{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bzjy6kxy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzjy6kxy/", "kind": "article", "headword": "செல் பிரிதல்", "romanization": "cel pirital", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:00.827183+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தாவரங்களும், விலங்குகளும் செல்களால் ஆனவை; ராபர்ட் ஹுக் என்பாரே, முதன் முதலாகச் செல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தார்.", "body_ta": "தாவரங்களும், விலங்குகளும் செல்களால் ஆனவை; ராபர்ட் ஹுக் என்பாரே, முதன் முதலாகச் செல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தார். இவர் முதலில், ஒரு மெல்லிய தக்கைத் துண்டை, நுண்ணோக்கி மூலம் பார்த்து, அது பல செல்களைக் கொண்டது எனக் கண்டு பிடித்தார்.\n\n1831ஆம் ஆண்டில், ராபர்ட் பிரௌன் என்னும் ஆங்கில உயிரியல் வல்லுநர், செல்களில் ஓர் அடர்ந்த கோள வடிவப் பொருள் உள்ளது எனக் குறிப்பிட்டார். இதுதான் பின்னர், நியூக்ளியஸ் என்று பெயரிடப் பட்டது. ஷ்லிடன், ஷ்வான் ஆகிய ஜெர்மானிய உயிரியல் வல்லுநர், 1839ஆம் ஆண்டில் முறையாகச் செய்யப் பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், செல் கொள்கையை உருவாக்கினர். அனைத்துத் தாவரங்கள் அல்லது விலங்குகளின் அமைப்பிற்கும், செயல்பாட்டிற்கும் செல்களே அடிப்படை அலகுகள் என்பதும், செல்களில் முன்னரே உள்ள செல்கள் பகுபடுவதாலேயே புதிய செல்கள் உண்டாகின்றன என்பதும், செல் பற்றிய கொள்கைகளாகும். 125 ஆண்டுகளுக்கு முன்னரே, செல்களின் அமைப்பு உறுதிப் படுத்தப்பட்டது.\n\nஉயிரிகள் அனைத்தும் வளர்ச்சி, இனப் பெருக்கம் ஆகிய இரண்டு சிறப்பான பண்புகளைப் பெற்றுள்ளன. இவ்விரண்டும் ஏற்படுவதற்குச் செல் பகுபடுதலே காரணம் ஆகும். அதாவது, ஒரு செல் மீண்டும், மீண்டும் பகுபடுவதால், பல செல்கள் தோன்றுகின்றன. இந்நிகழ்ச்சிக்குச் செல் பகுபடுதல் (cell division) என்று பெயர்.\n\nஒவ்வொரு செல்லிலும், புரோட்டோபிளாசம் என்ற உயிர்ப் பொருள் உள்ளது. அதில், சைட்டோப் பிளாசம், நியூக்ளியஸ் முதலியன உள்ளன. செல் பகுபடுதல் நடவாத போது, நியூக்ளியஸ் ஓய்வு நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. அனைத்துச் செல்\n\nகளின் நியூக்ளியஸ்களும் குச்சி போன்ற அமைப்பு உடைய குரோமோசோம்கள் கொண்டவை. ஒவ்வோர் இனத்திலும், குரோமோசோம்களின் எண்ணிக்கை நிலையாக இருக்கும். மனிதச் செல்களில், 46 குரோமோசோம்கள் உள்ளன. நாயில் 78, பூனையில் 38, வெங்காயத்தில் 16 என இவற்றின் எண்ணிக்கை நிலையாக இருக்கும்.\n\nஓய்வு நிலையில் இருக்கும் நியூக்ளியசில் குரோமோசோம்கள் தனித் தனியாகத் தெரிவதில்லை. