{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6acr76ce", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6acr76ce/", "kind": "article", "headword": "சூல் காலக் கணிப்பும் கருவறி முறையும்", "romanization": "cūl kālak kaṇippum karuvaṟi muṟaiyum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.301872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சூலின் தொடக்க இறுதிக் காலங்களில், சூலை அறுதியிடப் பல்வேறு வழி முறைகள் உள்ளன.", "body_ta": "சூலின் தொடக்க இறுதிக் காலங்களில், சூலை அறுதியிடப் பல்வேறு வழி முறைகள் உள்ளன. குழந்தையின் பல்வேறு பகுதிகளைத் தொட்டுப் பார்த்து, இதயத் துடிப்பைக் கேட்டு, அதன் அசைவுகளை உணர்ந்து, எக்ஸ் கதிர் ஆய்வின் மூலம், குழந்தையின் எலும்புகளைப் பார்க்க முடிந்தால், சூலைப் பற்றி எந்த ஐயமும் இருக்க முடியாது. மேற்கூறிய சூலின் அறிகுறிகள் இறுதி மாதங்களிலேயே (5,6–ஆம் மாதம்) தெரியும். தொடக்கத்திலேயே சூலை அறுதியிட, நேர் மறை மற்றும் ஊக அறிகுறிகளே ஏற்புடையவை.\n\nசூல் அறிகுறிகள். சுவை, பசி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், காரச் சுவை கொண்ட பொருள்கள், சுண்ணாம்பு, கரி போன்ற பொருள்கள் மீது விருப்பம்; குமட்டல், வாந்தி; நுகர் உணர்வில் மாற்றங்கள் (மணப் பொருள்கள், புகையிலை, புகை மீது அருவெறுப்பு); நரம்பு மண்டலத்தில் மாற்றங்கள்; உறுத்தலுணர்வு, துயில் நிலை, மனப் போக்கின் மாற்றங்கள்; முகத் தோல் மாற்றம், வயிற்றின் நடுக் கோடு, மார்புக் காம்பு, முகப்பு வட்டம் ஆகியவற்றின் நிற மாற்றங்கள் ஆகியவை சூலடைந்த பெண்ணின் முழு உடலில் தோன்றும் பொது அறிகுறிகளாகும்.\n\nபிறப்புறுப்புகளிலும், மாத விடாய்ச் சுற்றிலும் ஏற்படும் மாற்றங்கள். கொடிய நோய்களின் போதும், மன உளைச்சலின் போதும், மாத விடாய் நின்று விடலாம். இயல்பான பெண்ணிடம் மாத விடாய் நின்று விட்டால், சூல் என்றே கருத வேண்டும். சூல் பை, யோனி ஆகியவற்றின் சிலேட்டுமத்தின் நீல நிறம்; சூல் பை அளவு, அமைப்பு, நெருக்க அளவு ஆகியவற்றில் மாற்றங்கள்; மார்புக் காம்பில் உள்ள பால் நாளங்களிலிருந்து சீம்பால் வெளிப்படல் முதலியவை சூலின் நேர் முகமான அறிகுறிகள் ஆகும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> யோனி முகப்பின் சிலேட்டுமத்தையும், புறப் பிறப்புறுப்புகளையும் உட்காட்டி மூலம் ஆய்தல்; பெண்ணின் யோனி ஆய்வு, இரு கை ஆய்வு, மார்- பகத்தைத் தொட்டுச் சீம்பாலை வெளிப்படுத்துதல் என்பன நேர்முக அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளும் வழிகளாகும்.