{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fde3mb2e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fde3mb2e/", "kind": "article", "headword": "இல்லம்", "romanization": "illam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.378070+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மனிதன் இயற்கை மாறுபாடுகளிலிருந்தும் சுற்றுச் குழல்களின் வேறுபாடுகளிலிருந்தும் காற்று, மழை, வெப்பம் முதலியவற்றிலிருந்தும் தப்பிப் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலையான கூரையின்கீழ் வாழ முற்பட்டான்.", "body_ta": "மனிதன் இயற்கை மாறுபாடுகளிலிருந்தும் சுற்றுச் குழல்களின் வேறுபாடுகளிலிருந்தும் காற்று, மழை, வெப்பம் முதலியவற்றிலிருந்தும் தப்பிப் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலையான கூரையின்கீழ் வாழ முற்பட்டான். அவன் வாழ்வதற்கு அமைத்த இடமே இல்லமாகும். இவ்வில்லத்தின் அமைப்புக் கற்கால மனிதன் குகைகளில் வாழத் தொடங்கியது முதல் பலதளக் குடியிருப்பு வீடுகள் வரை பல நிலைகளில் படிமலர்ச்சி அடைந்துள்ளது. பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) பல கூறுகளுள் ஒன்றான இல்லம் புவியமைப்பு, சுற்றப்புறம், சூழ்நிலை, காலநிலை, வாழ்க்கை முறை, தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிக் காட்டுகின்றது. மனிதன் தான் வாழ அமைக்கும் இல்லத்தில் மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் வெளிப்படக் காண்பதைக் கொண்டு, ஆதிக்குடிகள் முதல் நகரச் சமூகம் வரையிலான அனைத்து வகையான மக்களிடமும் இல்லத்தின் அமைப்பு முறைகளைக் கண்டறிய முடிகிறது.\n\nஉலகம் முழுவதிலும் வெவ்வேறான இயற்கையமைப்புக்களுடன் வாழும் மக்கள் குழுக்களிடையே அவரவர் வாழும் குடியிருப்புப் பகுதியின் அமைப்புப் பற்றி ஆராயும்போது பல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு மக்கள் குழுவும் தம் வாழ்க்கைத் தொழிலிற்கு ஏற்பத் தம் குடியிருப்புப் பகுதியை அமைத்துக் கொண்டிருக்கிறது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடி மக்கள் பெரும்பாலும் காடு சார்ந்த மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருவதால், இவர்களது குடியிருப்புப் பகுதி மலைசார்ந்த இடங்களில் காணப்படுகிறது. இதைப் போன்றே பாலை நில மக்கள் பாலை சார்ந்த பகுதிகளிலும், மீன்பிடி மக்கள் கடல் சார்ந்த பகுதிகளிலும், அடுக்கு நில வேளாண்மை (Terrace Cultivation) செய்வோர் மலைப்பகுதிகளிலும், நிலையாக வேளாண்மை (Settled Agriculture) செய்வோர் நீர்வளமிக்க சமநிலைப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதியைக் கொண்டிருக்கக் காணலாம். கால்நடைகளை வளர்த்தும் உணவு சேகரித்தும் வாழும் நாடோடிகள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் நிலையற்ற எளிய குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். புவியமைப்பு, இயற்கைச் சூழ்நிலை, ஒவ்வொரு சமூகத்தின் வாழ்க்கைப் பொருளாதாரம் (Subsistence Economy) ஆகியன அனைத்தும் மக்கள் வாழிடப் பகுதியைத் தேர்வு செய்வதில் தலையான பங்கினைப் பெற்றுள்ளன.