{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pg62ru77", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pg62ru77/", "kind": "article", "headword": "சிரை அழற்சி", "romanization": "cirai aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:54.723316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தந்துகிப் படுகையிலிருந்து இதயத்திற்குக் குருதியை எடுத்துச் செல்லும் நாளங்கள், குழல்கள் ஆகியவற்றைச் சிரை (vein) எனலாம்.", "body_ta": "தந்துகிப் படுகையிலிருந்து இதயத்திற்குக் குருதியை எடுத்துச் செல்லும் நாளங்கள், குழல்கள் ஆகியவற்றைச் சிரை (vein) எனலாம். நோய் நிலையில் அது அழற்சியடைந்தால், அதைச் சிரை அழற்சி (phlebitis) என்பர். சிரையின் தசைச் சுவர் மெல்லியதாகவும், தமனிகளை விட அகன்றதாகவும், எண்ணிக்கை மிகுந்ததாகவும் இருக்கும். ஒரு வகையான சிரை மேற்போக்காகவும், ஆழமாகவும் பொதிந்திருக்கும்.\n\nமேற்போக்கான சிரைகள், திசுத் தகட்டில் செல்கின்றன. இவற்றுடன் தமனிகள் செல்வதில்லை. ஆழ் வகைச் சிரைகள், ஆழ்திசுத் தகட்டில் பொதிந்துள்ளன. இவற்றுடன் தமனிகள் செல்கின்றன. முழங்கைக்குக் கீழும், முழங்காலுக்குக் கீழும், பெரும்பாலான சிரைகள் இணையாக அமைந்து, தமனிகளின் பக்கங்களில் காணப்படுகின்றன.\n\nகை கால்களின் சிரைகளுக்கு வால்வுகள் இருந்த போதும், பெரும்பாலான ஏனைய சிரைகளுக்கு வால்வுகள் இல்லை. மேற்போக்கான சிரைகளின் தடுக்கிதழ்கள் சீர் கெடும் போது, புவி ஈர்ப்பு விசையால் சிரைகள் விரிவடைந்து, சுருண்டு, நெளிந்து, நெளி சிரைகளாக (varicose veins) மாறுகின்றன. தடுக்கிதழ்கள் குருதியை இதயம் நோக்கிச் செல்ல விடும்; ஆனால் எதிர்த் திசையில் செல்ல விடுவதில்லை. சிரை மண்டலத்திலுள்ள 4 வகையான அமைப்புகள், சிரையில் குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.\n\nகீழ், மேற் பெருஞ்சிரை அமைப்பு. இங்கு கீழ். மேற் பெருஞ்சிரைகள் வழியாக உடலெங்கும் உள்ள குருதி, வல ஏட்ரியத்தை அடைகிறது. இந்த அமைப்பில், கபாலத்துள் செல்லும் எமிசரி சிரைகள் (emissary veins) இதயத்தின் வல ஏட்ரியத்திற்குச் செல்லும் கரோனரி சைனஸ், நுரையீரல்களிலிருந்து இதயத்திற்குக் குருதியைக் கடத்தும் மூச்சுக் குழல் சிரைகள் ஆகியன அடங்கும்.\n\nபோர்ட்டல் அமைப்பு (portal system). இதில், இரு வகையான தந்துகிகளின் இறுதி அமைப்பை இணைக்கும் குருதி நாளங்கள் உள்ளன. இவ்வமைப்புகள், கல்லீரல், சிறுநீரகம், பிட்யூட்டரி, அட்ரினல் சுரப்பி ஆகியவற்றில் காணப்படுகின்றன.\n\nஅசைகாஸ் அமைப்பு. இது செங்குத்தாக, முதுகு முள்ளெலும்பின் பக்கத்தில் அமைந்துள்ளது. இதில் தடுக்கிதழ்கள் காணப்படுகின்றன. இந்த அமைப்பு, கீழ், மேற்பெருஞ்சிரையுடனும், முள்ளெலும்புச் சிரையுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.\n\nமுதுகு முள்ளெலும்பை ஒட்டிய சிரைகள். மேற்கூறிய எல்லா அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டுள்ள இந்த அமைப்பு, முதுகெலும்புக் கால்வாயுள் உள்ளது. இந்தச் சிரைகளுக்குக் தடுத்கிதழ்கள் இல்லை.