\n\nபெண்ணைக் கட்டிலிலோ, நாற்காலியிலோ அமர்த்தி, யோனி ஆய்வு செய்ய வேண்டும். கட்டிலில் இருக்கும் போது. பெண்ணின் கால்கள் வயிற்றின் மீது மடக்கி வைக்கப்பட்டு, விரிந்த நிலையில் இருக்க வேண்டும். நோயாளியின் திரிகத்திற்கு அடியில் ஒரு மெத்தையை வைக்க வேண்டும். ஆய்வாளர், முதலில் தம் கைகளைச் சுடு நீரிலும் பின்னர், தூரிகை கொண்டு சோப்பு நீரிலும் தொற்று நீக்கும் கரைசல் (0.5% குளோரமின் கரைசல் அல்லது 1% லைசோபார்ம் கரைசல்) கொண்ட நீரிலும் கழுவ வேண்டும். தொற்று நீக்கப்பட்ட கையுறை அணிய வேண்டும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் நீர்த்த கரைசல் அல்லது ஏதாவது ஒரு தொற்று நீக்குங் கரைசலால் அல்குலை நன்கு கழுவி, தொற்று நீக்கப்பட்ட பஞ்சால் உலர்த்த வேண்டும். இடக்கையின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் கொண்டு, பேரிதழையும், சிற்றிதழையும் பிரிக்க வேண்டும். அதன் பின், அல்குல் மற்றும் முகப்பின் சிலேட்டுமம், பார்தோலின் சுரப்பி வெளி வாயில்கள், துளை, விடபம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.\n\nஉள் நோக்கி ஆய்வு. புறப் பிறப்புறுப்புகளையும், முகப்பின் சிலேட்டுமத்தையும் ஆய்வு செய்த பின்னர், உள் நோக்கிக் கொண்டு ஆயலாம். யோனியின் சிலேட்டுமம், சூல்பையின் கழுத்து ஆகியவற்றின் நீல நிறத்தையும் (பேற்றிற்கான நேர் மறை அறிகுறிகள்), கருப்பைக் கழுத்தின் நோய்களையும், யோனியின் நோய்களையும் (அழற்சி, கீற்று அரிப்பு, தொங்கு தசைப் புற்று நோய்) உள் நோக்கி மூலம் காணலாம். கரண்டி வடிவத்துடன், இரண்டு தடுக்கிதழ்கள் கொண்ட யோனி உள் நோக்கியைப் பயன்படுத்தலாம்.\n\nஇரு தடுக்கிதழ் உள் நோக்கி, யோனியின் முகப்பை அடையும் வரை உட்செலுத்தப் படுகிறது. அதன் இரண்டு அலகுகளும் பிரிக்கப் படுகின்றன. இப்போது, கருப்பைக் கழுத்தைக் காண முடியும். யோனியிலிருந்து உள் நோக்கியை வெளியே எடுக்கும் போது, யோனியின் சுவர்களை ஆராயலாம். கரண்டி வடிவ உள் நோக்கி மூலம் கருப்பைக் கழுத்தையும், யோனியையும் எளிதில் ஆய்வு செய்யலாம்.\n\nகரண்டி வடிவ உள் நோக்கியை முதலில் யோனிக்குள் செலுத்தி, அதன் பின் புறச் சுவரும், விடபமும் அழுத்தப்படும். அடுத்து, மற்றோர் உள் நோக்கி உட்செலுத்தப்பட்டு, யோனியின் முன் புறச் சுவர் உயர்த்தப்படும். சூல் பைக் கழுத்தையும், யோனியையும் ஆய்வு செய்த பினனர், கை கொண்டு ஆய்வு செய்யலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூல் பெண்ணின் யோனி ஆய்வு. இடக் கையின் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் கொண்டு, யோனியின் பேரிதழையும், சிற்றிதழையும் பிரித்து, வலக்கை ஆட்காட்டி விரலை யோனியில் செலுத்தலாம். இப்போது, கட்டை விரல் மேல் நோக்கியும், 4, 5 ஆம் விரல்கள் வளைந்தும், ஏனையவை விடபத்தின் மேலும் அமைந்திருக்கும்.