{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fdvksxmu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fdvksxmu/", "kind": "article", "headword": "சூல் பைச் சுருக்க ஊக்கிகள்", "romanization": "cūl paic curukka ūkkikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.458906+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்சிடோசினும், எர்காட் அல்கலாய்டுகளும் சூல் பைச் சுருக்க ஊக்கிகளில் (uterine stimulants) குறிப்பிடத் தக்கவை.", "body_ta": "ஆக்சிடோசினும், எர்காட் அல்கலாய்டுகளும் சூல் பைச் சுருக்க ஊக்கிகளில் (uterine stimulants) குறிப்பிடத் தக்கவை. ஆக்சிடோசின் மைய நரம்பு மண்டலத்தில் தொகுக்கப்பட்டு, பிட்யூட்டரி சுரப்பியின் பின் மடலுக்குக் கடத்தப்படுகிறது. இந்த நியூரோபைசின் என்னும் புரதத்துடன் சுரப்புத் துகள்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.\n\nஹார்மோன் பால் சுரப்புக்குக் காரணமாக இருப்பதுடன், கருப்பையின் மெல்லிய தசை இழைகளைத் தூண்டி, கருப் பைச் சுருக்கத்தையும் ஊக்குவிக்கிறது. மகப் பேற்றை ஊக்குவிப்பதில், இதன் பங்கு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆக்சிடோசினுக்கான சிறப்பு உறிஞ்சிகள், பாலூட்டத்தின் போது மார்பகச் சுரப்பியிலும், சூலின் இறுதியில் கருப் பையின் மீதும் காணப்படுகின்றன.\n\nகருப்பைச் சுருக்கத்தில் ஆக்சிடோசின் முக்கிய பங்கு பெறுவதால், மகப் பேற்றைத் தூண்டப் பயன் படுகிறது. ஆக்சிடோசினும், புரோஸ்டாகிளாண்டின் F20உம் சூல் கால ஆறாம் மாதத்தில் கருக் கலைப்புக்குப் பயன்படுகின்றன. ஆக்சிடோசின், சிரை ஊசியாக அல்லது தசை ஊசியாகச் செலுத்தப் படுகிறது. 5% டெக்ஸ்ட்ரோசில், 10 மில்லி/மி. லி. என்ற அலகில், சிரை வழியாக ஆக்சிடோசின் செலுத்தப் படுகிறது. 30 நிமிடத்தில், 0.25 அலகு என்ற அளவில் கொடுக்கப்படலாம். வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் தெளிப்பானாகப் பயன் படுத்தும் வண்ணம் ஆக்சிடோசின் சிட்ரேட் தயாரிக்கப்படுகிறது.\n\nஆக்சிடோசின் செலுத்தப் படும் போது கவனக் குறைவாக இருந்தால், கருப் பை கிழியக் கூடும். முந்தைய கருப்பை நோய் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். மகப்பேற்றில் முதல், இரண்டாம் கட்டங்களிலும், கருவுயிர்ப்பிலும் ஆக்சிடோசின் கொடுக்கக் கூடாது.\n\nசுருவுயிர்த்த குருதிப் பெருக்கில் எர்காட் அல்கலாய்டு கையாளப்படுகிறது. மெத்தில் எக்கோனோவின் என்ற மருந்து குருதிப் பெருக்கை நிறுத்துவதில் பெரும் பயனளிக்கிறது. கருப்பைச் சுருக்கத்தில் இம்மருந்து பயன்பட்டாலும், குழந்தை இறக்கும் வாய்ப்பிருப்பதால், இதைப் பயன்படுத்துவதில்லை.\n\nஎர்கோனோவினை 0. 2 மி.கி. அலகில் தசை ஊசியாகக் கொடுக்கலாம். மாத்திரையாகக் கொடுப்பதாக இருந்தால், 0.2-0.4. மி.கி. அலகில் 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். இந்நிலையில் குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, குருதி மிகை அழுத்தம் போன்றவை உண்டாகலாம். —மு. கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Charles R. Craig et. al., Modern Pharmacology, First Edition, Little Brown and Co., Boston, 1982."}}