையமாகவும் திகழ்கிறது. கானாவின் அறிவியல் கழகத்தின் தலைமையிடமும் இதுதான். இங்குக்\n\nஅக்கரா நகரம்\n\nகானா நாட்டின் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நகருக்கு அண்மையில் 1948–இல் இலெகான் (Legon) என்னுமிடத்தில் கானாப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது.\n\nஅக்கரா நகரம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் உருவானபோது, போர்ச்சுகீசியர், தச்சியர் (The Dutch), தேனியர் (The Danes) போன்ற அயலவர் கட்டிய மூன்று கோட்டைகள் இதன் அடித்தளமாக அமைந்தன. இக்கோட்டைகள் அடிமை வாணிகத்திற்காக அமைக்கப்பெற்றவை. இவை கி.பி. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசமாயின. அக்கரா கி.பி. 1876-இல் கோல்டு கோசுட்டு (Gold Coast) என்னும் பெயர் கொண்ட ஆங்கிலக் குடியேற்றப் பகுதியின் தலைநகராயிற்று. கோல்டு கோசுட்டே பின்னர்க் கானா (Ghana) வாயிற்று. இதன் மக்கள் தொகை 6,37,000 (1980)."}}