\n\nஇரு கை ஆய்வு. சூல் பைக் கழுத்தைத் தொட்டுப் பார்த்த பின்னர், இரு கை ஆய்வைத் தொடரலாம். கையின் விரல்கள், யோனியின் உட் செலுத்தப்பட்டு, முன் புற வளைவின் மேல் வைக்கப் படும். சூல்பைக் கழுத்துப் பின்புறமாகத் தள்ளப் படும். இடக்கையின் விரல்கள், வயிற்றுச் சுவரைச் சிறிய கூபகத்தின் பக்கமாகத் தள்ளுவதால், முன் புற வளைவில் உள்ள கையின் விரல்களைச் சந்திக்கின்றன. இரண்டு கைகளின் விரல்களும் ஒன்றையொன்று சந்தித்தவுடன், கருப்பையைத் தொட்டு, அதன் நிலை, அமைப்பு, நெருக்க அளவு ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன: இதையடுத்துக் கருவகக் குழல்களும், சூலகங்களும் ஆய்வு செய்யப் படுகின்றன. ஆராயும் கைகளின் விரல்கள், கருப்பையின் கோணங்களிலிருந்து படிப்படியாகக் கூபகத்தின் பக்கச் சுவர்களுக்குச் செல்கின்றன. கூபக எலும்புகளின் உட்பரப்பைத் தொட்டுப் பார்த்த பின், மூலை விட்டக் கோட்டின் இணைப்பளவை அளவிடுவதுடன், இரு கை ஆய்வு முடிகிறது. கீழ்க் காணும் அறிகுறிகள் கொண்டு சூல் உறுதி செய்யப்படுகிறது.\n\nசூல் பை பெரிதாதல். கருவக வாழ்வின் 5–6 ஆம் வாரத்தில், சூல் பை அளவில் பெரிதாவதை அளவிட முடியும். கருப் பை, முதலில் முன், பின் புறத் திசைகளில் வளர்ந்து. உருண்டை வடிவமடைகிறது. பின்னர், குறுக்குத் திசையில் வளர்ச்சியடைகிறது. சூல் வளர வளரக் கருப் பையின் பெரிதான தன்மை தெளிவாகிறது. இரண்டாம் மாத இறுதியில், கருப்பை வாத்து முட்டை அளவாகிறது. 3ஆம் மாத இறுதியில் அதன் மேற்பகுதி பூப்பிணைப்பு மட்டத்தை அடைகிறது.\n\nகோர்விட்ஸ் ஹெகார் அறிகுறி. கருப்பையின் நெருக்க அளவு மெல்லியதாக இருக்கும். ஆய்வு செய்யும் கைகளின் விரல்கள் (இரு கை ஆய்வு) இடுக்கியில் தடையின்றிச் சந்திக்கின்றன. சூலின் தொடக்க காலத்தில், இந்த அறிகுறி சிறப்புத் தன்மை வாய்ந்தது.\n\nஸ்னீகிரேவின் அறிகுறி. இதன் நெருக்க அளவில் சூல் பை, பெரும் மாறுதலடைகிறது. இரு கை ஆய்வின் போது, மெல்லிய சூல் பை அடர்த்தி அடையும். கைகளில் கிளர்த்தல் வினை நின்றவுடன், கருப் பை மீண்டும் மெல்லியதாகும்.\n\nபிஸ்கசெக்கின் அறிகுறி. சூலின் தொடக்க வாரங்களில், சூல் பையின் உடல் வளர்ச்சி சீராக இருப்பதில்லை. இது முட்டை பொதிந்துள்ள கோணத்தில், கரு வளர்ச்சியடைவதைப் பொறுத்துள்ளது. சூல் வளர வளர, சமச் சீரற்ற தன்மை மறைகிறது. சூல் பையின் இடுக்கி மென்மையடைவதால், சூல் தொடக்கத்தில், கருப்பைக் கழுத்தின் நிலை எளிதில் மாற்றமடைகிறது என முன்பு கருதினர். இடுக்கி மென்மையடைவதால் உண்டாகும் சூல்பையின் முன்புற வளைவும், சூலின் தொடக்க கால அறிகுறியாகும். சூல் காலம் உறுதியாகவில்லையென்றால், ஓரிரு வாரம் சென்ற பின், மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். இப்போது முற்றிய சூலாகையால், அனைத்து அறிகுறிகளும் தெளிவாகத் தெரியும்.