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, குரோமேட்டின் வலையாகக் காணப்படும். விலங்குச் செல்களின் நியூக்ளியசிற்கு வெளியில், சென்ட்ரியோல் என்ற அமைப்பும் உள்ளது. செல் பகுபடுதலில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை மறைமுகப் பிரிவு, குன்றல் பிரிவு என்பனவாகும்.\n\n1887ஆம் ஆண்டு வீஸ்மேன் என்பார், குன்றல் பிரிவு என்றால், இரு மயச் செல்லிலிருந்து (Diploid) ஒரு மயச் செல்லாகக் (haploid) குறைவதே என்று எண்ணினார். ஆனால், அவர் அவ்வாறு நினைத்ததே சரி என்று கண்டு பிடிக்கப் பட்டது. அதிகமான குரோமோசோம்களிலிருந்து செல் பகுபடுதல் மூலம், ஒரு குரோமோசோமாகக் குறைக்கப் படுவதே குன்றல் பிரிவு (meiosis) எனப் பட்டது. குன்றல் பிரிவு என்பது, ஒரு தனிப்பட்ட சிறப்பான செல் பிரிவு ஆகும். இது பால் வேறுபாடான செல்களைத் தோற்றுவிக்கும் போது, ஏற்படுகிறது. இவ்வாறு செல் பிரியும் போது, குன்றல் பிரிவு ஒவ்வொரு கருவுறுதலுக்குப் பின்பும், குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஒரே அளவாக நிர்வகிக்கிறது. பல செல்லுடைய அல்லது பின் தோன்றி உயிரிகளில் (metazoans) ஆண் விந்தணு, பெண் விந்தணு உருவாகும் போது, இக்குன்றல் பிரிவு ஏற்படுகிறது. மேலும், தாவரங்களில் விதைகள் (spores) உண்டாகும் போதும், குன்றல் பிரிவு ஏற்படும்.\n\nகுன்றல் பிரிவிலும், மறைமுகப் பிரிவின் பல சிக்கலான மாற்றங்கள் போலவே, நியூக்ளியசிலும், சைட்டோபிளாசத்திலும் நிகழும். இப்பிரிவில், இரண்டு நியூக்ளியஸ் பிரிவு அடுத்தடுத்து ஏற்படும். குரோமோசோம்கள் ஒரு முறை பிளவு படுவதால், நான்கு சேய்ச் செல்கள் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும், ஒற்றைச் செல்லுடையன. இவ்வாறு, இரண்டு குன்றல் பிரிவுகள் ஏற்படுவதால், இவற்றிற்கு முதல் குன்றல் பிரிவு, இரண்டாம் குன்றல் பிரிவு என்று பெயர்.\n\nமுதல் குன்றல் பிரிவில், இரண்டு சிறிய சேய்ச் செல்கள் தோன்றும். இவை ஒவ்வொன்றும், ஒற்றைச் செல்லுடையவையாகும். இரண்டாம் குன்றல் பிரிவில், இந்த இரண்டு செல்லும் மறைமுகப் பிரிவில் உள்ளபடி நான்கு பிரிவுகளில் சென்று, மேலும் இரண்டு செல்களைத் தோற்றுவிக்கும். அவ்வாறு குன்றல் பிரிவிலுள்ள பல நிலைகள் கீழ்க் காணுமாறு உள்ளன. அவை: முதல் குன்றல் பிரிவு: (புரோஃபேஸ் I. மெடாஃபேஸ் I, அனாஃபேஸ் I, டெலாஃபேஸ் I,) இரண்டாம் குன்றல் பிரிவு : (புரோஃபேஸ் II, மெடாஃபேஸ் II, அனாஃபேஸ் II, டெலாஃபேஸ் II).\n\nமுதல் குன்றல் பிரிவு. முதலில் செல்லின் நியூக்ளியஸ் சைட்டோப்பிளாசத்திலுள்ள நீரை உறிஞ்சிப் பருத்துக் காணப்படும். நியூக்ளியசின் பருமனளவு மூன்று மடங்காகப் பெருகிக் காணப் படும். இதுவே, நியூக்ளியஸ் மாறுதல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இம்மாறுதல்களுக்குப் பிறகு, இந்தச் செல் முதல் குன்றல் பிரிவிலுள்ள முதல் புரோபேஸ் நிலைக்குச் செல்லும்.