{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qewv2fwq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qewv2fwq/", "kind": "article", "headword": "அசாந்தி", "romanization": "acānti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.921870+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வடமேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) வாழும் வரலாற்றுப் புகழுடைய ஒரு மக்களினம் அசாந்தி (Ashanti) எனப்படும்.", "body_ta": "வடமேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) வாழும் வரலாற்றுப் புகழுடைய ஒரு மக்களினம் அசாந்தி (Ashanti) எனப்படும். இவ்வின மக்கள், சூடான், காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக வாழ்கின்றனர். இம்மக்கள் தொகை ஏறத்தாழ 7,50,000 ஆகும்.\n\nஇவ்வினத்தவர் கொண்டிருக்கும் ‘தங்க மணை’ (Golden Stool) அரசுச் சார்புடையது; புனிதமானது. இன ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் குறிக்கும் சின்னம். இதனை அம்மக்கள் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் அரசியல் தலைவருக்கென்று அமைக்கப்பட்டுள்ள இச்சின்னத்தின்மீது இதன் புனிதத்தன்மை நோக்கி அத்தலைவரும் அமர்வதில்லை.\n\nதங்க மணையுடன் அசாந்தித் தலைவன்\n\nஇவர்கள் வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் தொழில்களாகக் கொண்டவர்கள். இரும்பு, களிமண், மரம் ஆகியவற்றால் சிறந்த கலை வேலைப்பாடுகளைச் செய்வதிலும் இவர்கள் வல்லவர்கள், இம்மக்கள் கடந்த காலங்களில் மனிதனை உண்ணும் பழக்கமுடையவராய் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களிடையே பலதாரமணம் (Polygamy) நிகழும். முறையற்ற சேர்க்கை (Adultery) கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. மணமகன் தான் மணம் முடிக்க விரும்பும் பெண் வீட்டிற்கு 20 அம்புகளைக் கொடுப்பதன் மூலம் திருமண ஒப்பந்தம் ஏற்படுகிறது. பெண்கள் மிகச் சிறு வயதிலேயே மணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வினத்தவரிடம் தந்தைவழிக் குலங்கள் (Patriclans) பரவிக் காணப்பட்டதுடன் அவை ஒரே மாதிரியான சமூக வழக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எளிய மக்கள் தாங்கள் சார்ந்திருந்த குலத்திற்குள் திருமணம் புரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அரச பரம்பரையில் வந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசாந்தி இனத்தவரின் அமைப்பியல் குறியீடுகளை (Structural Symbols) ஒட்டிய பல்வேறு குலங்களின் நம்பிக்கையின்படி, ஒரு மனிதனுக்கு இரண்டு ஆவிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அசாந்தி மதமானது முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அசாந்தி இனத்தவரைப் பொறுத்தவரையில், இவர்களது கடவுள் நம்பிக்கை மிகவும் தெளிவற்றது. இவர்களிடம் நிலவும் மந்திரம், பில்லி சூனியம் பற்றிய நம்பிக்கை முதலியன குறிப்பிடத்தக்கவை. உடல் நலக் குறைவு, இறப்புப் பற்றிய கவலைகள் தங்களிடம் உள்ள பழி சூழ் போக்கினால் உண்டாகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த மாய மந்திர சக்தியைப் பறவைகட்கு நஞ்சினைச் செலுத்தி அறியலாம் என நம்புகின்றனர். முற்காலத்தில், இக்காரணத்திற்காக மனிதர்கட்கே நஞ்சினைச் செலுத்துவது உண்டு. இத்தகைய கொடிய மந்திரக்காரனை அம்பு எய்து கொன்று விடுகின்றனர். அன்றி, உரிய இழப்பீட்டுத் தொகையும் கேட்பர். ஆ.செ."}}