{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hph5uaak", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hph5uaak/", "kind": "article", "headword": "சூல் குழல் அழற்சி", "romanization": "cūl kuḻal aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.407972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வெட்டை நோய், சீரற்ற கருக் கலைப்பு, பேறு கால நுண்ணுயிர்ப் பாதிப்பு ஆகியவற்றால் சூல் குழல் அழற்சி (salpingitis) ஏற்படுகிறது.", "body_ta": "வெட்டை நோய், சீரற்ற கருக் கலைப்பு, பேறு கால நுண்ணுயிர்ப் பாதிப்பு ஆகியவற்றால் சூல் குழல் அழற்சி (salpingitis) ஏற்படுகிறது. இரு குழல்களும், சூலகமும் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பு கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறது. நுண்ணுயிரிகள் யோனியிலிருந்து கருப்பையகத்துக்குப் (endometrium) பரவி, அங்கிருந்து சூல் குழலை அடைகின்றன. யோனியின் அமில நிலையும், சூல் பைக் கழுத்தில் நிறைந்து கிடக்கும் காரச் சளியும், சூல் பையின் குற்றிழை அசைவும், நுண்ணுயிரிகள் பரவுவதற்குத் தடையாக உள்ளன. மேலும், கருக் கலைப்பின் போதும், மாத விடாயின் போதும், மகப் பேற்றின் போதும், பாதுகாப்பு எப்பிதீலியம் சிதறி விடுவதால், நுண்ணுயிர்ப் பாதிப்பு உண்டாகலாம். சூல் பையின் மீது செய்யப் படும் அறுவைகளின் போதும், நோய் பரவ வாய்ப்புண்டு. மேலும், சூல் குழலின் அருகேயுள்ள குடல் வால், சிறு குடல், உதரவுறை ஆகியவற்றின் அழற்சியின் போதும், சூல் குழல் பாதிக்கப்படுகிறது. நுண்ணுயிர்ப் பாதிப்பு குருதி நாளம் வழியாகவும், நிண நாளங்கள் வழியாகவும் ஏற்படலாம்.\n\nநோய்க் காரணிகள். கோனோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஹிமாலிடிகஸ், இ. கோலை, ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகியவை நோய் நுண்ணுயிரிகளாகும். அரிதாகக் காச நுண்ணுயிரியும், குழலைப் பாதிக்கிறது. தீவிர சூல் குழல் பாதிப்பில் குழல் வீங்கி, அழற்சியடைந்து உதரவுறைப் பரப்பின் குருதி நாளங்கள் விரிவடைந்து, சீழ் நிலை அடைகிறது. உரிய நேரத்தில், போதிய நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அளித்தால், நோய் சீரடைகிறது. சீழ்க் கட்டி தோன்றி விட்டால், டக்ளசின் பை (pouch of Douglas) வழியாகச் சீழை வெளியேற்றலாம். சூல் குழலைச் சுற்றி ஒட்டுப் பொருள்கள் உண்டாவதால், சூல் குழல் அடைப்பட்டு, மலட்டுத் தன்மை உண்டாகிறது. சூல் குழலில் நீர்மம் தேங்கலாம். சீழ் தேங்கலாம்: நாட்பட்ட அழற்சி ஏற்படலாம்; சூல் குழலும், சூலகமும் சேர்ந்து சீழ்க் கட்டியாக மாறலாம்.\n\nஇந்நோய் நிலையின் போது, அடி வயிற்றில் வலி, காய்ச்சல், மிகையான நாடித் துடிப்பு, குமட்டல், வாந்தி ஆகியவை உண்டாகலாம். யோனி மூலம் நீர்மமோ, சீழோ வெளிப்படலாம். வெட்டை நோய்ப் பாதிப்பில், சிறுநீர் பிரியும் போது, வலி ஏற்படுவதுடன், அல்குல் அழற்சியும் உண்டாகும். உரிய ஆய்வு செய்து, நோய்க் காரணியைக் கண்டு பிடித்து, மருத்துவம் அளிக்க வேண்டும். பொதுவாக, மருத்துவம் அளித்த போதிலும், சில சமயம், சூல் குழலை அறுவை மூலம் அகற்ற நேரிடுகிறது.\n\nவயது குறைந்த இளம் பெண், கருத்தரிக்கக் கருதினால், ஒரு பக்கம் மட்டும் சூல் குழலை அகற்றலாம் அல்லது திறந்து விடலாம். இரண்டு குழல்களும், சூலகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தால், கருப் பையையும், இரு குழல்களையும், சூலகங்களையும் அகற்ற நேரிடும்.\n\nநுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுத்த பின்னரும் நோய் நீடித்தால், சூல் குழலை அகற்ற வேண்டும். சூல் குழல்–சூலக நாட்பட்ட அழற்சி தீவிர நிலையடைந்தால், அறுவை தேவைப்படுகிறது. 40 வயதுக்கும் மேற்பட்ட பெண் அல்லது நிலையாக மாத விடாய் நின்று விட்ட பெண்களிலும், அறுவை மருத்துவமே பயனளிக்கும். —அ.கதிரேசன்"}}