{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f2j2ur5v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2j2ur5v/", "kind": "article", "headword": "சுற்றுச் சூழல் நுண்ணுயிரியல்", "romanization": "cuṟṟuc cūḻal nuṇṇuyiriyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.796651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் வாழும் நுண்ணுயிர்களைப் பற்றிய அறிவியல் பிரிவாகும்.", "body_ta": "இது பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் வாழும் நுண்ணுயிர்களைப் பற்றிய அறிவியல் பிரிவாகும். நுண்ணுயிர்களின் உருவங்கள் 1 செ.மீட்டரில் நூற்றில் ஒரு பங்கை விடச் சிறியவையாக உள்ளன. வாழ்க்கைச் சூழலின் பல்வேறு இயல்புகளின் அடிப்படையில் பொதுவாக, இவற்றின் உருவங்களை அறிவியலார் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை நூற்புழு (nematode), புரோட்டோசோவா, பாசி, பூசணம், பாக்டீரியா, நச்சுயிரி ஆகியவையாகும். நிலம், நீர், காற்று மண்டலம் ஆகியவற்றில் நுண்ணுயிர்கள் பெருமளவில் வாழ்கின்றன. இவை தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் மேலும், உட்புறமும் உயிரற்ற பொருள்களின் மேலும் வாழ்கின்றன. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, இவற்றின் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபட்டுக் காணப்படுகின்றன.\n\nமண்ணிலும், நீரிலும் பல வகை நூற்புழுக்கள் வாழ்கின்றன. மட்கிய செடிகளின் பகுதிகளை உணவாக உண்ணும் நூற்புழுக்கள் மிகுதியாக நிலத்தில் இருந்த போதும், ஒரு சில மட்டுமே விலங்கினங்களுக்கும், மனிதனுக்கும், தாவரங்களுக்கும் நோய்களை உண்டாக்குகின்றன. புரோட்டோசோவா மண்ணிலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டது. இது மட்கிய பகுதிகளை உணவாக உட்கொள்ளுகிறது.\n\nபாசி இனங்கள் நீரிலும், சதுப்பு நிலத்திலும், ஈரமான பாறைகள், சுவர் ஆகியவற்றின் மேலும் காணப்படுகின்றன. குளோரெல்லா (chlorella) என்னும் பாசி சாக்கடை நீரில் வளர்வதால், அதன் மூலம் பல பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும் சத்துணவு கிடைக்கிறது. ஒரு சில பாசிகள் மட்டும் மரம், செடி ஆகியவற்றின் இலை, தண்டு, பட்டை ஆகிய பகுதிகள் மீதும் வளர்ந்து, சிற்சில கேடுகளை விளைவிக்கின்றன. பூசணம் மண்ணில் வாழும் முக்கியமான நுண்ணுயிராகும். பல்லாயிரக்கணக்கான பூசண வகைகள் மண்ணில் மட்டுமன்றி, நீரிலும், காற்றிலும் வாழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, மண்ணிலும், நீரிலும் உள்ள தாவரங்களையும், விலங்குகளின் கழிவுப் பொருள்களையும் உட்கொண்டு வாழும் தன்மையன.\n\nபாக்டீரியா மண்ணிலும், நீரிலும், காற்றிலும் காணப்படும். மிகக் குளிர்ந்த சூழ்நிலையில், அதாவது, 8°C வெப்ப நிலையில் வளரும் பல பாக்டீரியாக்கள் (psychrophilic bacteria) உள்ளன. சில வகைப் பாக்டீரியா (thermophilic bacteria) 60-75°C வெப்ப நிலையில் நன்கு வளர்ந்து, இனப் பெருக்கமடையும்.\n\nநச்சுயிரிகள் பிற நுண்ணுயிர்களை விட, உருவத்தில் மிகச் சிறியவை. நச்சுயிரிகள் தனித்து உயிர் வாழா; அவை அழியாமல் இருக்கும் செடியினங்கள், உயிரினங்களுடன் தொடர்பு கொண்டுதான் வாழ முடியும். ஒரு கிராம் மண்ணில் ஏறத்தாழ 10 லட்சம் பாக்டீரியாக்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்டினோமைசிட்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூசணங்களும், நூற்றுக்கணக்கான பாசிகளும், நூற்புழுக்களும், பிற இனங்களைச் சார்ந்த நுண்ணுயிர்களும் வாழ்கின்றன.