{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "py97usap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/py97usap/", "kind": "article", "headword": "இலக்குமி தோத்திரம்", "romanization": "ilakkumi tōttiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.691527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தமிழகத்தில் சக்தி வழிபாடு பெருகிய காலத்தில் கலைமகள், திருமகள், கொற்றவை போன்ற பெண் தெய்வங்களின் மீது, போற்றிப் பாடல்கள் இயற்றி வழிபடும் மரபு வளர்ந்தது.", "body_ta": "தமிழகத்தில் சக்தி வழிபாடு பெருகிய காலத்தில் கலைமகள், திருமகள், கொற்றவை போன்ற பெண் தெய்வங்களின் மீது, போற்றிப் பாடல்கள் இயற்றி வழிபடும் மரபு வளர்ந்தது. இவ்வகையில் ஐந்து பாடல் கொண்ட பஞ்சகம் எட்டுப் பாடல் கொண்ட அட்டகம், பத்துப் பாடல் கொண்ட ‘பத்து’ போன்ற சிறிய துதி நூல்கள் பலவாகத் தோன்றலாயின. துதிவகையில் தனித்து ஆக்கப்பெற்ற இச்சிறு நூல்களேயன்றி, புராணம் போன்ற பெரிய நூலின் இடையே துதி வகையாக இடம் பெற்ற சில பாடல்களை எடுத்துத் தனியாக அமைக்கப்பட்ட துதி நூல்களும் தோன்றின. இவ்வகையில் அமைந்த நூல்களுள் ஒன்று இலக்குமி தோத்திரம்.\n\nஇச்சிறு தோத்திர நூல், காசிக்காண்டம் என்னும் தமிழ் நூலிலிருந்து தனியே எடுத்து அமைக்கப்பட்டது. இதனை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ஆவார். இவரது காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.\n\nஇச்சிறு நூலின் பாடல்கள் காசிக்காண்டத்தின் ஐந்தாம் பிரிவாகிய அகத்தியர் விந்தத்தை அடைந்த அத்தியாயத்தைச் சேர்ந்தனவாகும். காசியில் இறைவனை வழிபட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வருங்கால், தம்மைப் பணிந்த விந்திய மலைக்கு வாழ்த்துக் கூறி மேலும் செல்லுவாராயினார். அவர் காசியை மனத்தே நினைத்து வணங்கிக் கொல்லாபுரம் என்னும் ஊர்சேர்ந்து அங்குள்ள இலக்குமிதேவியின் மீது ஐந்து பாடல் இயற்றி வழிபட்டார். அப்பாடல்கள் அந்த அத்தியாயத்தின் 27 முதல் 31 முடிய அமைந்த பாடல்களாக உள்ளன. ‘கொழுதி இசை அளிமுரலும்’ எனத் தொடங்கும் பாடல் இதன் முதற்பாடலாக அமைந்துள்ளது. இதனைத் தனி நூலாகப் பதிப்பிக்கும்போது, ‘மூவுலகும் இடரியற்றும்’ எனத் தொடங்கும் முந்திய பாடலையும், ‘என்றினைய பல கூறி’ எனத்தொடங்கும் பிந்திய பாடலையும் சேர்த்து ஏழு பாடல்களில் இத்துதிநூலை உருவாக்கியுள்ளனர். ‘கர கமலம் முகிழ்த்து நாளும், கழிபெருங் காதலில், தொழுவோர் வினைதீர அருள் கொழிக்கும் கமலக்கண்ணாய்’ என்று இலக்குமியை விளித்து இந்நூலாசிரியர் வேண்டுவது சிறப்பாக உள்ளது. இறுதியில் இத்துதியினைப் பயில்வோர் பெரும் போகம் நுகர்ந்திடுவர் என்றும், இத்துதிப் பாடல் பொறிக்கப்பட்ட ஏட்டினைக் கொண்டுள்ள வீட்டில் வறுமை இராது என்றும் கூறப்பட்டுள்ளது. செல்லூர்க் குமாரசாமி முதலியார் தாம் பதிப்பித்த ‘இலக்குமி புகழ்மாலை’ என்னும் நூலில் இந்துதியினையும் சேர்த்து அச்சிட்டுள்ளார். இந்துதிநூல் சென்னை அரசினர் கீழ்த்திசைக் கலைகள் சுவடி நிலையத்தில் உள்ளது. இலக்குமி தோத்திரம் என்னும் பெயரில் அமைந்த பிற துதி நூல்களும் உள்ளன."}}