\n\nகுடியிருப்புகளின் அமைப்பு\n\nகுடியிருப்புப் பகுதிகளின் அமைப்பும் அளவும் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகின்றன. சதுரம், செல்வகம் வட்டம், முக்கோணம் முதலான வடிவங்களில் குடியிருப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. பல குடியிருப்புகள் குறிப்பிடத்தக்க வடிவமில்லாமலும் காணப்படுகின்றன.\n\nதோகன் குடியிருப்பு\n\nஆப்பிரிக்கத் தோகன் (Dogan) மக்களின் குடியிருப்புப் பகுதியின் அமைப்பு மாறுபட்டதும் உற்று நோக்கத் தக்கதுமாகும். இவர்களது குடியிருப்பில் காணப்படும் வீடுகள், பெண்கள் வீடுகள், ஆண்கள் கூடும் வீடுகள், கருமான் பட்டறை, எண்ணெய் எடுக்கும் கல், பலிபீடங்கள் ஆகிய யாவும் மனித உடலில் பல்வேறு உறுப்புகள் பெற்றிருக்கும் இடத்தின் அமைப்போடு தொடர்புற்றவையாகக் காணப்படுகின்றன. கருமான்பட்டறை குடியிருப்புப் பகுதியின் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தெற்கில் ஆண்கள் கூடும் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது தலைப் பகுதியாகக் கருதப்படுகிறது. குடியிருக்கும் இல்லங்கள் மார்பகப் பகுதியிலும் இதற்குச் சற்றுக்கீழ் கையின் நுனிப் பகுதியில் பெண்கள் இல்லங்களும் இதற்குத் தெற்கில் எண்ணெய் எடுக்கும் கல்லும் கிராமப் பலிபீடமும் அமைந்துள்ளன. முன்னது (எண்ணெய் எடுக்கும் கல்) பெண்ணின் இனப் பெருக்க உறுப்பையும் பின்னது (கிராமப் பலிபீடம்) ஆணின் இனப் பெருக்க உறுப்பையும் குறிப்பதாக அமைந்துள்ளன. கிராமத்தின் தெற்குப் பகுதியில் பலி மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை கால் பகுதியைக் குறிப்பனவாகும். (தோகன் மக்களின் குடியிருப்புப் பகுதியைப் படத்தில் காணலாம்) தெற்கு ஆசுதிரேலிய ஆதிக்குடிகள், அந்தமான் தீவினர், மடகாசுகரின் தனாலா (Tanala) ஆதிக்குடிகள் முதலானோரின் இல்லங்களின் அமைப்புகள் மாறுபட்டவையும் உற்று நோக்கத் தக்கனவும் ஆகும். (காண்க: ஆதிக்குடிகளின் இளையர் கூடங்கள்) மலிநோவுசுக்கியின் (Malinowski) தலைசிறந்த மானிடவியல் ஆய்வுகள் திரோபிரியாண்டுத் (Trobriund) தீவினரைப் பற்றியனவாகும். நீயு கினியாவின் (New Guinea) கிழக்கு முனையினை அடுத்துக் காணப்படும் கிரிவினா (Kiriwina) என்னும் திரோபிரியாண்டுத் தீவினரின் குடியிருப்பு அமைப்பு வட்ட வடிவமானதாகும்.\n\nபடத்திலுள்ளபடி திரோபியாண்டுத் தீவினரின் வீடுகள் இரண்டு வட்டங்களில் பெரும்பாலும் அமையப் பெற்றுள்ளன. வெளி வட்டத்தில் இலிசிகா (Lisiga) என்னும் குடியிருக்கும் வீடுகளும் (Dwelling Houses), புனிதத் தன்மைமிக்க உள்வட்டத்தில் வள்ளிக்கிழங்கு மற்றும் இதர வகைகளைப் பாதுகாக்கும் வாய்மா (Bwayma) என்னும் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு வரிசைகளுக்கும் இடையில் காணப்படும் பகுதியே தெருவாகும். உள்வட்டத்தினுள் காணப்படும் பரந்த பகுதியின் வடபகுதியில் நடனமாடுமிடமும், இதற்குத் தெற்கில் திரோபிரியாண்டுத் தீவுப் பழங்குடிகளின் தலைவனுடைய