{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "54ne4vsd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/54ne4vsd/", "kind": "article", "headword": "உயிர்ப்பலி", "romanization": "uyirppali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.248062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நெடுநாள் வாழ்தற்கும், இறந்து போனவரை உயிர்ப்பிப்பதற்குமுரிய உயிர்ப்புச் சக்தியை அளித்தற்கும் தனது வாழ்நாள் முழுதும் மனிதன் வழிவகைகளைத் தேடிக் கொண்டேயிருந்தான்.", "body_ta": "நெடுநாள் வாழ்தற்கும், இறந்து போனவரை உயிர்ப்பிப்பதற்குமுரிய உயிர்ப்புச் சக்தியை அளித்தற்கும் தனது வாழ்நாள் முழுதும் மனிதன் வழிவகைகளைத் தேடிக் கொண்டேயிருந்தான். அந்நிலையில், அவன் கண்டு கொண்டதே உயிர்ப்பலி. அதாவது, ஓர் உயிரைப் பலி கொடுப்பதன் வழி உயிருடன் இருப்பவருக்கு உயிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இறந்துபட்டவருக்கு உயிர்ப்புச் சக்தியை அளிக்கவும் இயலும் என மனிதன் நம்பினான். இந்நிலையில் மனித சமுதாயத்தின் கண் காணப்பெறும் பல்வேறு சடங்குகளுள் (Rituals) ஒன்றாக உயிர்ப் பலியும் உணரப்படலாயிற்று. எனவே, சமயம் சார்ந்த அமைப்பு எனப் பொருத்தமாக இது உணரப் பெறுகின்றது. அதாவது, சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒருங்கிணைந்ததொரு தொகுப்பே உயிர்ப்பலி எனலாம். அனைத்துச் சடங்குகளுக்கும் உரிய இயல்பான நிலையில், வளர்ந்து வரும் வேறுபட்ட பணிகளைப் பொறுத்தமையும் பல்வேறு வடிவங்களைக் கொண்டு, காலப் போக்கிற்கேற்ப மாறி வரும் நிலைமைகளைப் பின்பற்றி இன்றளவும் நின்று நிலவுகிறது. இதன் உள்ளுறைப் பொருளை (Inner Significance} அறிதற்கு வரலாற்று நிலையிலும், உளவியல் நிலையிலும், மானிடவியல் நிலையிலும் நின்று ஆராயவேண்டும், உயிர்ப் பலிச் சடங்கு மனித சமுதாயத்தில் தோன்றிய முறையினைப் பல நிலைகளில் மானிடவியலாரும் சமுதாய அறிவியலாரும் கூறுகின்றனர். இக்கருத்துகளில் உயிர்ப் பொருள் கருதுகோளும் (Conception of Soul–Substance) ஒன்றாகும். இரத்த இழப்பால் விலங்குகளும் மனிதரும் உயிரிழப்பதைக் கண்ணுற்ற பழங்கற்கால மனிதன் உயிருக்கும் இரத்தத்திற்குமிடையே உள்ள உறவை உணர்ந்தான். ‘பழங்கற்காலக் குகை ஓவியங்களில்’ காட்டப்பெற்ற வேட்டையாடப்பட்ட விலங்குகள் உயிர் துறப்பதை அம்புபட்ட காயங்களிலிருந்து இரத்தம் பெருகுவதன் வழிக் காட்டியுள்ளது இதற்குச் சான்றாகும். மனிதனும் இரத்தத்தில் ‘உயிர்ப்புச் சக்தி’ இருப்பதாக நம்பினான். இரத்த இழப்பு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று கருதினான். உயிர்ப்புச் சக்தி குன்றிக் காணப்படும் வயதில் முதிர்ந்தோர், உயிர்ப்புச் சக்தியிழந்ததால் உயிரிழந்தோர் மீது உயிர்ப்புச் சக்தியைத் தெளிப்பதன் வழி உயிர்பிக்கவியலும் என்று கருதத் தலைப்பட்டனர். எனவே, மனிதன் இரத்தத்தைப் படையல் பொருளாக அளித்தலை மேற்கொள்ளத் தொடங்கினான்; வேட்டையாடுதல் –உணவு திரட்டுதல் காலந் தொடங்கி இத்தகைய ‘இரத்தப் படையலைக்’ கைக் கொள்ளலாயினான்.