{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "85fw49vg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/85fw49vg/", "kind": "article", "headword": "உட்கூற்றுப் பகுப்பாய்வு", "romanization": "uṭkūṟṟup pakuppāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.396243+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சொற்பொருளின் உட்கூறுகளைக் (Components) கண்டறிந்து விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஓர் உத்தியே உட்கூற்றுப் பகுப்பாய்வு (Componential Analysis) முறை.", "body_ta": "சொற்பொருளின் உட்கூறுகளைக் (Components) கண்டறிந்து விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஓர் உத்தியே உட்கூற்றுப் பகுப்பாய்வு (Componential Analysis) முறை. சொற்பொருளின் உட்கூறுகளைக் கண்டறிவதன் வாயிலாக ஒரு சொல்லின் பொருள் பிற சொல்லின் பொருளினின்றும் வேறுபடும் முறைமையினை இப்பகுப்பாய்வு விவரிக்கும். இந்த ஆய்வுமுறை பொருள் தொடர்புடைய சொற்களை விவரிப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறன.\n\n‘மனிதன்’, ‘பெண்’ என்னும் இருசொற்களின் பொருள் உட்கூறுகளைப் பின்வருமாறு விவரிக்கலாம்:\n\n(Human) !! ஆண் (Male) !! முதியவர் (Adult)\n\nமக்கள் என்னும் பொருள் உட்கூறு ஈண்டுக் குறிப்பிடப்பெற்றுள்ள இரு சொற்களிலும் காணப் பெறுவதால், இதனைப் பொதுமைப் பொருள் உட்கூறு (Semantic Marker) எனவும், ‘ஆண்’ என்னும் பொருள் உட்கூறு ‘மனிதன்’ என்னும் சொல்லில் மட்டுமே காணப்பெறுவதால் இதனை வேறுபடு பொருள் உட்கூறு (Semantic Distinguisher) எனவும் கருதலாம். வேறுபடு பொருள் உட்கூறுகளே சொற்- பொருளை வேறுபடுத்திக் காணத் துணைபுரியும். அனைத்து உட்கூறுகளின் சேர்க்கையே ஒரு சொல்லின் அகராதிப் பொருளாக அமையும்.\n\nஉறவுமுறைப் பெயர்களை (Kinship Terms) விவரிப்பதற்கு மானிடமொழியியலாரே (Anthropological Linguists) உட்கூற்றுப் பகுப்பாய்வு முறையினை முதன்முதலில் பயன்படுத்தினர். பால் (Sex), தலைமுறை (Generation), இரத்த உறவு (Blood Relation) போன்ற பண்புகளின் அடிப்படையில் உறவுமுறைப் பெயர்கள் உட்கூற்றுப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பின்னர், நிறத்தைக் குறிக்கும் சொற்கள், பதிலிப்பெயர்கள் (Pronouns) போன்றவற்றை விவரிக்கவும் இந்த ஆய்வுமுறை பயன்படுத்தப்பட்டது.\n\nஉட்கூற்றுப் பகுப்பாய்வு முறையில் குறியிடுதல் (Naming), பதிலீட்டு விளக்கம் (Paraphrasing), விளக்கம் (Defining), வகைப்படுத்தல் (Classifying) என்னும் நான்கு முறைகள் பின்பற்றப்படும். இந்த ஆய்வு முறையின் முதல்படியில் தொடர்புடைய சொற்பொருள்கள் திரட்டப்படும். இரண்டாம்படியில் இப்பொருள்கள் உணர்த்தும் செயல்கள் அல்லது பருப்பொருள் வடிவங்கள் வகைப்படுத்தப்பெறும்.\n\nஅகராதியியலில் ஒருபொருள் பலசொற்களுக்கு (Synonyms) இடையே காணப்பெறும் பொருள் மயக்கத்தினைத் (Overlapping) தவிர்க்கவும், பலபொருள் ஒருசொல்லின் வெவ்வேறு பொருள்களை விவரிக்கவும், எதிர்ச்சொல் (Antonym) போன்றவற்றை விளக்கவும் உட்கூற்றுப் பகுப்பாய்வுமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறை ஆய்வின் வாயிலாகப் பொருள் தொடர்புடைய சொற்களுக்கிடையே காணப்பெறும் நுண்ணிய பொருள் வேறுபாட்டினை மட்டுமே கண்டறிதல் இயலும், அனைத்துச் சொற்களின் பொருளையும் கண்டறிய இவ்வாய்வு பயன்படுவதில்லை. குறிப்பாகக் குறிப்புப் பொருள் (Cannotative Meaning) தரும் சொற்களையும் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் சொற்களையும் இவ்வாய்வின் வழி அணுக இயலாது.\n\nஉட்கூற்றுப் பகுப்பாய்வு சில குறைபாடுகளை உடையதாக இருப்பினும், உட்கூறுகளை வரன்முறைப்படுத்திச் சொற்களின் பொருளை விளக்குவதற்கு இது பெரிதும் துணைபுரிகிறது. ஏ.ஆ.\n\nதுணை நூல்கள்\n\nBendix, E.H., Componential Analysis of General Vocabulary: The Semantic Structure of a set of Verb in English, Hindi and Japanese, IJAL, Vol. 32, 1966.\n\nNida, Eugene, A., Componential Analysis of Meaning, The Hague, Mouton, 1975.\n\nLyons, John, Semantics, Volumes, I and II, The-Cambridge University Press, Cambridge, 1977."}}