கிழங்கு சேகரித்து வைக்கும் இல்லமும். இதற்குத் தெற்கில் இடுகாடும், இதற்கும் தெற்கில் பழங்குடித் தலைவனின் இல்லமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஈராக்கு நாட்டில் பாயும் யூபரிடிசு, தைகிரிசு (Tigirs) ஆறுகளின் சதுப்பு நிலப்பகுதியில் அமைந்திருக்கும் 60,000 சதுர மைல் பரப்புள்ள மாதன் (Madan) குடியிருப்புப் பகுதி, மாறுபட்ட அமைப்பினைக் காட்டுகிறது நாணற்புல் மிகுந்த இப்பகுதியில் ஒவ்வொரு வீடும் தனித்தனித் தீவாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு வீடும் அதன் அருகில் எருமைகள் தங்கச் சிறு குடிசையும் இதர பயன்பாடுகளுக்காக வேறொரு சிறு குடிசையும் அமைக்கப்பட்டு, மூன்று இல்லங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகக் காணப்படுகிறது. இக்குடியிருப்புப்பகுதியில் வாழும் ஒவ்வொரு வீட்டினரும் அண்டைய குடியிருப்புகளுக்குச் சென்றுவரப் படகுகளைப் பயன்படுத்துகின்றனர்.\n\nதிரோபிரியாண்டுத் தீவு – குடியிருப்பு\n\nபிரேசில் நாட்டுப் பொரோரோ இந்தியர்களின் (Bororo Indians) குடியிருப்பு அமைப்பும் நைசீரியா (Nigeria) நாட்டுத் திவ் (Tiv) பழங்குடிகளின் குடியிருப்பு அமைப்பும் குறிப்பிடத்தக்கவை. வட்ட வடிவில் காணப்படும் இவர்களது குடியிருப்புப் பகுதி, கிழக்கு மேற்காகப் பாதியாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாதியில் அச்சமூகத்தின் அரைக்குழுவும் (Moiety) மறுபாதியில் வேறொரு அரைக்குழுவும் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இரண்டு குழுக்களும் அமைத்திருக்கும் வீடுகள் வட்டமாக ஒரே வரிசையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வட்டத்தில் ஒவ்வொரு கால்வழியினரும் அடுத்த கால்வழி- யினருடன் சற்று இடைவெளியிட்டு, வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். நடுவிலுள்ள திறந்த இடத்தின் மையத்தில் ஆண்கள் கூடும் இல்லம் அமைக்கப்பட்டிருக்கிறது. யாரேனும் ஒரு குழுவினர் நடனத் தளத்தை அமைத்துக் கொள்கின்றனர். இப்பழங்குடிகளுள் ஒவ்வொரு கால்வழியினரும் தனித் தனியான வாழிடப் பரப்பைக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.\n\nஆதிக்குடிகள் முதன்முதலில் அமைத்த வீடு காற்றுத் தடுப்பே (Wind Break) யாகும். இந்த முறையில் அமைக்கப்பட்ட வீடுகள் சிறு குச்சிகளாலும் ஓலைகள், இலைகள் முதலானவற்றைக் கொண்டு வேயப்பட்ட தடுக்குகளாலும் கட்டப்பட்டவையாகும். இவைபோன்ற வீடுகள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் அந்தமான் தீவினர், ஆசுதிரேலியர், தாசுமேனியர் (Tasmanian) முதலான பழங்குடிகளிடையே மிகுந்து காணப்படுகின்றன.