\n\nஇதைப் போன்றே உடலின் சில உறுப்புகளும் அவற்றின் ‘சுரப்பு’ களும் (Secretions) உயிர்ப்புச் சக்தியைக் கொண்டிருப்பதாக மனிதன் எண்ணத் தொடங்கினான். எடுத்துக்காட்டாக, நகங்கள், பற்கள், எலும்புகள், தோல், கல்லீரல், குடல், உமிழ்நீர், ‘தொப்புள் கொடி’ (Umblical Cord) முதலியவையும் உயிர்ப் பொருளை உடையனவாகக் கருதப்பட்டன. காலம் செல்லச் செல்ல விலங்குகள், தாவரங்கள், சில உயிரற்ற பொருள்கள் ஆகியனவும் உயிர்ப் பொருளை உடையனவாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளன. விலங்குகள் மற்றும் தாவரங்களில் உயிர்ப் பொருள் இருப்பதாகக் கருதி அவற்றின் மீது இரத்தத்தைச் சிந்தவைக்கும் சடங்குகளைக் ‘குலக்குறி வழிபாட்டினரிடை’யே (Totemists) காணலாம். ஆசுத்திரேலியப் பழங்குடியினரிடையே காணப்படும் ‘உயிர்ப்புச் சடங்கு’ இதற்குத் தக்க சான்றாகும். சோழிகள் (Cowrie Shells), பெண் குறியை ஒத்திருப்பதால் செழிப்புச் சடங்கும் (Fertility Rites) பொருளாகக் கருதப்பட்டு, நாளடைவில் அவற்றிலும் உயிர்ப் பொருள் இருப்பதாகப் பழங்குடியினரால் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னர், இரத்தத்தின் சிவப்பு நிறமே உயிர்ப்புச் சக்திக்குக் காரணம் என்று எண்ணிய நிலையில், சிவப்பு நிறமுடைய செம்மண் துகள்கள், செந்தூரம் (Vermilion) ஆகியனவும் உயிர்ப் பொருள்களாகக் கொள்ளப்பட்ட நிலையையும் வரலாறு நன்கு காட்டுகிறது. இந்த அடிப்படையிலேயே இரத்தம் சிந்தும் சடங்குகளும், இரத்தத்தை ஒத்துள்ள பொருள்களாகப் பயன்படுத்திச் செய்யப்பெறும் சடங்குகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nஇரத்தப் படையலும் தாவரப் படையலும்\n\nஉயிர்ப்பலி கொடுக்கப்படும் உயிரினத்தைப் பொறுத்து இருவகைகளாகப் பகுக்கப்படுகின்றன. அதாவது, விலங்குகள் தொடங்கி மனிதர்வரை பலியாகக் கொடுப்பதில் இரத்தம் முதன்மைப் படையற் பொருளாவதால், ‘இரத்தப்படையல்’ முதல் வகையானது எனவும், தாவரங்களும் தாவரங்களிலிருந்து கிடைக்கப்பெறும் விளைபொருள்களும் பலியாகக் கொடுக்கப் பெறுவதால் ‘தாவரப் படையல்’ இரண்டாம் வகையானது எனவும் உணரப்படுகின்றன.\n\nஉயிர்ப்புச் சக்தி மிகுந்திருப்பதாகக் கருதப்பட்டதனால் ஈமச் சடங்குகளிலும் மூதாதையர் வழிபட்டுச் சடங்குகளிலும் சற்று விரிவான நிலையிலும், ஏனைப் பிற சடங்குகளில் சற்றுக் குறைந்த அளவிலும் இரத்தமானது படையற் பொருளாகப் பல்வேறு சமுதாயங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது கண்கூடு. எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியாவின் தார்லிங்கு