\n\nஇட இதயக் கீழறையின் உந்தித் தள்ளும் பணி நுண் தமனிகளிலிருந்து தந்துகிப் படுகைக்குச் செல்லும் குருதியின் அளவு வல ஏட்ரியம், இதயக் கீழறை ஆகியவற்றின் நிலை, எலும்பைச் சூழ்ந்துள்ள தசைகளின் மசாஜ் செய்யும் பணி என்பன சிரையில் குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். மேலும், மார்புக் கூட்டின் உள்ளேயான எதிர்மறை அழுத்தம், புவி ஈர்ப்பு ஆற்றல், சிரைத் தடுக்கிதழ்கள், தமனிகளின் துடிப்பு ஆகியவை சிரைகளின் குருதி ஓட்டத்தைச் சீர் செய்கின்றன.\n\nசிரை அழற்சி. சிரை அழற்சியைச் சிரை உள்ளுறை அழற்சி என்றும், சிரை வெளி உறை அழற்சி என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். கீல் வாதம், மகப் பேற்றுப் பின் நிலை, பெரு மூளைக் காற்றுக் குழிவு, சீழ் பிடித்த நிலை, மேக நோய், நச்சு நிலை, காச நோய், டைஃபாய்டு ஆகிய நோய்களின் போது சிரை அழற்சி தோன்றலாம்.\n\nமேற்போக்கான, காலிலுள்ள சஃபீனஸ் சிரை, உறை கட்டியுடன் அழற்சியடைவதை உறை கட்டிச் சிரை அழற்சி (thrombophlebitis) என்பர். மற்றுமொரு நிலையில், அழற்சியின்றிச் சிரைகளில் உறைகட்டி (phlebothrombosis) தோன்றுகிறது.\n\nஉறைகட்டிச் சிரை அழற்சியில் தொடர் வலி, சிவப்புத் தோல், வலி ஆகியவை காணப்படும். சஃபீனஸ் சிரை போகும் இடங்களில் இவை காணப்படுகின்றன. சில சமயம், இவை கணுக்காலிலிருந்து தொடை இடைப் பகுதி வரை காணப்படும். இத்துடன், ஆழ்ந்த சிரைகளும் பாதிக்கப்படுகின்றன. எதிர் உயிர் மருந்து அளித்தல், விரிந்து சுருங்கும் துணி கொண்டு கட்டுப் போடுதல் ஆகியவை பயனளிக்கும்.\n\nமேற்போக்கான சஃபீனஸ் சிரையைப் போன்றே , ஆழ்ந்த தொடைச் சிரையும் (femoral vein) உறை கட்டிச் சிரை அழற்சியால் பாதிக்கப்படலாம். தொடைச் சிரை, இலியாக் சிரையாக மாறி, கீழ்ப் பெருஞ்சிரையினுள் சேர்கிறது. உறைகட்டி அழற்சி, ஆழ்ந்த சிரைகளில் உண்டானால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.\n\nகுருதித் துகள் அடைப்பு (embolism) ஏற்பட்டு, நுரையீரலின் பணிகள் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படலாம். இந்நிலை மீண்டும், மீண்டும் ஏற்பட்டால், நுரையீரல் குருதி மிகு அழுத்தம் ஏற்பட்டு, இதய—நுரையீரல் நோய் உண்டாகலாம். கூபக அறுவை, சீழ்நிலை, கருக் கலைப்பு, மகப் பேறு, கூபகச் சீழ்க் கட்டி ஆகிய நிலைகளில் சிதைவுகளும், நுரையீரல் சீழ்க் கட்டிகளும், உறைகட்டிச் சிரை அழற்சியும் உண்டாக லாம். கால் வீக்கம் ஏற்பட்டுத் தமனிச் சுருக்கம் ஏற்படலாம். கால் வலி, காய்ச்சல், மிகையான நாடித் துடிப்பு, ஒரு பக்கக் கால் வீக்கம் ஆகியவை தோன்றலாம். திடீரென்று நுரையீரல் பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படலாம். மருத்துவமாகச் சிரையைக் கீறி, உறை கட்டியை அகற்றலாம். அண்மைக் காலமாக, இத்தகைய அறுவை மருத்துவம் கை விடப்பட்டு, ஓய்வு, காலை உயர்ந்த நிலையில் வைத்தல், ஹெபாரின் மருத்துவம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. —மு.கி. பழநியப்பன் நூலோதி. Nandi, Surgery Essentials of Clinical Practice, Fourth Edition, Little Brown Co., Boston, 1982."}}