\n\nபுரோஃபேஸ் I–இது ஒரு நீண்ட நேரமுள்ள நிலையாகும். இந்நிலையில்தான், குரோமோசோம்கள் பெரும் மாற்றங்களை அடைகின்றன. DNAஇன் அளவு இரட்டிப்பாகிறது. DNAஇன் சேர்க்கை (synthesis) இந்நிலையின் தொடக்கத்தில்தான் நடக்கிறது.\n\nமுதல் குன்றல் பிரிவிலுள்ள புரோஃபேஸ் Iஇல் காணப்படும் இளநிலைகள்\n\nலெப்டோட்டீனின் முந்தைய நிலை (preleptotene). இந்நிலை மறைமுகப் பிரிவிலுள்ள முந்தைய புரோஃபேஸ் நிலையை ஒத்திருக்கிறது. இந்நிலையிலுள்ள குரோமோசோம்கள் ஒல்லியாகவும், தனித் தனியாகவும் வலிவற்ற இழைகள் போன்றும் காணப் படும்.\n\nலெப்டோட்டீன் (leptotene). இந்நிலையில் குரோமோசோம்கள் மிகப் பெரிய நீண்ட இழைகள் போன்று காணப்படும். சென்ட்ரியோல்கள். ஒவ்வொரு எதிர்த் துருவத்திற்கும் நகரத் தொடங்கும். இதனால், குரோமோசோம்களும் சென்ட்ரியோல்கள் நகர்ந்த திசைக்கு ஏற்றவாறு நகர்ந்திருக்கும். இந்தச் சிறப்பான அமைப்புக்குப் பூச்செண்டு (bouquet) என்று பெயர்.\n\nசைகோட்டீன் (zygotene). இந்நிலையில், இரண்டு குரோமோசோம்கள் இணை நிலையில் இருக்கும். இரண்டு குரோமோசோம்களும், ஒன்றையொன்று ஒத்திருக்கும். ஒவ்வொரு குரோமோசோமும், தாய். தந்தையிடத்தில் இருந்து வந்ததாகும். பிறகு, இரண்டு குரோமோசோம்களுக்குள் இணைவு ஏற்படும். இந்த இணைவு, குரோமோசோம்களின் நீள்வாட்டத்தில் ஏற்படும். இதில் காணப்படும் மூன்று வகை நிலைகள் பின்வருமாறு:\n\nமுன் கடை நிலையிலுள்ள இணைவு. இந்நிலை இணையான குரோமோசோம்களின் கடை நிலையில் ஏற்பட்டுச் சென்ட்ரோமியரை நோக்கிச் செல்லும். இடை நிலை இணைவு. இவ்வகை இணைவு முறை சென்ட்ரோமியரில் தொடங்கிக் குரோமோசோம் கரங்களின் இடை நிலைக் கரங்களை நோக்கிச் செல்லும்.\n\nபல நிலை இணைவு. இவ்வகை இணைவில், குரோமோசோம்கள் ஓரிடத்தில் தொடங்குவதோடு, பல இடங்களிலும் இணை ஏற்படக் கூடும்.\n\nபாக்ட்டீன் (pachytene or pachynema). இந்நிலையில் இணைவு முடிவுற்று, இரண்டு குரோமோசோம்களும், நீள் வாட்டத்தில் சுருக்கப் படுவதால், குரோமோசோம்கள் தடித்தும், பருத்தும் காணப் படும். பாக்ட்டீனின் இடை நிலையில் குரோமோசோம்களின் நீள் வாட்டத்தில் பிளவு ஏற்பட, அவை இரண்டாகக் காணப்படும். சென்ட்ரோமியர் இடம் மட்டும் பிரியாது. குரோமோசோம்கள் நான்கும், ஒன்று சேர்ந்த கூட்டமாக இந்நிலையில் காணப்படும். அக நியூக்ளியேஸ் (endonuclease) என்னும் நொதி நியூக்ளியசில் அதிகரிப்பதால், இவ்வாறு பிளவு ஏற்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு குரோமோசோமிலும் உள்ள சிறிய கரங்கள் ஒன்றுடன் ஒன்று மாறிக் கொள்ளும். இவ்வாறு ஒத்த நிலையிலுள்ள குரோமோசோம்களுள், குரோமோசோம் தண்டுகள் மாறிக் கொள்ளும் நிகழ்ச்சிக்குக் குறுக்கேற்றம் (crossing over) என்று பெயர். இந்நிலையில் DNAஇன் கூட்டு (synthesis) சற்று மிகையாக ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர். நியூக்ளியோலசின் நிலை இது வரை மாறவே மாறாது.