ஆற்றுப் (Darling River) பழங்குடியினர் (Tribes of Darling River) வளைதடிகளால் (Boomerangs) ஒருவர் தலையை இன்னொருவர் காயப்படுத்தி, வெளிப்படும் இரத்தத்தைச் சவக்குழிக்கருகில் கிடத்தப்பட்டுள்ள பிணத்தின்மேல் படுமாறு செய்கின்றனர். இதற்கு மாறாக, நடு ஆசுத்திரேலிய அருண்டா (Arunta) இனக் குழுவினரிடையே சவக்குழியின் மீது பெண்டிர் தமது தலைகளிலிருந்து இரத்தத்தைச் சித்தும் வழக்கத்தைக் காணலாம். இவ்வாறு இறந்தார் மீதும் சவக்குழிகளின் மீதும் இரத்தத்தைப் படச் செய்தல் இறந்தவர்களுக்கு வலிமையூட்டுவதும், அவர்கள் மறு உலகிற்குச் செல்வதற்குத் துணை புரிவதும் ஆகும்.\n\nஉணவாகப் பயன்படுத்தப்பெறுவனவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஒரே சீராக வைத்திருக்கவும் ஆசுத்திரேலியப் பழங்குடியினர் நடத்தும் சில சடங்குகளிலிருந்து ‘இரத்தத்தின் உயிர்ப்பிக்கும் சக்தி’யும் இரத்தம் தோய்க்கப்பட்ட பொருள்களின் உயிர்ப்பிக்கும் சக்தியும் தெளிவாக உணரப்படுகின்றன. நடு ஆசுத்திரேலியாவின் ‘உண்டியாரோ கங்காரு குலக்குறி’யைச் (Undiaro Kangaroo Totem) சார்ந்த ஆடவர் கங்காருகள் நிரம்பியிருப்பதாகக் கருதப்படும் குன்றின் அடிவாரத்தின் குழுமுகின்றனர். இக்குன்றின் சரிவில் ஒன்றின் மீது ஒன்றாக இரு கற்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவை, ஆண்–பெண் கங்காருகளாகக் கருதப்படுகின்றன. இக்குலக்குறியினரின் தலைவன் தன் தாய் மாமனுடன் இச்சரிவில் ஏறி, இவ்விரு கற்களையும் ஒரு கல்லால் தேய்க்கிறான். பின், ‘மூதாதையரான கங்காருகளின் ஆவிகள்’ உறைவதாகக் கருதப்படும் செங்குத்துப் பாறைகளுக்கு இவ் இருவரும் சென்று அதன் மீது சிவப்பு, வெள்ளைப் பட்டைகளைத் தீட்டுகின்றனர். சிவப்பு நிறப் பட்டைகளும் வெள்ளை நிறப் பட்டைகளும் முறையே கங்காருவின் தோலையும் எலும்புகளையும் குறிக்கின்றன. இதையடுத்து, இளையோர் பலரும் அந்தக் குறிப்பிட்ட செங்குத்துப் பாறையின் மீது உட்காரவும் அடிவாரத்தில் குழுமியுள்ள ஆடவர் கங்காருகள் பல்கிப் பெருக வேண்டிப் பாடுகின்றனர். இதைத் தொடர்ந்து, அனைவரும் இரத்தம் சிந்தும் சடங்கை மேற்கொள்கின்றனர். பின், கங்காரு வேட்டைக்கு இளையோர் சென்று, தாம் வேட்டையாடிய கங்காருகளுடன் தம் முகாமிற்குத் திரும்புகின்றனர். வெற்றியைக் கொண்டாட நடனமாடிய பின்னர், வேட்டையாடப்பட்ட கங்காருகளைச் சிறிது உண்பர். இதுவே புகழ்மிக்க ‘கங்காருச் சடங்கு’ (Kangaroo Ceremony) எனக் கூறப்படுகிறது. இதே போன்று, ஈமுக்குலக்குறியினர் தமது கையைக் கிழித்து இரத்தத்தைப் படையலாக்கிய பின்னர், இரத்தம் உறைந்த காயத்தைச் சுற்றி வெள்ளை, மஞ்சள், கறுப்பு வண்ணங்களைத் தீட்டி ஈமுப்பறவையின் உடலைக் குறிப்பாக உணர்த்துகின்றனர். இவ்வாறு செய்வதனால் ஈமுப்பறவையினம் அழியாது எனவும், அடுத்த தலைமுறைக்கான ‘கருக்கள்’ (Embryos) விரைவாக உண்டாகும் எனவும் இவர்கள் நம்புகின்றனர். ‘அக்கியா மலர்க்கொத்து’ எனக் கருதப்படும் கல்லின்மீது இரத்தம் சிந்தும் சடங்கை மேற்கொள்ளளுதலைக் காணலாம். இவ்வாறு, ஆசுத்திரேலியப் பழங்குடியினர் இரத்தப் படையலின் வழித் தமது ‘குலக் குறிகளை’ப் (Totems) பல்கிப் பெருகச் செய்யும் உயிர்ப்பிக்கும் சடங்கை மேற்கொள்ளக் காணலாம். மேலும், ‘இயற்கை கடந்தவற்றிற்கும்’ மனிதனுக்குமிடையே ஒருவிதப் பிணைப்பைக் குலக்குறி வழிபாட்டினரின் இந்த உயிர்ப்பிக்கும் சடங்கு உருவாக்குவதும் வெளிப்படை.\n\nசப்பான் (Japan) நாட்டைச் சார்ந்த அய்னுக்களிடையே (Ainus) நடைபெறும் ‘கரடிப் பண்டிகை’யின் போது வேட்டையாடிப் பிடிக்கப்பட்ட அல்லது குட்டியிலிருந்து பிடித்து வளர்க்கப்பட்ட கரடியானது, மிகுந்த மன்னிப்புக் கோரப்பட்ட பின் கொல்லப்படுகின்றது. அவ்வாறு கொல்லப்படும்பொழுது இரத்தம் சிந்தாமல் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், சிற்சில சமயங்களில் கொல்லப்படும் கரடியின் இரத்தம் ஆடவரால் பச்சையாகக் குடிக்கப்படுகின்றது. இதனால், கரடியின் வீரம், ஏனைய பிற பண்புகள் தமக்குக் கைவரப்பெறும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.\n\nசில காலங்களில் குறிப்பிட்ட உயிரினம் பெரிதும் புனிதமாகக் கருதப்பட்ட நிலையில், உணவாகக் கொள்ளப்படாமலேயே இருக்கும் நிலையைக் காணலாம். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அக்குறிப்பிட்ட உயிரினம் பலியிடப்பட்டு, புனிதமான தசை அல்லது உயிர்ப் பொருள் நிரம்பியுள்ளதாகக் கருதப்படும் சில உறுப்புகள் ‘சடங்கு உணவாக’ உண்ணப்படும். இதன்வழி, அப்புனித உயிரினத்தில் அடங்கியுள்ள உயிர்ப்புச் சக்தி கைவரப்பெறும் என்று கருதப்படுகிறது. இத்தகையதொரு நிலையைத் தமிழ்நாட்டுத் தோடரது ‘எருமைப் பலியிடலில்’ காணலாம். ஆண்டுக்கொருமுறை ஆடவர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த எருமைப் பலியிடலில், பலியிடப்பட்ட எருமையின் தசை நெருப்பில் சுடப்பட்டு, ஆடவரால் மட்டும் உண்ணப்படுகிறது.\n\nஇத்தகைய ‘குலக்குறி’ உணவைத் (Totem Feast) ‘தந்தைக் கொலை’யின் எச்சமாக மணி–கயர்லே (Money–Kyrle) என்னும் மானிடவியலார் கருதுகிறார். பல்வேறு சமுதாயத்திற்குரிய தாவரப் படையல் பூமித்தாயின் மக்களாகத் தாவரங்கள் அமைவதாலும், பகுதித் தெய்வத்தன்மை பொருந்திய உயிர்ப் பொருள்களால் இவை உயிர்ப்பூட்டப் பெறுவதாலும் வேட்டையாடுதல், உணவு திரட்டுதலை மேற்கொண்டுள்ள சமுதாயங்களில் காணப்படுவது போன்றதொரு படையல் நிலை, பயிர்த் தொழிற் சமுதாயங்களிலும் காணப்படுகிறது. உயிர்ப்பலிச் செயலில் இரத்தப் படையலுடன் ஒப்பிடும் பொழுது தாவரப் படையலானது இன்றியமையாமையிலும் தொன்மையிலும் இரண்டாம் நிலையைக் கொண்டதே.