{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5bts6qz4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bts6qz4/", "kind": "article", "headword": "நுரையீரல் புழு", "romanization": "nuraiyīral puḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.601305+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கால்நடைகளைத் தாக்கும் உள் ஒட்டுண்ணிகளில், நுரையீரலை உறைவிடமாகக் கொண்டிருக்கும் புழுக்களுக்கு, நுரையீரல் புழுக்கள் (lungworms) என்று பெயர்.", "body_ta": "கால்நடைகளைத் தாக்கும் உள் ஒட்டுண்ணிகளில், நுரையீரலை உறைவிடமாகக் கொண்டிருக்கும் புழுக்களுக்கு, நுரையீரல் புழுக்கள் (lungworms) என்று பெயர். இரண்டு வகையான நுரையீரல் புழுக்கள், கால்நடைகளைத் தாக்குகின்றன.\n\nடிக்டியோகாலிடே. இதில் டி. பிலேரியா எனப் படும் வகை ஆட்டினங்களையும், டி. விவிப்பேரஸ்ட் எனப்படும் வகை மாட்டினங்களையும் தாக்குகின்றன. இப்புழு சற்றே பெரியதாகவும், தடித்தும் காணப் படும். கால்நடைகளின் பெரிய மூச்சுக் குழலில் (large bronchi) தங்கியிருக்கும், இது நேரிடையான வாழ்க்கைச் சுழற்சி முறையைக் கொண்டதாகும்.\n\nமெடா ஸ்ட்ராங்கிலாய்டே. இதில் பி.ரூஃபெஸென்ஸ் எனப் படும் வகை ஆட்டினங்களையும், மெ. ஸால்மி ஆகியவை பன்றிகளையும் தாக்குகின்றன. இப்புழு சிறியதாகவும், மிகவும் நீளமாகவும் காணப் படும். கால்நடைகளின் சிறிய மூச்சுக் குழல்களில் (finer bronchi) தங்கியிருக்கும். இது இடைப்பட்ட மறைமுக வாழ்க்கைச் சுழற்சி முறையைக் கொண்டிருக்கும்.\n\nசாணத்தில் இதன் இளம் புழுக்களோ, முட்டைகளோ வெளியேறிய பின், மண் புழு, நத்தை போன்றவற்றைத் தாக்கி, மூன்றாம் நிலைப் புழுக்களாகும் வரை வளர்கின்றன. பொதுவில், அனைத்து நுரையீரல் புழுக்களும், கால்நடைகளின் சுவாசப் பாதைகளில் முட்டைகளை இடுகின்றன. பிறகு, அவை அங்கிருந்து இருமலால் விழுங்கப் பட்டு, உணவு மண்டலத்தை அடைகின்றன. அங்கிருந்து, சாணத்துடன் கலந்து முட்டைகளாகவோ, முதல் நிலைப் புழுக்களாகவோ வெளியேறுகின்றன. வெளியேறி, ஏறத் தாழ ஒரு வார காலத்திற்குப் பின், முன்றாம் நிலையை அடைந்து, கால்நடைகளால் உட்கொள்ளப் படுகின்றன. பின்னர், சிறு குடற்சுவரைத் துளைத்துக் கொண்டு, நிணநீர் முடிச்சுகளை அடைந்து, இறுதியில் நுரையீரலை அடைகின்றன.\n\nநோயின் தன்மை. டிக்டியோகாலிடே இனப் புழுக்கள், கால்நடைகளுக்குப் பெருமளவிலான அரிப்பை ஏற்படுத்தி, மூச்சுக் குழல் மற்றும் நுரையீரல் நோய்களைத் தோற்றுவிக்கின்றன. சில சமயங்களில், நுரையீரலின் இதழ்களைக் கெட்டிப் படுத்திச் செயலிழக்கவும் செய்து விடுகின்றன. இருமல், சளி, சுவாசத்தில் கடினம், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும். நோய் முதிர்ந்த நிலையில், கால்நடைகள் மெலிந்து, திறனிழந்து, கீழ்ப் புற வீக்கங்களுடன் காணப் படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் குறிப்பாக, இளங்கன்றுகளில் ஒரு மாறுபாடான தொடர் இருமல் இருந்து கொண்டிருக்கும். இதை ‘ஹஸ்க்’ (Husk) அல்லது ‘ஹுஸ்’ (Hoose) என்று குறிப்பர்.\n\nநோய்த் தடுப்பு முறை. இலையுதிர் காலத்திலும், குளிர் காலத்திலும், நுரையீரல் புழுக்களின் தாக்குதல் மிகுதியாக இருக்கும். இச்சமயங்களில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு வெளியில் அனுப்பாமல், கொட்டிலிலேயே வைத்திருப்பதன் மூலம் நுரையீரல் புழுக்களின் தாக்குதல் குறையும்.\n\nஈரக் கசிவான பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் உள்ள மேய்ச்சல் தரைகளுக்குக் கால்நடைகளை அனுப்பாமல் தவிர்க்க வேண்டும். இளங்காலை நேரங்களில், பனித் துளியுடன் ஈரமாக உள்ள புல் வெளிகளில் கால்நடைகளை மேய விடக் கூடாது. புல்வெளி உலர்ந்த பின், பகற்பொழுதில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.\n\nசுழல் முறை மேய்ச்சலைப் பயன் படுத்துவது மிகவும் சிறந்தாகும். இதனால், இளம் புழுக்களின் வளர்ச்சி பாதிக்கப் பட்டு இறந்து போவதோடு, புல் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கால்நடைகளின் கழிவுப் பொருள்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, இளம் புழுக்களின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தப் போதுமான காலம் வரை சேமித்து வைத்த பின்னரே, உரமாகப் பயன் படுத்த வேண்டும்.\n\nகொட்டிலின் தரைப் பகுதி, தீவனத் தொட்டி ஆகியவற்றைச் சுடு நீரைப் பயன் படுத்தி, அவ்வப்போது தூய்மைப் படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கால் நடைகளுக்குக் கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த மருத்துவமளிக்க வேண்டும்.\n\nநுரையீரல் புழுக்களுக்குத் தற்போது தடுப்பு மருத்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகைப் புழுக்களைக் கதிரியக்கம் கொண்டு, செயலற்ற தாக்கிய பின்பு, தடுப்பு மருந்து பயன் படுத்தப் படும். —ஆர். கோவிந்தராஜு"}}