{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ergdngma", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ergdngma/", "kind": "article", "headword": "இலக்குவன்", "romanization": "ilakkuvaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.723777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களுள் ஒருவன்; மூன்றாமவன்; சுமத்திரையின் மகன்.", "body_ta": "தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களுள் ஒருவன்; மூன்றாமவன்; சுமத்திரையின் மகன். இவன் உடன்பிறந்தவன் சத்துருக்கள் ஆவன். இவனுக்கு மூத்தவர் இராமனும் பரதனும் ஆவர். ஆயில்ய நல்லோரையில் கடகராசியில் இவன் தோன்றினன் எனக் கம்பர் குறித்துள்ளார்.\n\nஇலக்குவன் என்னும் பெயர் ‘லக்சுமண’ என்னும் வடமொழிப் பெயருக்கு ஈடாகக் கம்பர் படைத்த தமிழ் வடிவாகும். வான்மீகி முனிவர் ‘செல்வத்தான்’ என்னும் பொருளில், அதாவது இலட்சுமியை உடையோன் என்னும் பொருவில் இச்சொல்லை அமைத்துள்ளார். அறிவுச் செல்வம், ஆன்மிகச் செல்வம் எனப் பல செல்வங்கள் உள. அச்செல்வங்களுள் ‘வழுவிலா அடிமை செய்யும்’ கைங்கரியச் செல்வத்தை உடையவன் என்னும் பொருளில் இப்பெயரை வான்மீகி முனிவர் வழங்கியுள்ளதாகக் கோவிந்தராசர் உரை விளக்குகிறது.\n\nஇலக்குவன்\n\n‘விலக்குதற்கரிய ஆற்றல் உடையோன்’ என்னும் குறிப்பில் இலக்குவன் என்னும் பெயரிட்டதாகக் கம்பர் கூறுவார். ‘இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி’யெனச் சுமித்திரை பெற்றெடுத்த இலக்குவனை ‘இளையவன்’ என்ற சொல்லாலேயே கம்பர் முதன்முதல் அறிமுகப்படுத்துகிறார். இராமனைப் பிரியாது என்றும் உடனிருந்து தொண்டு செய்யும் பேறு இலக்குவனுக்கே வாய்த்ததனால் இராமனுக்கு வாய்த்த தம்பியர் பிறரினும் சிறப்புக்குரிய தம்பி இலக்குவனே என்று குறிப்பது போல ‘இளையவன்’ என்ற சொல்லால் கம்பர் பல இடங்களில் இலக்குவனைக் குறிக்கிறார்.\n\n‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ எனத் திருமாலோடு என்றும் உடனிருந்து எப்படி எப்படியெல்லாமோ அப்பெருமானுக்குத் தொண்டு செய்துவரும் ஆதிசேடனே இலக்குவனாகத் தோன்றினான் என்ற குறிப்பும் உண்டு.\n\nஇலக்குவன் அன்பன், அறவோன், ஆற்றல் வல்லான், அறிஞன் ஆவான். இவன் இராமனுக்கு உகந்தன எல்லாம் செய்தலையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டான். இறைவன்பால் கொள்ளும் பேரன்பிற்கு இலக்குவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவான்.\n\nஇவன் இராமன் நினைந்த போதெல்லாம், நினைந்தவாறெல்லாம் தவறாமல் செயற்பட்டனன். இதனைக் கம்பர் பலவாறு உணர்த்துகிறார். வேள்விப் படலத்தில் விசுவாமித்திரன் அருளிய தேவர் படைகளெல்லாம் ‘இராமா! இளையவன் போல நின்னைப் பிரியாது நீ ஏவியவாறெல்லாம் வினை செய்து நினக்குத் துணையாக நிற்போம்!’ எனக் கூறும்; இக்கூற்றில் இலக்குவனின் தொண்டுநிலை தெளிவாக விளங்குகிறது.\n\nஅண்ணன் இராமன் நலத்தையே தன்னலமாக நினைந்து மகிழ்பவன் இவக்குவன். அவ்வாறே இராமன் கேட்டைத் தன் கேடாக எண்ணிப் பெரிதும் வருந்துபவனும், அக்கேட்டுக்குரிய இடர்களை எதிர்த்துச் சீற்றங் கொள்பவனும் இவனேயாவான். கைகேயி பெற்ற இருவரத்தைக் கேட்டு அவளை இகழ்ந்து இவன் போர்க்கோலம் கொண்டான். ‘கொடியோர்களை அழித்து இராமனைக் கோமானாய்ச் செய்வேன்’ என்று கொதித்தெழுந்தான். வில்லை வளைத்து நாணைத் தெறித்தான்; அவ்வொலி கேட்டு இராமன் ஓடோடிவந்து இவன் சீற்றத்தை ஆற்றினான்.\n\nதன்னோடு கானகத்திற்குத் தொடரும் இலக்குவனைத் தடுக்கும் இராமன்பால் இலக்குவன் கூறும் உரை இருவருக்குமுள்ள இன்றியமையாத் தொடர்பை எடுத்துரைக்கும். உயிராகிய மீனும் நெஞ்சாகிய மலரும் நீர்மையாகிய நீர் இருந்தால் தான் வாழும். நீயிருந்தால்தானே, உன் அன்பு எனக்கு உடன் இருந்தால்தானே நானும் என் உயிரும் வாழ்வோம் என்ற இவனது கூற்றிலிருந்து இதனை உணரலாம்.\n\nஇலக்குவனை ஒருவகையில் ‘வன்தொண்டன்’ என்றும் கூறலாம். இராமன் கூற்றினை மறுத்தும் அவனுக்குப் பணிசெய்துள்ளான். கானகத்திற்கு உடன் வராதே என்று கூறியபோது, இராமனை மறுத்து உடன் சென்று பதினான்கு ஆண்டுகள் உதவினான்.\n\nதிருமாலின் உடைமைகளாகிய ஆதிசேடனே இலக்குவனாகவும், - சங்குச் சக்கரங்களே பரத சத்ருக்கர்களாகவும் இராமனுடன் உடன் பிறந்தன என்பது இதிகாச உண்மை. இறைவனுக்குச் சேடனாகப் (அடிமையாக) பணிசெய்தலில் முதன்மைக்கு உரியவன். அதாவது முதன்மையான, முதலாமலனான அடிமை ஆதிசேடன் ஆகிய இலக்குவன் ஆவன். இதனை அவன் எப்போதும் மறந்ததில்லை. அவன் மறந்தாலும் உண்மையை மறவாத அவன்தாய் சுமித்திரை அவனுக்கு அவ்வப்பொழுது நினைவூட்டி வந்தாள். சுமித்திரையின் கோயிலை இராம இலக்குவர் அடைந்தபோது இராமனின் கதிகண்டு சுமித்திரை கலங்கிச் சோர்ந்தாள். அப்போது ஆங்குக் கைகேயியின் ஏவலர் மரவுரி எடுத்து வந்தளித்தனர். அம்மரவுரிவை ஏற்று இலக்குவன் இராமனுக்குமுன் தான் அணிந்து கொண்டான். சுமித்திரையும் தன் மகன் இலக்குவனை நோக்கி ‘உடன்செல்’ எனப் பணித்தாள். அவள் சொல்லை இராமனோடு உடன் செல்லுதற்கு வாய்த்த அந்தச் சொல்லை – ஏற்ற இன்பத்தில் இராமனுக்கு முன்னே விரைந்து செல்லும் இலக்குவனை நோக்கிச் சுமித்திரை, ‘மகனே! எப்போதும் முன்செல்லாதே, இராமனைப் பின் தொடர்ந்து செல்; தம்பி என்னும் உரிமை பாராட்டாதே. அடியாரைப்போலப் பணி செய்துகிட. இராமன் மீண்டால் திரும்பி வா. அவன் மீள இயலாதவாறு அவனுக்கு ஏதும் கேடு நேரின் நீ முன்னர் முடிதல் வேண்டும்’ என்று பணித்தாள். அன்னை கூறிய இந்த அரும்பணியை இலக்குவன் மறக்கவில்லை. கவந்தன் வாயினுள் நுழைந்து இராமன் சாவேன் எனக் கூறியபோது ‘முன்னே ஆருயிரோடும் முடிவேன்’ என்று இலக்குவன் உயிர்விடத் துணிகிறான்.