\n\nடிப்ளோடின். ஒத்த குரோமோசோம்கள் ஒவ்வொன்றும், ஒன்றையொன்று எதிர் நோக்கிப் பிரியத் தொடங்கும். கவர்ச்சி விசைக் குறைவு ஏற்படுவதே, இவ்வாறு பிரியக் காரணமாகும். ஆனால், இந்நிலையில் இது முடிவுறாது. குரோமோசோம்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ள இடத்தைத் தவிரப் பிற இடங்களில் பிரிக்கப் பட்டிருக்கும்.\n\nடையாக்கைனெசிஸ் (diakinesis). இந்நிலையில், குரோமோசோம்கள், தடித்தும், பருத்தும் காணப் படும். குரோமோசோம்கள் டிப்ளோட்டீன் நிலையில் இருந்தவாறே பிரியாமல் இருக்கும். இது இரண்டாம் நிலை வரை (metaphase) நீடித்திருக்கும். இந்நிலையில், நியூக்ளியச் சவ்வும், நியூக்ளியோலசும் மறைந்திருக்கும். இழைகள் தோன்றும் இது, புரோஃபேஸ்–Iஇன் கடை நிலையை அறிவிக்கிறது.\n\nமெட்டா ஃபேஸ்-I. இந்நிலை வரையிலும், குரோமோ சோம்கள் பிரியாத நிலையில் நீடித்திருக்கும். குரோமோசோம்களிலுள்ள சென்ட்ரோமியர் ஒன்றை யொன்று பார்த்த வண்ணம், செல்லின் இடைப் பகுதியில் (equatorial plate) அமைந்திருக்கும்.\n\nஅனா பேஸ்-I. இந்நிலையில்தான், ஒவ்வொரு குரோமோசோமும் எதிர்த் திசையில் பிரியத் தொடங்கும். இழை நார்களின் சுருக்கமே இதற்குக் காரணம்.\n\nடிலோ ஃபேஸ்–I. இந்நிலையில் ஒவ்வொரு குரோமோசோமும் தனித் தனியாகப் பிரிந்து, ஒவ்வொரு நியூக்ளியசைத் தோற்றுவிக்கும். இதற்குப் பிறகு, சைட்டோபிளாசத்தில் பிளவு ஏற்பட்டு, இரண்டு செல்களாகப் பிரியும். இவ்வாறு, முதல் குன்றல் பிரிவின் முடிவில், இரண்டு ஒத்த குரோமோசோம்களைக் கொண்ட செல்கள் தோன்றும்.\n\nஇரண்டாம் குன்றல் பிரிவு. இந்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மறைமுகப் பிரிவு நிலையை ஒத்திருக்கும். இது முதல் குன்றல் பிரிவு முடிந்தவுடன், தொடங்கும்.\n\nபுரோ ஃபேஸ்–II. இந்நிலையில், நியூக்ளியஸ் சவ்வு மறைகிறது. குரோமோசோம்கள் தெரியும். ஆஸ்டர் கதிர்களும், இழை நார்களும் தோன்றும்.\n\nமெட்டா ஃபேஸ்–II. இந்நிலையில், குரோமோசோமிலுள்ள இழை நார்கள் மையத்தில் இணைக்கப் பட்டுச் செல்லின் இடைப்பட்ட பகுதியில் குரோமோசோம்கள் அமைக்கப் பட்டிருக்கும்.\n\nஅனா ஃபேஸ்–II. இந்நிலையில், குரோமோசோமின் மையப் பகுதி இரண்டாகப் பிளவு பட, இரண்டு சிறிய குரோமோசோம்கள் தோன்றும். இழை நார்களின் சுருக்கத்தால், இவ்வாறு ஏற்படுகிறது.