\n\nஇந்த நிலையில், சிற்சில இடங்களில் தாவரங்களே தெய்வங்களாகக் கொண்டாடப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, பெரு நாட்டினர் சோளத்தைத் ‘தாய்த் தெய்வமாக’வே வழிபடக் காணலாம். சோளத் தட்டையினின்று, தானிய மணிகள் நீக்கப்பட்ட பின்னர், மரத் துண்டுகளின் மீது சோளக் கட்டுகளின் உருவங்கள் செதுக்கப்பட்டு, மனிதருக்குச் செய்வது போன்று அவ்வுருவங்களுக்கு ஆடை அணிவிக்கப்படுகிறது. பின்னர், குழந்தைகள் மற்றும் ஆடுகளுடன் இவ்வுருக்கள் தீயிலிடப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால், ‘சோளத்தின் ஆவிகள்’ உயிர்த்தெழும் என்று பெருமக்கள் நம்பினர். ஆப்பிரிக்காவின் மெத்தபெலே (Matebele), ‘யொம்பாப்’ (Yomba) பழங்குடியினர் தம் பாட்டனாரின் கல்லறையின் முன்பாக எருது ஒன்றைப் பலியிட்டு, முதல் விளைச்சலில் பெறப்பட்ட தானியங்களிலிருந்து செய்யப்பட்ட மது, கஞ்சி ஆகியவற்றைப் படைத்த பின்னரே, தானியங்களை உணவாகக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.\n\nநடு இந்தியாவின் பழங்குடியினரிடத்தும் தென்னிந்தியப் பழங்குடியினரிடத்தும் பயிர்த்தொழிலுடன் இணைந்த ‘தாவரப் படையல்’ காணக் கிடக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரிசாவின் கொந்தர் பழங்குடியினர் மாம்பழங்கள் மிகுந்து காணப்படும் கோடைக் காலத்தில், மாமரத்தில் உறைவதாகக் கருதப்படும் ஆவிகளுக்கு முதலில் படையலிட்ட பின்னரே மாம்பழத்தை உண்ணத் தொடங்குகின்றனர். தென்னிந்தியப் பழங்குடியினருள்ளும் இத்தகைய ‘நன்றி தெரிவிக்கும் சடங்குகள்’ (Thanks–giving Ceremonies) அறுவடையுடன் தொடர்புற்றமைவன காணக் கூடியன. பயிர்த் தொழிலைப் பெரிதும் போற்றிவரும் தமிழ்நாட்டு மலையாளிப் பழங்குடியினரான பச்சைமலை மலையாளியர் கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்யும்பொழுதும் சில தானியக் கதிர்களை நிலத்திற்குப் படையலாக இட்ட பின்னரே, வீட்டிற்குக் கட்டுக்கட்டாகத் தூக்கிச் செல்கின்றனர்.\n\nமனிதப் பலியும் தலை வேட்டையாடலும்\n\nஇறைவனின் மறுபிறப்பாக அரசன் கருதப்பட்டதால், மூப்படைந்த அரசனைக் கொல்வதன்வழி இறைத் தன்மையானது மனித சமுதாயத்திற்குத் திரும்பவும் கிடைக்கிறது என்றும் இதனால் பயிர்த் தொழில் முந்தைய செழிப்புத் திரும்பத் திரும்பக் கைவரப் பெறும் என்றும் நம்பினர். இத்தகைய அரசக் கொலை (Regicide) நாளடைவில் அரசனுக்கு மாற்றாக வேறு மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ‘மனிதப் பலிக்கு’ (Human Sacrifice) அடிகோலியது, நாடோடிகளான ‘நகுவா’க்களிடமிருந்தே (Nahua People) நடு அமெரிக்காவிற்கு ‘மனிதப் பலியிடும் வழக்கம்’ வந்துற்றதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மேலும், உயிர்ப் பொருளைத் தாவரங்களில் சேர்ப்பதன் வழி, தாவரங்களுக்கு உயிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் அளிக்கவும் முடியும் என்று கருதிய நிலையில் மனிதன் தாவரப் படையலுடன் பிற உயிர்ப்பலிகளையும் மறுபடியும் கைக்கொள்ளலாயினான். இந்நிலையில் முகிழ்ந்ததே மனிதப் பலியும் தலை வேட்டையாடலும்.