\n\nதன்னியல்புக்கேற்பத் தாய் சுமித்திரையின் எண்ணத்திற்கியைய அடியவனாய் அன்பனாய் இராமனுக்குப் பணிசெய்து காத்து வருவதலையே கடனெனக் கொண்டவன் இலக்குவன். மேலுமிவன் கங்கைக் கரையிலே இராமனும் சீதையும் உறங்கிய போது வரிவில் ஏந்தி வைகறைவரை இமைக்காது காத்துநின்றான். இயமுனைக் கரையைக் கடப்பதற்குத் தெப்பம் அமைத்து இருவரையும் அதில் இருத்திக் கடக்குமாறு உதவித் தான் இருகையால் நீந்தி அதனைக் கடந்தான்.\n\nசித்திரகூடப் பருவத்திலே இராமனும் சீதையும் தங்கி வாழக் குடிசையொன்று அமைத்துத் தந்தனன். குங்குமச்சேறு கொண்டு, தரளம் அப்பி, மயில்பீலிவிதானம் அமைத்து, அழகிய மூங்கில்களால் பின்னி, மலர் தூவி அமைத்த அந்தக்குடில் தலைவன் தலைவியர்களாகிய இராமன் சீதை ஆகியோரின் நெஞ்சத்தைக் கவர்ந்தது.\n\nஇராமன் அறத்தின் நாயகன். அறத்தை நிலை நாட்டுதற்கே தோன்றியவன். அத்தகு அறங்காத்தலில் இராமனுக்கு இணையாகவும் துணையாகவும் இலக்குவன் அமைந்துள்ளான். அதனால்தான் கிட்கிந்தை நோக்கி வந்த இராம இலக்குவர்களைக் கண்டபோது அனுமன், ‘இவர்களே தருமமாவார்’ என்று எண்ணினான். சுக்கிரீவனும் ‘அன்று தொட்டு இன்றுவரை உலகம் செய்த புண்ணியமெல்லாம் திரண்டு இரு வடிவு கொண்டு இராம இலக்குவர்களாக இங்குத் தோன்றியதோ’ என்று வியந்தான். கண்ணை இமை காப்பது போல வேள்வியை இராமனும் இலக்குவனும் காத்ததன் நுண்பொருள் இதுவே.\n\nதன் உயிர் தந்தேனும் தன்னைச் சார்ந்தவர் உயிரைக் காக்கும் பெரும்பண்பினன் இலக்குவன். இதனைப் பின்வரும் நிகழ்ச்சி புலப்படுத்துகிறது. தன் படைபலம் வீடணனால் அழியக்கண்ட இராவணன், தம்பி என்றும் பாராது மாற்றாரை அழித்து மீளும், மயன் கொடுத்தவேல் ஒன்றினை வீடணன் மேல் வீசி எறிகிறான். அப்போது ‘இது என் உயிரை அழிக்கும்’ என்று செய்வதறியாது கையற்ற தெஞ்சியனாய் வீடணன் கலங்குகிறான். அவ்வேலைத் தடுத்து நிறுத்த இலக்குவன் எய்த அம்புகளும் பிற படைக்களங்களும் பயனின்றி அழிந்தொழிகின்றன. ‘வீடணன் அழிந்தான், பிழைக்க வழியில்லை’ என்று தேவர்கள் கலங்கினர். அப்போது ‘அடைக்கலம் வந்தடைந்த வீடணனைக் காத்தல் என்கடன். அவனைக் கைவிடின் நெடும்பழி வந்து தொடரும். அழிவேன் எனினும் அழியாப் புகழ் பெறுவேன். அறம் வாழும் என்று’ கூறி அனைவரையும் விலக்கித் தன் மார்பில் அந்த வேலினை ஏற்கிறான் இலக்குவன். இவ்வாறு தன்னுயிரைப் பொருட்படுத்தாது தமர் உயிர் காக்கத் துணிந்த இலக்குவனைப் போற்றிப் ‘புறாவின் பொருட்டாகப் புண்ணுறத் தன் உடலை அரிந்த அச்சிபியும் நினக்கு ஒப்பாகான்’ என்று இராமன் பாராட்டுகிறான்.