\n\nடெலோ ஃபேஸ்–II. இந்நிலையில் சேய்க் (daughter) குரோமோசோம்கள் மீண்டும் நியூக்ளியசாக அமைக்கப் படும் சைட்டோப்பிளாசத்தில் பிளவு ஏற்படும். இவ்வாறு, குன்றல் பிரிவின் முடிவில், நான்கு சிறிய குரோமோசோம்கள் ஒரு செல்லிலிருந்து உருவாகும். ஒவ்வொரு குரோமோசோமும், ஒற்றைப் படைக் குரோமோசோம் எண்ணைக் கொண்டது.\n\nசெல் மறைமுகப் பிரிவு. இம்முறையில் நியூக்ளியசில் பல்வேறான மாற்றங்கள் ஏற்பட, அதிலுள்ள பொருள்கள் செல்லுக்குள்ளேயே அசைகின்றன. செல்லில், சில இழை போன்ற பொருள்கள் தோன்றுவதால், மறைமுகப் பிரிவு (mitosis) என்று பெயர் கொடுக்கப்பட்டது. Mitosis என்ற கிரேக்கச் சொல்லுக்கு இழைகள் என்று பொருள். இப்பிரிவின் நான்கு நிலைகள்: புரோ ஃபேஸ் அல்லது முதல் நிலை, மெட்டா ஃபேஸ் அல்லது இரண்டாம் நிலை, அனா ஃபேஸ் அல்லது மூன்றாம் நிலை, டெலா ஃபேஸ் அல்லது நான்காம் நிலை என்பன.\n\nபுரோஃபேஸ் அல்லது முதல் நிலை. இது செல் பிரிதலுக்குத் தொடங்கும் நிலையைக் குறிக்கிறது. செல் ஓய்வு நிலையில் இருக்கையில், நியூக்ளியசில் குரோமோசோம்களைக் கொண்டுள்ள குரோமேட்டின் இழைகள் பின்னிக் கொண்டு, சிக்கலாகக் காணப் படுகின்றன. செல் பிரிதலின் போது, நியூக்ளியசில் பல வகையான முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சைட்டோப்பிளாசம் சற்றுத் தடிமனாகவும், ஒட்டக் கூடிய பிகபிசுப்பான நிலையிலும், ஒளி விலகலடையும் நிலையிலும் காணப் படும். எதிர் மாறாக, நியூக்ளியோபிளாசம் சற்றுக் குறைந்த பிசுபிசுப்பான நிலையில் தோன்றும். உடனடியாக, குரோமோசோம்களின் கரங்கள் (arms) தடித்தும் குட்டையாகவும் காணப் படும்.\n\nஒவ்வொரு குரோமோசோமும், ஒவ்வொரு முறை செல் பிரியும் போதும், ஒரு குறிப்பிட்ட வடிவத்தையும் அளவையும் கொள்ளும். அதே சமயம், ஒவ்வொரு குரோமோசோமும் தன்னைப் போன்ற இன்னொரு குரோமோசோமைச் சுற்றியுள்ள பொருள்களினின்று சேர்த்துக் கொள்ளும். ஆகவே, ஒவ்வொரு குரோமோசோமும் தன்னைப் போன்ற பிறிதோர் இழையை அருகில் இணையாகப் பெற்றுக் கொள்ளும். இச்சமயத்தில், குரோமோசோமின் மையப் பகுதி (centro-mere) தெளிவாகத் தெரியும். செல் பிரிவில் இது முக்கியப் பங்கு கொள்கிறது.\n\nசெல்லிலுள்ள நடு உறுப்பு (central body) என்ற பகுதியும், செல் பிரிதலில் முக்கிய பங்கு எடுத்துக் கொள்கிறது. இதன் நடுவில், இரண்டு சென்ட்ரியோல்கள் எனப் படும் மணி போன்ற உருவங்கள் தோன்றும். நியூக்ளியசுக்கு அருகில் வந்து, இரண் டாகப் பிரியும் இவ்விரு பகுதிகளில், ஒவ்வொன்றைச் சுற்றிலும், இழைகள் நட்சத்திரக் கதிர்களைப் (astral rays) போன்று அமைகின்றன. இக்கதிர்களைப் பெற்ற நடு உறுப்புப் பகுதிக்கு ஆஸ்டர் என்று பெயர். இரு ஆஸ்டர்களும் நியூக்ளியசின் எதிர் எதிர்த் துருவங்களை நோக்கிப் பிரியும்.