\n\nசூல் வகை அறுதியிடல். பொதுவாக, முன் வரலாறு, கூர்ந்து நோக்கல், யோனி ஆய்வு போன்ற மருத்துவ ஆய்வு விவரங்களிலிருந்து சூல் உறுதிப் படும். சூலுடன், வேறு பல நோய் நிலைகளும் இருந்தால், உறுதி செய்வதில் இடர்ப்பாடு தோன்றலாம். வேற்றிடச் சூலையும், கருவகக் குழல் அழற்சியையும் பிரித்தறிவது மிகவும் கடினம். சூல் பையின் புற்று நோயிலிருந்து, சூல் உறுதி செய்தலும் எளிதன்று. மருத்துவ முறை ஆய்வுகள் தவிர, உயிரியல் சார்ந்த சூல் ஆய்வும் செய்ய வேண்டும்.\n\nஅஷீம்-சான்டெக் ஆய்வு. சூலின் தொடக்கத்திலிருந்தே பெண்ணின் உடலில் செனிப்பக ஹார்மோன் (gonodotropic hormone) உற்பத்தி செய்யப்பட்டுச் சிறுநீரில் வெளிப்படும். இந்தச் சிறுநீரைத் தோல் அடி ஊசியாக முதிர்ச்சியடையாத பெண் சுண்டெலிக்குள் செலுத்தினால், எலியின் கருப் பையும், குமிழ்ப் பைகளும் தூண்டப்பட்டு, வீக்கமடைந்த குமிழ்ப் பைகளில் குருதிப் பெருக்கு ஏற்படும்.\n\n6–8 கி. எடையுள்ள பெண் சுண்டெலிகளுக்கு, காலையில் தோன்றும் முதல் சிறுநீரை 0.2–0.4 மி.லி. அலகில் நாளும் 6 முறையாக, 2 நாள் ஊசி மூலம் செலுத்தினால், 96–100 மணி நேரங்களுக்குள் அவை இறந்து விடுகின்றன. கருப்பையும், சூலகங்களும் ஆய்வு செய்யப்பட்டால், குமிழ்ப் பைகளில் காணப்படும் குருதிப் பெருக்கு அல்லது பெரிதடைந்த சூல் பை ஒரு நேர் மறை அறிகுறியாகக் காணப் படும்.\n\nதவளை ஆய்வு. சூல் பெண்ணின் சிறுநீரில் காணப்படும் கோனோடோடிரோபினின் வினையால் தவளைகள், பரட்டைகள் ஆகியன விந்தணுச் செல்களை உற்பத்தி செய்கின்றன. ஆய்வு செய்யப்பட வேண்டிய உயிரியின் முதுகிலுள்ள நிணப்பையுள் 2.5 மி.லி. சிறுநீர் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. 1–2 மணி நேரத்தில், பிப்பெட்டின் உதவியால், குதப்பை நீர்மம் எடுக்கப்படும். நுண் பெருக்கி மூலம் அசையும் தன்மை கொண்ட விந்தணுக்கள் அதில் காணப் பட்டால், ஆய்வு நேர் மறையாகக் கருதப்படுகிறது.\n\nதடுப்பாற்றியல் முறையில் சூல் உறுதி. தடுப்பாற்றியல் முறையில் சூலை உறுதி செய்ய, குருதித் திரட்டு (haemo–agglutination) முறை மேற்கொள்ளப் படுகிறது.\n\nபுற ஒலி. இம்முறை போன்றவையும் சூலை அறுதியிடக் கையாளப்படுகின்றன. இவற்றின் மூலம் 8–10 ஆம் வாரத்திலேயே குழந்தையின் இதய ஒலிகளைக் கேட்க முடிகிறது. கருப்பையினுள் பொலிவடைந்த கரு அணுக்கள் இருப்பதைப் புற ஒலி காட்டுகிறது.\n\nஅண்மைக் கால ஆய்வு. பெண்ணின் சிறுநீர் ஒரு சொட்டும், மனித செனிப்பக எதிர் சீரம் ஒரு சொட்டும், மனித செனிப்பக லேடக்ஸ் ஆண்டிஜன் 2 சொட்டும் கலந்து, 90 நொடிக்குப் பின் பார்க்கும் போது, செல் திரட்சி ஏற்பட்டிருந்தால், பெண் சூலுற்றுள்ளாள் என்றும், திரட்சியடையா விட்டால், இல்லை என்றும் முடிவு செய்யலாம்.\n\n—அ. கதிரேசன் நூலோதி. C. Wirsen et. al., A Child is Born, Faber and Faber, London, 1977."}}