{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "juzpr637", "url": "https://nigandu.oliyonresearch.com/e/juzpr637/", "kind": "article", "headword": "நுரையீரல், சிரைப்பை", "romanization": "nuraiyīral, ciraippai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.547021+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இதனை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.", "body_ta": "இதனை நான்கு வகையாகப் பிரிக்கலாம். புறச் சீதப் படலச் சிரைப்பை (epithelial cyst). இது குழந்தையின் கரு வளர்ச்சியின் போது ஏற்படும் குறைபாடுகளால், உண்டாகிறது. இது பெரிய அளவில் தனித்தோ, பல சிறிய சிரைப்பைகளாகவோ இருக்கலாம். இதன் சுவர்கள் நுரையீரலில் காணப்படும் புறச் சீதப் படலச் செல்கள் மற்றும் சிறிதளவு குருத்தெலும்புத் தசை அல்லது சுரப்பிகளால் ஆனவை.\n\nஎக்ஸ் ஊடு கதிர் வரை படத்தில் ஆய்வு செய்யும் போது, இது கோளமான நிழல்கள் போன்று தோன்றும். இதன் சுவர்கள் மெல்லியவையாகவும், தெளிவாகவும் தெரியும். இதனுள் காற்று, நீர் அல்லது இவை இரண்டுமே இருக்கலாம். இந்நோயின் தன்மை, நுரையீரல் சிரைப்பையின் அளவைப் பொறுத்துள்ளது. இது பெரிய அளவில் இருந்தால், நுரையீரலை இறுக்கும். இதனால், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் முதலிய நோய்க் குறிகள் இருக்கும். இது குறிப்பாகக் குழந்தைகளில் கடுமையான விளைவுகளை உண்டாக்கும். மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி முதலியவையும் இருக்கும். இதற்கான மருத்துவம், அறுவை முறையே; தனித்த சிரைப்பையாக இருந்தால், அறுவை மூலம் சீராக்கலாம். ஆனால், நோய்த் தொற்றுடன் கூடிய பல சிரைப்பைகள் இருந்தால், அறுவை செய்ய முடியாது. நுண்ணுயிர் எதிர் மருத்துகளைக் கொடுத்து, நோயின் கடுமையைக் குறைக்கலாம்.\n\nநுரையீரல் வளியூத்த நீர்ப்பை. இது நுரையீரல் சிற்றறைகளின் இயல்பு நிலைச் சீர் குலைவால் உண்டாகிறது. இது பிறப்பில் ஏற்படும் கேடு (congenital) காரணமாக, நுரையீரலில் நீள் ஆற்றலுடைய திசுக்கள் அல்லது சிறு மூச்சுக் குழாய்களின் குருத்தெலும்பு இரா நிலையால் உண்டாகும். சில சமயங்களில், நுரையீரல் திசுக்களில் அழிவு ஏற்படுவதாலும் உண்டாகும். இதன் விளைவாக, நுரையீரல்கள் இயல்பான அளவுக்கு மேல் விரிவுடைந்து, நுரையீரல் சிற்றறைகளின் சுவர்கள் உடைந்து விடுகின்றன. இந்நிலை சிறிது சிறிதாக அதிகரிக்கும் போது, அருகருகே உள்ள சேதமடைந்த நுரையீரல் சிற்றறைகள் சேர்ந்து, பெரியதொரு சிரைப்பை உருவாகிறது. இதன் சுவர்களில், புறச் சீதப் படலச் செல்கள் இரா.\n\nஇந்நோயின் குறிப்பிடத் தக்க அறிகுறி மூச்சுத் திணறல் ஆகும். இது நல்ல நிலையில் உள்ள நுரையீரல் திசுக்கள் விரிந்த காற்றுப் பையினால் அழுத்தப் படுவதாலும், நுரையீரல் சிற்றறையில் காற்றுப் பரிமாற்றம் சரி வர நடைபெறாமையாலும் ஏற்படுகிறது. பல சமயங்களில், இந்நோயுடன் நெடுநாள் மூச்சுக் குழாய் அழற்சியும் இருக்கும். நுரையீரல் காற்றுப் பை தனித்து இருந்தால், அதனை அறுவை மூலம் அகற்றி விடலாம். ஆனால், இது நுரையீரல் முழுவதும் பரவி இருந்தால், அறுவை செய்ய முடியாது.\n\nஒட்டுண்ணிப் பூச்சிகளால் ஏற்படும் நுரையீரல் சிரைப்பை. இது சாதாரணமாக எக்கைனோகாக்கஸ் கிரானுலோசிஸ் (Echinococcus granulosus) என்னும் ஒட்டுண்ணியால் உண்டாகிறது. இந்தப் பூச்சி, நுரையீரலைப் பாதிப்பதன் மூலம் ஹைடாடிட் சிரைப்பை (hydatid cyst) என்ற நோயை உண்டாக்குகிறது. இது குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் மிகுந்து காணப் படுகிறது. இது தனித்தோ, பல எண்ணிக்கையிலோ காணப் படும். சில சமயங்களில், எவ்விதமான நோயின் அறிகுறியையும் வெளிப் படுத்தாமல் இருக்கும். அறிகுறிகள் இருக்கும் போது, இது மூச்சுத் திணறல், மார்பு வலி, மார்பு இறுக்கம் முதலிய விளைவுகளை உண்டாக்கும்.\n\nமூச்சுக் குழாயில் காயம் இருந்தால், இருமலுடன் குருதி ஒழுக்கு இருக்கும். சில சமயங்களில், இருமலுடன் மிக அதிக அளவில் நீர் கலந்த சளி இருக்கும். இது கடுமையான மூச்சுத் திணறலையும், சில சமயங்களில் மரணத்தையும் விளைவிக்கலாம். இந்நோய்க்கு அறுவையே பயனளிக்கும்.\n\nபோலி நுரையீரல் சிரைப்பை (psudo cysts) சில சமயங்களில் ஏற்படும் நுரையீரல் அழற்சி காரணமாக, நுரையீரலில் குழி உண்டாகிறது. இது பல சமயங்களில், புறச் சீதப் படலச் சிரைப்பையை ஒத்திருக்கும். நாள் பட்ட குழிகளின் சுவர்கள் செதில் புறத் தோலிய செல்களினால் (squamous cells) ஆகியிருக்கும். இந்தப் போலிச் சிரைப்பை ஸ்டேஃபைலோ காக்கஸ், காச நோய், நிமோனிய அல்லது நுரையீரல் சீழ்க் கட்டியினால் உண்டாகலாம். இதன் உண்மைத் தன்மையை நோயின் வரலாறு, நோயின் போக்கு, எக்ஸ் கதிர் ஆய்வு மூலம் கண்டறியலாம். —சி. ஆதித்தன் துணை நூல். A..J. Harding Rains and H.David Ritchie, Bailey & Love's Short Practice of Surgery, Seventeenth Edition, H.K. Lewis & Co., Ltd., London, 1977."}}