\n\nசென்ட்ரியோல்களை எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் பார்த்தால், உருளை வடிவில் காணப் படும். ஒவ்வொன்றும் 500மில்லி மைக்ரான் நீளமும், 150 மில்லி மைக்ரான் அகலமும் உடையது. ஒரு சென்ட்ரியோலின் நீள அச்சு மற்றொன்றுக்குச் செங்குத்தாக இருக்கும். சென்ட்ரியோவின் உறை, ஒன்பது சிறிய உருளைகளை உடையது. ஒவ்வொரு சிறிய உருளையும் 150–200 மில்லி மைக்ரான் அகலமுடையது.\n\nகுரோமோசோம்கள் குறிப்பிட்ட உருவத்தைப் பெற்றதும், நியூக்ளியஸ் சவ்வு (nuclear membrane) உள்ளேற்கப்பட்டு மறைந்து விடுகிறது. குரோமோசோம்கள் நியூக்ளிய ரசத்தில் மிதந்து காணப் படுகின்றன. அதே சமயத்தில், சைட்டோப்பிளாசத்தில் சில இழைகள் உண்டாகின்றன. அவை இரு ஆஸ்டர்களுக்கும் இடையில் பரவுகின்றன. இந்த இழைகள் ஓர் இரட்டைக் கூம்பு வடிவம் பெற்று, ஆஸ்டர்களை நோக்கிக் குவிகின்றன. இவ்விழைகளின் கற்றைக்கு, இரட்டைக் கூம்பு வடிவப் பொருள் (spindle shaped body) என்று பெயர். குரோமோசோம்கள் செல்லின் நடுப் பகுதி அல்லது மைய ரேகையை (equator) நோக்கி நகர்ந்து, இரட்டைக் கூம்பு வடிவ இழைகளின் நடுவில் வந்து, நேராக அமைகின்றன. இவை இரு ஆஸ்டர்களினின்றும், சம தொலைவில் உள்ளன. இந்நிலையே புரோ ஃபேஸ் அல்லது முதல் நிலையின் இறுதியைக் காட்டுகிறது.\n\nமெடா ஃபேஸ். குரோமோசோம்களின் இரட்டை அமைப்பு. இத்துறையில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு குரோமோசோமும், இரண்டாகப் பிரிந்திருப்பது போல் தோன்றும். இந்நிலையில்தான், குரோமோசோம்கள் ஒழுங்கற்ற முறையில் செல்லின் நடுப் பகுதிக்குச் சென்று, செல்லின் நடுப் பகுதித் தட்டின் மேல் அமையும். குரோமோசோம்கள், குரோமோசோமிலுள்ள சென்ட்ரோமியர் மூலம், இழைகளால் ஒட்டிக் கொண்டிருக்கும். இதனால், குரோமோசோம்களின் இரண்டு கரங்களும் ஒன்று திரட்டப் பட்டிருக்கும். ஆனால், உண்மையில், முன்பு கூறிய படி, ஒவ்வொன்றும் தானாகவே இரட்டைப் படுத்திக் கொண்டுள்ளது. ஒவ்வோர் இணையிலுள்ள இரு பிரிவுகளும் ஒன்றை ஒன்று எல்லாவற்றிலும் ஒத்திருக்கின்றன.\n\nஅனா ஃபேஸ் அல்லது மூன்றாம் நிலை. இந்நிலையில், மக்கட் குரோமோசோம்கள் பிரிந்து, எதிர் விசையை உண்டாக்கி, இரட்டைக் கூம்பின் ரேகையை விட்டு, எதிர் எதிர்த் துருவங்களுக்கு, இரட்டைக் கூம்பின் மைய இழைகளுடன் செல்கின்றன. எதிர்ப் பக்கம் சென்றவுடன், அங்குள்ள சென்டிரோசோ முடன் (centrosome) சேருகின்றன. இது அனாஃ பேசின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கிறது.\n\nடெலோஃபேஸ் அல்லது நான்காம் நிலை. செல் பிரிதலின் இந்த இறுதி நிலையில், நியூக்ளியஸ் திருப்பி அமைக்கப் படுகிறது. குரோமோசோம்கள் இணை கின்றன. வலைப் பின்னலைப் போல அமைந்து, குரோமேட்டின் மணிகள் (granules), அதில் சிதறினாற் போன்று தோன்றும். இந்நிலையின் போது, ஆஸ்டர் அமைப்பு மறைகிறது. நியூக்ளியல் சவ்வு மீண்டும் தோன்றுகிறது. இதே சமயத்தில், நியூக்ளி யல் திருப்பி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, சைட்டோப்பிளாசத்தில் ஒரு பிளவு தோன்றி ஆழமாகிக் கொண்டே போகும். இறுதியில், இரண்டு பகுதிகள் உண்டாகின்றன. ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியசும், சென்ட்ரோசோமும் உள்ளன.\n\nஇவ்வகையான சிக்கலான மாற்றங்கள் ஏற்படுவதன் நோக்கம், மக்கட் செல்களில் குரோமேட்டின் சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்பதேயாகும். குரோமோசோம்கள்தாம் பாரம்பரிய குணங்களை மக்கட் செல்களுக்குக் கடத்துகின்றன. இக்குரோமோசோம்களை வைத்தே, பால் வேறுபாடு (sex difference) உண்டாகிறது.\n\nஒரு செல், மறைமுகப் பிரிவு நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம், மற்றொரு செல்லுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடக் குறைவாகவோ, மிகுதியாகவோ இருக்கும். பொதுவாக 30 நிமிடம் முதல் மூன்று மணித் துளிகள் வரை எடுத்துக் கொள்ளும். சில தாவரங்களில், கைனடின், ஜிப்பரலின் போன்ற ஹார்மோன்கள் இந்நிலை ஏற்படத் தூண்டும் காரணிகளாக அமையும்.\n\nமறைமுகப் பிரிவின் இன்றியமையாமை. ஒவ்வொரு சிறிய செல்லிலுள்ள குரோமோசோம் இணைகள், முன்னோரின் செல்லிலுள்ள (parent cell) குரோமோ சோம்களை ஒத்திருக்கும். எனவே, இவை பாரம்பரியக் குணங்களை எடுத்துச் செல்லும் காரணிகளாக அமைகின்றன.செல் பிரிதலில் சைட்டோப்பிளாசத்தின் பங்கு. செல் பிரிதலின் போது, ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. நியூக்ளியஸ் பிரிதல் (karyokinesis) என்பதில், குரோமோசோம்கள் மிக நுட்பமாக இரண்டு சேய்ச் செல்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. சைட்டோப்பிளாசம் பிரிதல் என்பது சைட்டோப்பிளாசம் பிரிந்து, இரண்டு செல்கள் உண்டாவதைக் குறிக்கிறது. இவ்விரண்டாம் நிகழ்ச்சியின் போது,. பிரிதல் நடை பெறும் செல்லின் குறுக்கே நடுவில் ஒரு சுருங்கு வளையம் (contractile ring) தோன்றும். இது ஆக்டின் இழைகள், மையோசின் இழைகள் ஆகியவற்றால் ஆனது. இந்தச் சுருங்கு வளையம், செல்லின் நடுப் பகுதியில், ஒரு குறுக்கத்தை ஏற்படுத்திச் செல்லை இரண்டாக்குகிறது. விலங்குச் செல்களில், இவ்வாறாகச் சைட்டோப்பிளாசம் பிரிந்து, இரண்டு சேய்ச் செல்கள் உண்டாகின்றன; ஆனால், தாவரச் செல்களில் செல் பிரிதலின் இறுதியில், மிகு விரைவில் செல்லின் நடுப் பகுதியில் புதிய சவ்வு ஒன்றும், அதன் பின் செல் சுவர் ஒன்றும் உண்டாக்கப் படுகின்றன; இதனால், சைட்டோப்பிளாசம் இரண்டாகப் பிரிகிறது. தாவரச் செல்களில் கோல்கை உறுப்பே, இப்புதிய சவ்வை உருவாக்குகிறது.