\n\nவிதையைச் சூழ்ந்துள்ள நுண்ணுயிரிகள். நிலத்தில் விதை விகைக்கப்பட்டவுடன், அது நிலத்திலுள்ள நீரை உறிஞ்சிக் கொண்டு, பல வகை வேதி மாற்றங்கள் பெற்று முளை விடுகிறது. விதையின் மேலும், உள்ளும் உள்ள நுண்ணுயிர்களுக்குத் தேவையான உணவும், நீரும் மிகுதியாகக் கிடைப்பதால், விரைந்து வளர்கின்றன. ஆகவே, அவை விதையைச் சுற்றி லும் மிகுதியாகப் பெருக்கமடைகின்றன. அதாவது, முளைக்கும் விதையைச் சுற்றி 1 செ.மீ. தொலைவில் மண்ணிலுள்ளதை விட ஏறக் குறைய, பத்து மடங்கு மிகுதியான நுண்ணுயிர்களைக் காணலாம். பல நுண்ணுயிர்கள் புதிதாகத் தோன்றும் வேர்களின் மேலும், நிலத்திலும் படர்ந்து வளர்கின்றன.\n\nவேர் மண்டலத்தில் நுண்ணுயிரிகள். நுண்ணு யிர்கள் வேரில்லா மண் பகுதியை விட, வேர்களை அடுத்துள்ள மண் பகுதியிலேயே பெருமளவில் வளர்கின்றன. அப்பகுதியை வேர் வெளி மண்டலம் (rhizosphere) எனலாம். வேரைச் சுற்றியுள்ள 1 க. செ. மீ. மண்ணில், வேர் இல்லாத இடத்திலுள்ள அதே அளவு மண்ணை விட, ஏறத்தாழ 10-100 மடங்கு நுண்ணுயிரிகள் செடிகளின் தன்மையைப் பொறுத்தேயுள்ளன. மண்ணில் உரங்களிடுவதாலும் , பிற பண்ணைச் செயல் முறைகளாலும், நீர் பாய்ச்சுவதாலும், பாய்ச்சும் நீரின் தன்மையாலும், வேரைச் சுற்றிலும் வளரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது.\n\nகாற்று மண்டல நுண்ணுயிரிகள். தாவரங்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தாலும், அவற்றைச் சுற்றியும் எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் காணப் படுன்றன. நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை விண்வெளியில் மேல் மட்டத்திற்குச் செல்லச் செல்லக் குறைந்து விடுகிறது. ஈரப் பசை மிகுந்துள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருமளவில் காணப்படுகின்றன. பெருங்காற்று வீசும் இடங்களில், மாறுபட்ட நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. மண் கலந்த காற்றில் நுண்ணுயிரிகள் மிகுந்துள்ளன.\n\nஒரு சூழ்நிலையில், காற்று மண்டலத்தில் வளரும் இரண்டு இனங்களைச் சேர்ந்த செடிகளின் மேல் காணப்படும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், தன்மையும் பலவகையில் மாறுபட்டுள்ளன. அதாவது, ஒரு நிலத்தில் வளரும் கரும்புச் செடியின் இலையில் 1 ச. செ. மீ. பரப்பின் மேலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், தன்மையும் அடுத்து, அதே நிலத்தில் வளரும் பருத்தி அல்லது சோளச் செடியின் இலையில் 1 ச. செ. மீ. பரப்பின் மேலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையில் மாறுபட்டுள்ளன, இவ்வேறுபாட்டிற்கு முதன்மையான காரணம், இலைகளிலிருந்து ஒரு வகைக் கசிவு (exudate) ஏற்படுவதேயாகும். நுண்ணுயிரிகளுக்கான உணவுப் பொருள்கள் அக்கசிவில் காணப்படுவதால், காற்றிலிருந்து இலைகளின் மேல் படியும் நுண்ணுயிரிகள் அனைத்து வகைச் செடிகளின் இலைகளிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் ஒரே அளவு அல்லது ஒரே தன்மையான உணவுப் பொருள்கள் கொண்ட கசிவுகள் வெளியாவதில்லை. ஆகையால், இதை உட்கொண்டு வளரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், செடிக்குச் செடி அவற்றின் பகுதிகளைப் பொறுத்து மாறுபடும்.