\n\nஇலக்குவன் பேரழகினன். எனினும் பெண்கள் முகத்தை ஏறெடுத்துப் பாராத பேராண்மைச் சான்றோனாகத் திகழ்ந்தான். தன் அண்ணி சீதையின் அணிகலன்களைச் சுக்கிரீவன், குரங்குகள் பொறுக்கித் தந்தனவாகக் கொடுத்த போது, அவற்றுள் காலணிகளை மட்டும் அடையாளங்கண்ட இலக்குவனின் சீர்மையினை இலக்கியங்கள் பலவாறு பாராட்டும். இவன்பால் அமைந்துள்ள இப்பண்பின் மேம்பாட்டைக் கிட்கிந்ததைப் படலத்தில் கம்பர் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். சீதையைப் பிரிந்து வருந்தும் இராமனது துயரைப் பொறானாகி. சொன்னவாறு வந்துதவாமல் உண்டும் குடித்தும் பெண்களோடு உறைந்தும் கடமையை மறந்த சுக்கிரிவன்பால் சீற்றமுற்று, கிட்கிந்தைக் கோட்டைக் கதவை தகர்த்து வாயிலுள் நுழைந்து வருகிற இலக்குவனைத் தடுத்து நிறுத்த அனுமன் தாரையினை அனுப்புகிறான். தாரை தன் ஏவல் மகளிர் பலர் புடைசூழ வாயிலை அடைத்துக் கொண்டு வருகிறாள். முன்வரும் பெண்டிரைக் குறிப்பினால் உணர்ந்த இலக்குவன் நிமிர்ந்து நோக்க அஞ்சித் தலைசாய்த்து வில்லினைத் தரையில் ஊன்றியபடி முன் செல்லாமல் தயங்கி நிற்கிறான். அவ்வாறு தயங்கி நிற்கிற இலக்குவனைப் பார்த்து ‘அப்பா! அறத்தின் நாயகனாகிய இராமனின் திருவடி பிரியாது தொண்டு செய்கிற நீ அவனைத் தனியே விடுத்து இங்கு வந்தது ஏன்’ என்ற தாரையின் உருக்கக் குரல் கேட்டுத் தலைநிமிர்ந்து நோக்கிக் கைம்பெண் தோற்றத்தில் நின்ற அவள் காட்சியைக் கண்டு தன் தாயாரை நினைந்து வருந்தினான்.\n\nஇலக்குவன் வீரமும் வெற்றியும் புகழ்ச்சிக்கும் போற்றுதலுக்கும் உரியனவாக அமைந்துள்ளன. தலைவனாகிய இராமபிரான் ‘என்தம்பி கொதித்திடுமேல் எண்ணாயிரம் கோடி இராவணரும் விண்ணாடரும் ஒரு மூவரும் இவன்முன் நிற்க வல்லார் அல்லர். சீதையின் சிந்தனையைப் போற்றித் தான் கொல்லாது, நான் கொல்வதற்காக இராவணனை விட்டு வைத்துள்ளான்’ என்று இலக்குவனின் ஆற்றலைப் பாராட்டியுள்ளான்.\n\nஇவன்தன் பேராற்றல் பகைவீரர்களாலும் பாராட்டப் பெறுகிறது. அஞ்சா நெஞ்சினனாகவும் அன்பு வீரனாகவும் விளங்கும் கும்பகருணன் ‘திரிபுரம் எரித்த சிவனும் இவனுமே போரில் ஒரு வில்லாளர் ஆவர்’ என்று பாராட்டுகிறான்; வீடணனை இராவணனிடமிருந்து காக்கவல்ல ஒருவன் இலக்குவனே என்றும் குறிப்பிடுகிறான்.\n\nஅனுமன் அங்கதர் தோள்களில் அமர்ந்து இந்திரசித்துவை எதிர்த்து இராம இலக்குவர் போர் தொடங்கி, இமைப்பதன் முன்னம் இராக்கதர் வெள்ளங்களை அழித்தொழிக்கின்றனர். அதனைக்கண்டு இந்திரசித்தன் ‘எங்கும் இம்மனிதர் என்பார் ஒருவரே கொல்’ என்று ராம இலக்குவரின் போர்த் திறனை வியக்கிறான்.\n\nஇராவணனோடு பன்முறை போர் செய்து படைகளைக் காக்கிறான். கும்பகருணன் படைகளை அழித்து அவன் ஆற்றலை மெலிவிக்கிறான். தாருகனையும் அதிகாயனையும் அழிக்கிறான். கும்பகருணனுக்குப் பிறகு தன் ஆற்றலுக்கும் அன்புக்கும் உரியவனாய் இராவணன் போற்றிய இந்திரசித்தனைக் கொன்று தீர்க்கிறான். இறுதிநிலையில் தந்தை தயரதன் இலக்குவனைத் தழுவி இவன் போர் ஆற்றலைப் புகழ்ந்து ‘நீ இந்த உலகில் வெம்பகை துடைத்து அறம் நிறுத்தினை’ என்று பாராட்டுகிறான்.