\n\nஅசுதெக்குப் (Aztec) பழங்குடியினரின் பண்பாட்டில் ‘மனிதப்பலி’ முதன்மையான இடத்தை வகித்தது. சூரியக் கடவுளுக்கு மனிதரின் இதயத்தைப் படைப்பதன் வழி பயிர்களின் செழிப்புக் காக்கப்படுவதாக நம்பிய அசுதெக்கு மக்கள், போர்த்தொழிலை மேற்கொண்டு, வெற்றி பெற்ற நாட்டைச் சார்ந்த ‘போர்க் கைதிகளைக்’ (War Captives) கொண்டு இந்த ‘இதயப் படையலைச்’ (Offerings of Heart) செவ்வனே செய்து வந்துள்ளனர்.\n\nநல்ல விளைச்சலுக்காக மனிதப் பலி கொடுக்கும் வழக்கத்தை உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, மேற்கு ஆப்பிரிக்காவில் நிலங்களில் விதையிடுதற்கு முன்பாக, ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் மண்வெட்டிகளாலும் களைக் கொத்திகளாலும் அடித்துக் கொன்று, அவர்களின் பிணங்களைப் புதிதாக உழுத நிலத்தின் நடுவில் புதைப்பர். இதனால், அந்த நிலம் உயிர்ப்புச் சக்தி மிக்குற்று அதிக விளைச்சலை நல்கும் என உறுதியாக நம்பினர். பவ்னீயினர் (Pawnees) ஒரு பெண்ணைப் பலி கொடுத்து, அவள் தசைகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, நெருப்பிலிட்டு வாட்டியெடுத்து ஒரு கூடையில் திரட்டி வைப்பர். பின் ‘தலைமைச் சமய குரு’ கூடையிலிருந்து ஒரு தசைத் துண்டை எடுத்துப் பிழிந்து விதைப்பிற்காக வைத்துள்ள சோள மணிகளின் மேல் ஒரு துளி இரத்தம் படுமாறு செய்வர். இதைத் தொடர்ந்து எல்லா விதைகளும் இவ்வாறு உயிர்ப்புச் சக்தியூட்டப்படும் வரை திரளாகக் கூடியுள்ள பிற மக்களும் இப்பணியைத் தொடர்ந்து செய்வர். நல்ல விளைச்சல் பெறவும் நோய் நொடி, பஞ்சம், வறட்சி ஆகியவற்றினின்று தம்மைக் காத்துக் கொள்ளவும் ஒரிசாவைச் சார்ந்த கொந்தர் (Khonds) பழங்குடியினர் ‘மெரியா’ எனப்படும் மனிதப் பலியை அளிக்கின்றனர். யானையின் துதிக்கை போன்ற மரத்தில் பலியிடப்போகும் மனிதனைக் கட்டி, செங்குத்து மரத்தின் மீது அவனைச் சுழலுமாறு செய்கின்றனர். இந்நிலையில், மயக்கமுற்ற அம்மனிதனைச் சுற்றிலுமுள்ள கொந்தர் தத்தம் கோடரியால் துண்டு. துண்டாக வெட்டி எடுத்த தசையைப் பாசனம் செய்யும் நீர் நிலையிலோ விதையிடப் போகும் நிலத்திலோ புதைத்து வைப்பர். இவ்வாறு செய்வதனால் விளைச்சல் பல்கிப் பெருகும் என எண்ணினர்.\n\nமனித உறுப்புகளிலேயே உயிர்ப்பொருள் மிகுதியாகக் கொண்டதாகத் ‘தலை’ கருதப்படுவதால், பிறந்த மூதாதையர் வழிபாட்டிலும் பயிர்த் தொழிலிலும் மனிதப் பலி தொடர்புடையது போன்று ‘தலை வேட்டையாடலும்’ சமமான இடத்தைப் பெறுவது இயல்பாகிறது. தலையில் பேய் ஒன்று இருப்பதாகவும், அது அலட்சியப்படுத்தாத வகையில் மண்ணில் வளத்தை உருவாக்குவதாகவும், பயிர்களின் வளர்ச்சியை நன்கு