{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pevubgk3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pevubgk3/", "kind": "article", "headword": "சிரைத் திறப்பு", "romanization": "cirait tiṟappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:54.748863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிரையைத் திறந்து குருதி ஓட்டத்தைச் சீர் செய்வது சிரைத் திறப்பு (phlebotomy) எனப்படும்.", "body_ta": "சிரையைத் திறந்து குருதி ஓட்டத்தைச் சீர் செய்வது சிரைத் திறப்பு (phlebotomy) எனப்படும். சிரையில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுதல், சிரையில் கல்லை அகற்றுதல், சிரை சுருட்டிக் கொள்ளுதலைப் போக்குதல் ஆகிய நிலைகளில் சிரையின் திறப்பினால் குருதி ஓட்டம் சீர்படக் கூடும்.\n\nசாதாரணமாக இம்முறை பெரிய சிரைகளில் ஏற்படக் கூடிய கல் அடைப்பை நீக்கவே பயன்படும். வயிற்றில், கீழ்ப் பெருஞ் சிரை (inferior venacava) அடைப்பை நீக்கவும் இம்முறை பயன்படுகிறது. சிறிய, மிகச் சிறிய சிரைகளில் அடைப்புகளை நீக்க இம்முறை பயன்படுவதில்லை. காலில் உள்ள பெரிய தொடைச் சிரை, கையில் உள்ள காரையடிச் சிரை இவற்றில் ஏற்படும் அடைப்புகளை நீக்க மிகவும் பயன்படும்.\n\nஇம்முறை செய்யுமுன் பின் வரும் வழிகளில், எங்கு அடைப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் மட்டுமே சிரைத் திறப்புச் செய்ய வேண்டும். அவை மூன்று கட்டுச் சோதனை, சிரை வரைவு மூலம் அடைப்பைக் கண்டு கொள்ளுதல் என்பன.\n\nமனிதனுக்கு மயக்க மருந்து கொடுத்து அடைப்புக்கு மேல் உள்ள சிரையை இடுக்கியால் குருதி வருவதைத் தடுத்துச் சிரையை நீண்ட கத்தியால் அறுத்து, அடைப்புகளை அகற்றி, அறுத்த இடத்தைத் தையல் போட்டு, இடுக்கியை எடுத்து விட வேண்டும். இதனால், குருதி ஓட்டம் சீரடையும். சுருட்டிக் கொண்டிருக்கும் சிரைகளையும் சீர் செய்தால், அடைப்புக் கீழ்ப் பகுதி வீக்கம் குறைந்து கால் முன் போலவே இருக்கும். —சொ. நடராசன் நூலோதி. A.J. Harding Rains, Bailey and Love's Short Practise of Surgery, Seventeenth Edition, ELBS, London, 1979."}}