{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "63ztcj3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/63ztcj3z/", "kind": "article", "headword": "சாறுண்ணிகள்", "romanization": "cāṟuṇṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:53.664786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உயிரிகள் தாம் வாழத் தேவையான உணவைத் தம் சூழ்நிலைகளிலிருந்தே பெறுகின்றன.", "body_ta": "உயிரிகள் தாம் வாழத் தேவையான உணவைத் தம் சூழ்நிலைகளிலிருந்தே பெறுகின்றன. பச்சை நிறமுள்ள தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவைத் தாமே வேதிச் செயலால் செய்து கொள்கின்றன. இவ்வகைத் தாவரங்கள் தன்னூட்டவுயிர்கள் (auto-trophic) எனப்படும். தன்னூட்டவுயிர்களில் சில, பாக்டீரியா வேதிச் செயல் புரியத் தேவையான ஆற்றலைச் சில கரிமப் பொருளை ஆக்சிஜனேற்றம் செய்து பெறுகின்றன. அவற்றிலுள்ள சில நொதிகளின் உதவியால், ஆக்ஸிஜனேற்றத்தைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, நைட்ரோசோமோனாஸ் (nitrosomonas) என்னும் பாக்டீரியா, அம்மோனியாவை ஆக்சிஜனேற்றம் செய்கிறது. நைட்ரோபேக்டர் (nitrobacter) என்னும் பாக்டீரியா, நைட்ரைட்டுகளை நைட்ரேட்டுகளாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது.\n\nஇவ்வகை ஆக்சிஜனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு, தாம் நிலைக்கவும், வளரவும் தேவையான புரோட்டோப்பிளாசத்தைத் தாவரம் அமைத்துக் கொள்ளும். ஊதாப் பாக்டீரியாவில் இருக்கும் நிறம், சூரிய ஒளியாற்றலைக் கொண்டு கார்பன் டைஆக்சைடைக் கார்போஹைட்ரேட்டாக அமைத்துக் கொள்ளும். எனினும், இவ்வேதி வினையில் ஆக்சிஜன் உண்டாவதில்லை.\n\nதமக்கு வேண்டிய உணவைத் தாமே அமைத்துக் கொள்ள முடியாத உயிரிகளும் உண்டு. அவை ஏனைய உயிரிகளிலிருந்தும், தாமே உணவு தயாரித்துக் கொள்ளும் தாவரங்களிலிருந்தும், மட்கி அழுகிச் சிதைந்த பொருள்களிலிருந்தும் தம் உணவைப் பெறுகின்றன. இவ்வகை உயிரிகள், வேற்றூட்டவுயிர்கள் (heterotrophic) எனப்படும். பெரும்பான்மையான பாக்டீரியாக்கள், காளான்கள் ஆகியன இதில் அடங்கும்.\n\nஏனைய இறந்து சிதைந்து அழுகிய பொருள்களை உணவாக உட்கொண்டு வரும் உயிரிகள், சாறுண்ணிகள் (saprophytes) எனப்படும். இவ்வகையில் பல தாவரங்களும், விலங்குகளும் அடங்கும். யூக்ளீனா என்னும் உயிரி, சில சமயத்தில் தாவரத்தைப் போலவும், சில சமயம் விலங்கைப் போலவும் வாழ்கிறது. பெரும்பாலும் இது, தான் வாழும் நீரிலுள்ள உணவுப் பொருள்களை உறிஞ்சி வாழும். நீர்க் கரைசலில் உணவு மிகுதியாக இருக்குமாயின், அவ்வுயிரி மங்கலான ஒளியிலும், இருட்டிலுங்கூட நன்கு வளர்ந்து பெருகும்.\n\nஈஸ்ட், பூசணம், பாக்டீரியா ஆகியவற்றால் திண்ம உணவை உட்கொள்ள இயலாது. அவை தம் உயிரணுக்களைச் சுற்றியுள்ள சவ்வு வழியாகவே உணவை உள்ளுறிஞ்ச வேண்டும். இது சாறுண்ணி முறை (saprophytic nutrition) எனப்படும். ஈஸ்ட் வாழ்வதற்கு உப்பு, ஆக்சிஜன், சர்க்கரை ஆகியவை தேவை. சர்க்கரையிலிருந்து ஆற்றல், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் ஆகியவற்றைப் பெறும். ஆக்சிஜன் மிகுதியாகக் கிடைக்குமிடத்தில் ‘குளூக்கோஸ்’ என்னும் சர்க்கரையை ஆக்சிஜனேற்றம் செய்து, கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகியவற்றை உண்டாக்குகின்றன. ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் போது, குளுக்கோசை நொதிக்கச் செய்து, ஆல்கஹால், கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இச்சாறுண்ணி முறையைப் பயன்படுத்தியே எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது.\n\nமற்றொரு வகையான வேற்றூட்ட முறை, ஒட்டுண்ணி முறை (parasitism) எனப்படும். ஒட்டுண்ணி, தாவரம் அல்லது விலங்கின் உடலில் வாழ்ந்து, தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உறிஞ்சுவது இம்முறையைச் சாரும். காண்க: ஒட்டுண்ணித் தாவரங்கள்.\n\nநூலோதி. A.C. Dutta, Botany, Fifth Edition, Oxford University Press, New Delhi, 1982."}}