\n\nஇலக்குவன் கூர்த்த அறிவினள். மாரீச மான் முன் இராமன் மயங்கியது போலத் தான் மயங்காத தெளிவினன். மாரீசன் எழுப்பிய மாயக்குரல் கேட்டுச்சீதை போல் கலங்காமல் ‘இராம பிரானை அழிக்க வல்லார் உலகில் எவருமில்லை’ என்ற உறுதியான நம்பிக்கை கொண்டனன். குகனைக் கண்ட அளவிலேயே அவன்தன் கரியபெரிய புறத்தோற்றத்தைக் கடந்து, அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்த கொடிய கூரிய படைஞர்களை மறந்து, ‘இவன் உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்’ என்று அவனது அகப்பண்பினை ஒரு நொடியில் உணர்ந்து இராமனுக்கு அறிமுகம் செய்தான்.\n\nஇராமன் குறிப்பறிந்து, தாங்கள் காட்டுக்கு வந்த காரணத்தைச் சடாயுவுக்குச் சுருக்கமாக உரைத்த திறத்தினன். சடாயுவைச் சுற்றிக்கிடந்த படை பல கண்டு அவனோடு போரிட்டோர் பலரென இராமன் கருதியபோது, ‘இல்லை பல தலைகளோடும் பல கைகளோடும் போரிட்டவன் ஒருவனே. அவன் இராவணனே’ எனத் தெளிந்து கூறியவன் இலக்குவனே.\n\nவாலி எழுப்பிய பல எதிர்ப்புரைகளுக்கு இராமன் தக்க மறுப்புரைகள் வழங்குகிறான். இறுதியில் ‘எதிர்நின்று போரிடாமல் புதரில் மறைந்து வேட்டுவன் விலங்குகளைக் கொள்வது போல், மறைந்திருந்து என்மேல் அம்புவிட்டது நின் வீரத்திற்கும் மரபிற்கும் எவ்வாறு பொருந்தும்?’ என்று கேட்கிறான் வாலி. இதற்கு இராமன் விடைகூறவில்லை. இலக்குவன் தக்க உரைகூறி, வாலியின் மனநிலையை மாற்றி, இராமன்பால் அன்புடையவனாக அவனை ஆக்குகிறான். அவ்வுரை வருமாறு:– ‘வாலி! நின்தம்பி சுக்கிரீவன் முன்புவந்து அண்ணலின் திருவடியை அடைக்கலமாக அடைந்து வேண்டினான். அவன் வேண்டுகோளை ஏற்று, நின்னை எமனுலகிற்கு அளிப்பதாக வரமளித்தனன். இப்போது நின்முன் அண்ணல் தோன்றியிருந்தால் உயிரின்பாலுள்ள ஆசையால் நீயும் அண்ணலை அடைக்கலமாக அடைந்திருப்பாய். அப்போது சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத குறை வந்துசேரும். எனவேதான் மறைந்து நின்று அம்பு எய்தான்’.\n\nமாயாசீதையை அழித்து அயோத்தி செல்வதாகப் போக்குக் காட்டி, அனுமனை ஏய்த்து, நிகும்பலையில் வேள்வி ஒன்று இயற்ற வேண்டி இந்திரசித்தன் மறைகிறான். அனுமன் அரற்றியவாறு அயோத்தி நோக்கி இந்திரசித்தன் ஏகியதாக இராமன்பால் வந்து கூறுகிறான். அப்போது இராமன் அயோத்திக்கு விரைந்து செல்ல உபாயம் யாதுஎனக் கேட்டுக் கலங்குகிறான். இலக்குவனோ, ‘அய்யா இராவணன் வேலுக்கும் பிரமாத்திரத்திற்கும் மயங்கிய என்னைப் போன்ற மெலியனோ பரதன்; இந்த இந்திரசித்து அல்ல எவர்வரினும் மூன்று உலகத்தையும் அழித்து எதிர்த்தவனையும் அவன்தன் இனத்தையும் ஒழித்து நிற்கும் பரதனை அயோத்தி சென்றால் நீங்கள் காணலாம்’ என்று பரதனின் ஆற்றலைத் தக்க இடத்தில் எடுத்துரைத்து இராமனின் கலக்கத்தைப் போக்குகிறான்.\n\nஇவ்வாறு, அன்பிலும் ஆற்றலினும் பண்பிலும் பயனிலும் அறத்திலும் திறத்திலும் சிறந்தோங்கியவன் இலக்குவன். வைணவ மரபின்படி ‘கைங்கரிய சம்பத்துக்கு’ உரியன் இவன்; ஆண்டவனுக்குப் பக்தி செய்து பணியாற்றும் நெறியினைக் கற்பித்துக் கொடுத்த முதல் பாகவதனும் இவனே. பொன்.சௌ."}}