\n\nஇலையில் மேல் வாழும் நுண்ணுயிரிகளால், செடிகளின் இலைக்கும், பிற பகுதிகளுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. செடியின் மேல் படியும் நோயை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரி முளை விட்டு இலையைத் தாக்கி உட்சென்று நோயை உண்டாக்குகிறது. ஆனால், ஏனைய நுண்ணுயிரிகளோ, இலைக்குள் நுழையாமல், இலையின் மேல் வளர்ந்து, அவற்றின் உயிரணுக்களிலிருந்து ஒரு சில இயைபியற் பொருள்கள் வெளியேறுகின்றன. இப்பொருள்கள் செடிக்குப் பல விதங்களில் பயனளிக்கின்றன. இத்தன்மை படர்ந்துள்ள இலைகளைச் சார்ந்த பகுதிக்கு இலை வெளி மண்டலம் (phylliosphere) என்று பெயர். ஒரு சில செடிகளில் இலை வெளி மண்டலத்தில் வளரும் ஒரு வகை நுண்ணுயிர்கள், அவை வளர்வதற்குக் காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கொண்டு, பிறகு, அவற்றின் உயிரணுக்களிலிருந்து அமினோ அமிலங்களையும், பிற இயைபியற் பொருள்களையும், செடிகளின் இலைகளுக்குக் கிடைக்கச் செய்வதால், செடிகள் நைட்ரஜன் சத்துக் குறைவுடனே வளருகின்றன.\n\nகாற்றில் எண்ணிலடங்காத நுண்ணுயிரிகள் காணப்படுவதால், செடிகளின் இலை, தண்டு, நிலத்தின் மேல் காணப்படும் அனைத்துப் பகுதிகளின் மேலும் பரவி விடுகின்றன. மென்மையாகவும், வழுவழுப்பாகவும் உள்ள செடிகளின் பகுதிகளில் நுண்ணுயிர்கள் மிகுதியாகக் காணப்படுவதில்லை. சொரசொரப்பான இலைப் பரப்பில் மிகுதியாகப் படிகின்றன.\n\nநீர் மண்டல நுண்ணுயிர்கள். நீரில் பல்வேறு நுண்ணுயிர்கள் வாழுகின்றன என 17ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. காற்று மண்டலத்தில் காணப்படும் நீர்த் திவலைகளிலும், நிலத்திலுள்ள கிணறு, குளம், ஏரி, ஆறு, கடல் போன்ற பல்வேறு நீர் நிலைகளிலும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. கடல் நீரில் பலவகை நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. கடலில் ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க, அந்நீரிலுள்ள பாக்டீரியாவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கடலின் அடி மட்டத்தில் காணப்படும் மண்ணில், ஒரு கிராமுக்கு 10 கோடிக்கும் அதிகமான பாக்டீரியா காணப்படும். இந்த எண்ணிக்கை நிலத்தில் ஒரு கிராம் மண்ணில் காணப்படும் பாக்டீரியாவின் எண்ணிக்கையைப் போல பல மடங்கு மிகுதி. கடல்வாழ் உயிரினங்கள் கடல் நீரில் அதிக அளவில் உறுப்பியற் பொருள்களைச் சேர்ப்பதே இதற்குக் காரணமாகும். பாசிகள் தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் பெரும்பான்மையாக வளர்- கின்றன. அவை இறந்த பின், நீரில் காணப்படும் பல்வேறு நுண்ணுயிரிகள் அவற்றைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன.- உணவுப் பொருள்களைத் தவிர, சூரிய ஒளி, வெப்ப நிலை போன்ற ஏனைய சூழ் நிலைகள் நீரில் வாழும் நுண்ணுயிர்களின் தன்மையையும், எண்ணிக்கையையும் மாற்றியமைக்கின்றன.\n\nசாக்கடை நுண்ணுயிரிகள். வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடைக் கழிவுப் பொருள்கள் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் அமிலங்கள், காரங்கள், எண்ணெய், தாவர விலங்கினங்களின் கழிவுப் பொருள்கள் கலந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மழை, கிணறு, ஓடை, ஆறு, நதிகளிலிருந்து சாக்கடைத் திட்டத்தில் சேரும் நீர் ஆகிய பல்வேறு வகையான கழிவு நீருடன் தூய நீரும் கலந்தது. சாக்கடையில் கழிவுப் பொருள்களின் கலவையும், நீரும் கலந்தன. முதல் நிலைச் சாக்கடையில் (raw Sewage) ஒரு மில்லிக்குப் பத்து நூறாயிரம் பாக்டீரியாக்களுக்கும் அதிகமாகக் காணப்படும். இவற்றுடன், பல்வேறு பூசணங்கள், நச்சுயிரிகள், பாக்டீரியா அழிவு நச்சுயிரிகள் (bacteriophages) யாவும் சாக்கடையில் காணப்படுகின்றன. நச்சுத் தடை மலத் தொட்டிகளில் (septic tanks) படியும் நலத் தொட்டிப் படிவு (sludge) நுண்ணுயிரிகளின் செயல்களால் தாக்கப்பட்டு, மட்கும். கூடுதலான வெப்ப நிலைகளில் குறிப்பாக, 55-75°C அளவில் பாக்டீரியாவின் செயல்களால் மலத் தொட்டிப் படிவு மாற்றியமைக்கப்படும். —கா. சிவப்பிரகாசம்"}}