\n\nவிலங்குச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல். செல்லின் நடுப் பகுதியில், அதன் விளிம்பில் ஏற்படும் சுருக்கத்தால் ஒரு பிளவு ஏற்பட்டுச் செல் இரண்டாகப் பிரிகிறது. இதற்கான சுருங்கு வளையம் செல்லின் பரிதியைச் சுற்றி, ஆக்டினால் ஆன நுண் இழைகளால் உண்டாகிறது. மேலும், தசைச் செல்களில் முக்கியமான மையோசினும் சுருங்கு வளையத்தில் இருக்கிறது. ஆக்டினும், மையோசினும் வினை புரிந்து, அத்துடன் ATPஇன் சிதைவால் உண்டான ஆற்றலால் ஒரு சுருக்கும் விசை (contractile force) உற்பத்தி ஆகி, அதன் காரணமாகச் சுருங்கு வளையம் உள் நோக்கி இழுக்கப் படுகிறது. இது செல்லின் மேற்பரப்பில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்திச் செல்லை, இரண்டு பகுதிகளாகக் கிள்ளி எடுக்கிறது. சுருங்கு வளையம் - பிளாஸ்மா சவ்வின் உட்புறப் பரப்பில் இணைந்துள்ளது.\n\nசெல் பிரிதலின் இறுதி நிலையில் சுருங்கு வளையம் இரண்டு சேய்ச் செல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு குறுகிய பாலமாகக் குறைத்து விடுகிறது. இப்பாலத்தினுள் நடுப் பொருள் (mid–body) எனப்படும் ஓர் அமைப்பு, தெளிவாகக் காணப் படும்; இது நெருக்கமாக அமைந்த, நுண் குழாய்களால் ஆனது; இந்நுண் குழாய்க் கட்டே முதலில் உண்டான மறைமுகப் பிரிவுக் கதிர் இழையின் (mitotic spindle) எச்சம் ஆகும். விலங்குச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல் என்பது மிக விரைவில் நடை பெறுகிறது; அகான்தமீபாவில் (Acanthamoeba) இதற்கு 40–50 நொடியே தேவைப் படுகிறது.\n\nதாவரச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல். இவ்வகைச் செல்களில் செல்லின் நடுப் பகுதியில் குறுக்கம் ஏதும் ஏற்படுவதில்லை; மாறாக, புதிய ஒரு பிளாஸ்மா சவ்வு உண்டாவதை, ஒளி நுண்ணோக்கியின் மூலமும், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலமும் கண்டுள்ளனர். குரோமோசோம்கள் அனைத்தும், இரண்டு துருவங்களையும் நோக்கி நகரத் தொடங்கிச் செல்லின் மையத்தை விட்டு விலகியதும், கோல்கை அமைப்பிலிருந்து பெறப்பட்ட சவ்வாலான குமிழிகள் (vesicles) ஒருங்கிணையத் தொடங்குகின்றன. இவை, செல்லின் நட்ட நடுப் பகுதியில் சேர்ந்து ஒன்றாகி, ஒரு தட்டையான பெரிய குமிழாகிக் குறுக்குச் சவ்வாக மாறுகின்றன. இதை ஃபிராக்மோ–பிளாஸ்ட் (phrag–moplast) என்பர். (phragmo = enclosure, plast = forming). இவ்விதம் உண்டான ஃபிராக்மோ பிளாஸ்ட் இரட்டைப் பிளாஸ்மா சவ்வை உண்டாக்குகிறது: இவையிரண்டும், செல்லில் முன்பேயுள்ள முதன்மைப் பிளாஸ்மா சவ்வோடு இணைந்து, இரண்டு தனித் தனியான சேய்ச் செல்களை ஏற்படுத்தி விடுகின்றன. அதன் பின், இரு பிளாஸ்மா சவ்வுகளுக்கும் இடையில் இரண்டு புதிய செல் சுவர்கள் உண்டாகின்றன. —சோம. பேச்சிமுத்து"}}