\n\nஆதிக்குடிகளின் இல்லங்கள் பல செயற்பாடுகளுக்காகக் கட்டப்பட்டவையாகும். இம்மக்களிடையே நிலையாகக் குடியிருக்கும் வீடுகள், இளையர்கூடங்கள் (Dormitory), காவல் குடில்கள் (Watch Houses), தானியக் கூடங்கள், கால்நடை இல்லங்கள், பூப்படையும் இல்லங்கள் (Puberty Houses}, வேட்டையாடும் இல்லங்கள் ஆகியவற்றைக் காணலாம். இதன் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் ஏற்றவாறு அதன் அமைப்பும் மாறுபடுகிறது. பொதுவாக, குடியிருக்கும் வீடுகள் தனித்தனியாகவும் சில ஆதிக்குடிகளிடையே பொதுவானவையாகவும் காணப்படும். இதைப் போன்றே மணமாகாத இளைஞர்களும் மணமாகாத பெண்களும் ஒன்றுகூடியோ தனித்தனியாகவோ தத்தம் கூடங்களில் இரவுப் பொழுதினைக் கழிப்பர். முரியர் (Muria), கபர், நாகர் (Naga), ஆசுதிரேலிய, ஆப்பிரிக்க, அமெரிக்க, பிலிப்பைன்சு, போர்னியோ முதலான ஆதிக்குடிகளின் இளையர் கூடங்களின் அமைப்பையும் செயல்முறைகளையும் உற்று நோக்கும்போது பல்வேறு முறைகளைக் காணலாம். அந்தமான் தீவினர் வேட்டைக் காலங்களில் மூன்று வகையான குடிசைகளை அமைக்கின்றனர். (காண்க: ஆதிக்குடிகளின் இளையர் கூடங்கள்). ஆதிக்குடியினரிடையே காவல் குடில்கள் சிறப்பிடம் பெற்றவை.\n\nமேடு பள்ளங்கள் நிறைந்த மலைப் பகுதியில் பயிர் செய்யும் பழங்குடியினரும் அடுக்குநிலப் பயிர் முறை செய்யும் பழங்குடியினரும் தம் பயிர்களை விலங்குகள், கால்நடைகள் முதலானவற்றின் அழிவிலிருந்து காப்பாற்ற நிலப்பரப்பின் நடுவில் அல்லது தகுதியான இடங்களில் மரத்தின் உச்சியில் கிளைகள் நிறைந்த இடத்தில் சிறு குடிசையை அமைத்து, அதிலிருந்து பயிர்களைக் கண்காணிக்கின்றனர். இது போன்ற அமைப்பு, குக்கிசு (Kukis), கேரோ (Garo) ஆகிய வடஇந்தியப் பழங்குடிகளிடையேயும் தென்னிந்தியப் பழங்குடியினராகிய கணிக்கர்களிடையேயும் காணப்படுகிறது. பழங்குடிகளின் வீடுகள் சிறியனவாகக் காணப்படுகின்றமையால் கால்நடைகளையும் தானியம், விறகுகள், காட்டுப் பொருள்கள் முதலானவற்றையும் குடியிருக்கும் சிறு பகுதியில் வைப்பதில்லை. வீட்டை ஒட்டியோ தனியாகவோ இவற்றிற்கென்று தனித்தனிக் குடிசைகள் அமைத்து அவற்றில் வைப்பர். பச்சைமலை, கல்ராயன், ஏலகிரி, சவ்வாது முதலான மலைகளில் வாழும் மலையாளிகள் (Malaiyalis) தமிழ்நாட்டுப் பழங்குடிகளுள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். இவர்கள் வேளாண்மையை முதன்மையாகக் கொண்டுள்ளதால் உணவு சேகரித்து வைக்கும் இல்லம் தேவைப்படுகிறது. இவர்கள் வீட்டின் அருகில் வட்ட வடிவமான சிறு தானியக் களஞ்சியத்தைக் கட்டிக்கூம்பாகக் கூரை வேய்ந்து பாதுகாக்கின்றனர்.\n\nபனிக் கண்டத்தில் வாழும் எசுகிமோ (Eskimo) மக்களின் இல்லங்கள் மிகவும் வேறுபாடானவை. உலகத்தின் முதுகுடி இனங்களிலேயே (Aboriginal races) மிகவும் தனித்து வாமும் இவர்களின் இயற்கையோடிணைந்த தகவமைப்பு உலக மக்களிடையே இவர்களுக்குத் தனிப் பண்பினை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்குச் சைபீரியாவிலும் ஏனைய ஆர்க்டிக்குத்தீவுப் பகுதிகளிலும் வாழும் இவர்களின் இல்லங்களுள் பெரும்பான்மையானவை பனிக்கட்டிகளாலும் பனிப்பாறைகளாலும் கட்டப்பட்டவையாகும். இக்லூ (Igloo) எனப்படும் எசுகிமோவின் அரைவட்ட வீடுகள் ஒரு சிறிய நுழைவாயிலைக் கொண்டிருக்கின்றன. இந்நுழைவாயில் காற்றோட்ட வசதியினைத் தருகிறது. பெரும்பான்மையாகப் பனிப்பாறையில் சாளரம் போன்ற திறப்பினை அமைப்பர். எசுகிமோவினர் பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் முதலான பனிப்பொருள்களைக் குறிப்பதற்கு 100க்கும் மேற்பட்ட சொற்களைக் கையாளுகின்றனர்.