{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dnvtk7vh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dnvtk7vh/", "kind": "article", "headword": "அட்டதிக்கசங்கள்", "romanization": "aṭṭatikkacaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.551783+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விசயதகர அரசர் கிருட்டிணதேவராயரின் அவையில் இருந்த எட்டுப்பெரும் புலவர்கள்.", "body_ta": "விசயதகர அரசர் கிருட்டிணதேவராயரின் அவையில் இருந்த எட்டுப்பெரும் புலவர்கள். அட்டம் என்றால் எட்டு என்றும் திக் என்றால் திசை என்றும் கசம் என்றால் யானை என்றும் பொருள்படும். அவர்கள் 1. அல்லசானி பெத்தண்ணா, 2. நந்தி திம்மண்ணா, 3. பட்டுமூர்த்தி, 4. தூர்சதி, 5. மாதய்யகாரி மல்லண்ணா, 6. அய்யலராசு இராமபத்திரர், 7. பிங்கலி சூரண்ணா, 8. தெனாலி இராமகிருட்டிணா ஆகியோர் ஆவர். அவர்களைத் தவிர சங்குசலா நரசிம்மகவி, வேமண்ணா கனகதாசர் ஆகியோரும் கிருட்டிணதேவராயரின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ வாழ்ந்தவர்கள்.\n\nஅல்லசானி பெத்தண்ணாவுக்கு ஆந்திரக் கவிதா பிதாமகர் என்னும் பட்டத்தைச் சூட்டினார் கிருட்டிணதேவராயர். ஆந்திரக் கவிதா பிதாமகர் என்பதற்குத் தெலுங்குக் காப்பியத்தின் பாட்டனார் என்பது பொருள். அவர் கிருட்டிணதேவராயரின் அரசவைக் கவிஞராகவும் விளங்கித் தெலுங்கிலும் வடமொழியினும் மிகுந்த புலமை பெற்றிருந்தார், அவர் எழுதிய சிறந்த நூலின் பெயர் சுவரோசிசுன சம்பவம் (மனுசரித்திரம்) என்பது. இக்கதையை இவர் மார்க்கண்டேய புராணத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார்.\n\nநந்தி திம்மண்ணா கிருட்டிணதேவராயரின் அவையை அணிசெய்த புலவர் பெருமக்களுன் இரண்டாமிடத்தைப் பெற்றவர். அவர் ஒரு சைவர். அவரது நூலின் பெயர் ‘பாரிசாத பகரணமு’ என்னும் தெலுங்குக் காப்பியமாகும்.\n\nபட்டுமூர்த்தி என்பார் பின்னர் இராமராச பூடணம் என்று அழைக்கப்பட்டார். அவரது நூலின் பெயர் ‘வசுசரித்திரம்’. அது கலைகளுக்கெல்லாம் முத்துப் போன்றது. அவரது பிறிதொரு நூல் நரசபூபாலியம் எனப்படும். அரிச்சந்திர – நளோபாக்கியானம் என்னும் அவரது மூன்றாம் நூல் அரிச்சந்திரன் நளன் ஆகியோர் கதையைக் கூறுகிறது.\n\nதூர்சதி என்ற பெயர் கொண்ட கவிஞரும் ஒரு சைவர்; சொந்த ஊர் காளத்தியாகும். அவர் எழுதிய காளகசுத்தி மகாத்மியம் என்னும் நூல் சிறப்புமிக்கது. காளகசுத்தி திருக்கோயிலைக் குறித்து அவர் ‘சதகம்’ ஒன்றையும் பாடியுள்ளார். அவருடைய நூல்களைக் கிருட்டிணதேவராயர் பெரிதும் போற்றினார்.\n\nமாதய்யகாரி மல்லண்ணாவும் சைவரே. அவரும் கிருட்டிணதேவராயரின் அவைப் புலவராவர். அவர் எழுதிய ‘இராசசேகர சரித்திரம்’, சாளுவதிம்மரின் உறவினரும் கொண்ட வீட்டின் ஆளுநருமான நாதெந்தலா அப்பா என்பாருக்கு உரிமையாக்கப்பட்ட நூலாகும். இந்நூல் பிரபந்த வகையைச் சார்ந்ததாகும்.\n\nஅய்யலராசு இராமபத்திரர் என்பாரைப் பிள்ளை இராமபத்திரர் என்றும் அழைப்பர். அவருக்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர் போலும். இராமராச பூடணம் என்பாரின் உறுதுணையால் அவர் கிருட்டிண தேவராயரின் அன்பைப் பெற்றவர் என்று கருதுவர். அவர் எழுதிய நூலின் பெயர் ‘சகலகதாசார சங்கிரகம்’ என்பதாகும். இந்நூல் புராணக் கதைகளின் சுருக்கமாகும். ‘இராமாப்பயுதயம்’ என்னும் அவர் எழுதிய மற்றொரு நூல் இராமகாதையைக் கூறுகிறது.\n\nபிங்கலி சூரண்ணா அட்ட திக்கசங்களுள் ஒருவராக எண்ணப்பெற்றாலும் கிருட்டிணதேவராயரின் ஆட்சிக்காலத்திற்குப் பின் வாழ்ந்தவர். அவர் எழுதிய இராகவ–பாண்டவ்யம் என்னும் கவிதை, இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஒரே சமயத்தில் கதையாகக் கூறும் நூலாகும். சூரண்ணா எழுதிய பிற நூல்கள் ‘கலாபூரணோதயம்’, ‘பிரபாவதி பிராத்யுமனா’ என்பனவாம்.\n\nதெனாலி இராமகிருட்டிணா சாகாவரம்பெற்ற விகடகவி, கிருட்டிண தேவராயர் காலத்தில் வாழ்வைத் தொடங்கி வேங்கடரின் காலம் வரை வாழ்ந்தவர். அவருடைய விகடகவிகளைக் கேட்டு அரசவை மகிழ்ச்சியில் திளைக்கும், அவர் எழுதிய ‘பாண்டுரங்க மகாத்மியம்’ தெலுங்கு இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் ஐந்து காப்பியங்களுள் ஒன்றாகும். ‘உத்போதசார்ய சரிதம்’ என்னும் நூல், அவர் தொகுத்த பிற நூலாகும்.\n\nமேற்கூறிய எண்மரும் அட்ட திக்கசங்கள் எனப் பெறுவர்."}}