\n\nநீலகிரி மலையில் வாழும் தோடர்களின் இல்லம் மானிடவியலாரிடையே சிறப்பிடம் பெற்றதாகும். இவர்களது வீடு அரை நீள் உருளையைப் போன்றதாகும்.\n\nகால்நடை வளர்க்கும் ஆயர்குடி மக்களும் நாடோடி வாழ்க்கை நடத்துவோரும் தோலால் கூடாரம் அமைத்து வாழ்வர். சைபீரிய மக்கள்\n\nபொரோரோ இந்தியர் குடியிருப்பு\n\nமரப்பட்டையைக் கொண்டே கூடாரம் அமைக்கின்றனர்.\n\nவீடுகளின் அமைப்பு\n\nநியூகினிப் (New Guinea) பழங்குடிகளும் மெலனீசியப் (Melanesia) பழங்குடிகளும் அமைக்கும் இல்லங்களில் தூண்களின் அமைப்புப் புதுமையானது. தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் அமைக்கப்படும் இவ்வீடுகளுக்கு மிக நீளமான பருத்த தூண்களை அமைத்து அதற்குமேல் வீட்டைக் கட்டுகின்றனர். நான்கு வரிசைகளாக இத்தூண்கள் நடப்படுகின்றன. வெளிப்புற இருவரிசை தூண்களும் ஆண் உருவத்தில் செதுக்கப்பட்டிருக்கும். வழிபாட்டு இல்லங்களில் பெண் உருவத் தூண்கள் நடப்படுவதில்லை. உலகின் பல்வேறு நாட்டுப் பழங்குடிகளிடையேயும் வீட்டின் தூண்களில் பல உருவங்களைச் செதுக்கி வைக்கும் மரபு காணப்படுகிறது. பப்புவா நியுகினி, திரோபிரியாண்டுத் தீவினர், நாகா (Naga), மயோரி (Maori), சமோவா (Samoa) முதலான ஆதிக்குடியினர் இல்லங்கள், இளையர் கூடங்கள், சமய வழிபாட்டு இல்லங்கள் ஆகியவற்றில் சிற்ப வேலைப்பாடுகள், வண்ணம் தீட்டல், ஓவியம் தீட்டல் ஆகியன செய்து அழகுபடுத்துகின்றனர். ஆதிக்குடியினர் வீடுகள் அமைப்பதில் தனித் திறன் கொண்டுள்ளனர்.\n\nபெரும்பாலான பழங்குடிகள் தங்கள் குலக்குறியினை (Totem) இல்லங்களின் வெளியேயும் உள்ளேயும் பல வண்ணங்களில் வரைந்து வைப்பர். ஒருசில பழங்குடியினர் வீட்டின் எதிரிலோ தம் குடியிருப்பின் மையத்திலோ குலக்குறிக் கொம்பினை (Totem pole) நட்டு வைப்பர்.\n\nமயோரிகளின் வேரி வகெய்ரோ (Whare Whai-kairo) என்னும் பழங்குடி ஆட்சிக்குழு இல்லம் (Council House), உரொங்கோ பாய் (Rongo Pai) என்னும் பொழுதுபோக்கிடம், பட்டகா (Pataka) என்னும் சேமிப்புக்கூடம் போன்ற அனைத்தும் மிகச் சிறந்த முறையிலும் அழகுணர்வோடும் கட்டப்படுகின்றன. மயோரிகளின் இளையர் கூடமான் கோட்டுல் (Ghotul), நாகரின் இளையர் கூடமான மொருங்கு (Morang) போன்றவையும் பல தொழில் நுட்பத்தைக் காட்டுவனவாக அமைக்கப்பட்டிருக்கின்றன.\n\nபோர்னியோத் (Borneo) தீவில் வாழும் பழங்குடிகள் கட்டும் வீடுகள் இருநூறு முதல் முந்நூறு பேர் தங்குவதற்கேற்ப ஐந்நூறு அடிநீளமும் இருபது முதல் முப்பதடி அகலமும் உடையனவாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரே கூரையினையுடைய இவ்வித நீண்ட வீடுகள் தடுப்புச் சுவர்களால் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் பல இரத்த உறவுடைய குடும்பங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். அந்தமான் தீவில் வாழும் சாரவாப் (Jarawa) பழங்குடிகளின் இல்லங்கள் அறுபதடி விட்டம் கொண்ட வட்ட வடிவிலானவை."}}