மேம்படுத்துவதாகவும், பொதுவாகச் சமுதாயத்திற்கும் குறிப்பாகத் தலையைக் கைப்பற்றியவனுக்கும் வளத்தைக் கொணர்வதாகவும் போர்னியோ தீவைச் சார்ந்த காயன் மக்கள் (Kayans) பெரிதும் கருதுகின்றனர். மேலைப் பர்மாவில், இடாப்பழங்குடியினர் (Ida Tribes) நிலத்தில் அபின் செடியில் (Opium Poppy) மலர்கள் பூத்துக் குலுங்கும் பொழுது, மனிதத் தலைகளைத் தேடிக் கிளம்புகின்றனர். எதிர்ப்படும் எந்த அந்நியரின் தலையையும் வெட்டிக் கொணர்கின்றனர். தாம்வேட்டையாடிப் பெற்ற தலைகளுடன் தலை வேட்டையாடுநர் வெற்றியுடன் திரும்புங்கால் சிற்றூர் மக்கள் வெற்றி முழக்கத்துடன் வரவேற்பு நல்குகின்றனர். ஏனெனில், பள்ளத்தாக்குகளில் நெல் விளைச்சலும், மலைப்பக்கங்களில் சோளமும், மலையுச்சியில் அபின் செடி மலர்களும் நல்ல விளைச்சலைக் காட்டும் என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை. பிலிப்பைன்சுத் தீவுகளில் வாழும் பொண்டாக்கு (Bontoc) மக்கள், விதைப்பின் பொழுதும், நடும்பொழுதும் ஒவ்வொரு பண்ணையும் குறைந்தது ஒரு புதிய மனிதத் தலையைத் தமது கிடங்கில் தவறாது வைத்திருக்க வேண்டியது தலையாயது எனக் கருதுகின்றனர். ஆப்பிரிக்காவில் மனிதப் பலி போன்றே தலை வேட்டையாடலும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுதற்கென அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, புதிது புதிதாகக் கிழங்குகள் தோண்டியெடுக்கும் பொழுது அசாந்தியர் (Ashanti) அக்குழிகளில் ஒரு மனிதத் தலையை வைக்கின்றனர். இதனால், மேலும் மேலும் கிழங்குகள் மிகுதியாக வளரும் என இவர்கள் நம்புகின்றனர். வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் (NEFA) வாழும் நாகர்களிடையே பயிர்களின் வளர்ச்சிக்காக மட்டும் அல்லாது கால் நடைகளின் மேம்பாட்டிற்காகவும் தலை வேட்டையாடுதல் மேற்கொள்ளப்படுகின்றது. அசாமில், மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகளுள் ஒன்றாகத் தலை வேட்டையாடுதல் ஒரு கால கட்டத்தில் திகழ்ந்தது, அதிலும் குறிப்பாக நடவு மேற்கொள்ளும் காலமும், அறுவடைக் காலமும் தலை வேட்டையாடலின் முதன்மைப் பருவங்களாகும்.\n\nதன்னின உண்ணல்\n\nமனிதப் பலியிலும் தலை வேட்டையாடலிலும் பலிகொடுக்கப்பட்ட மனிதனின் தலை அல்லது உடலின் ஒரு பகுதியை அல்லது முழுப் பகுதியை உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இறந்து போனவரின் பண்புகளைப் பெறுதற்கு உயிர்ப் பொருளைக் கொள்ள வேண்டும் என்ற விருப்பின் விளைவே ‘தன்னின உண்ணல்’ (Cannibalism). காலப் போக்கில், பழிவாங்கும் பொருட்டும் இந்த ‘தன்னின உண்ணல்’ வழக்கிற்கு வந்துவிட்டது. மனிதப் பலியைக் காட்டிலும், தன்னின உண்ணல் சிறிதளவே காணப்படுகிறது எனக் கூறலாம். என்றாலும், பசியைப் போக்குதற்காக அல்லாமல், சடங்கின் பொருட்டு இது மேற்கொள்ளப்படும் வரையில் உயிர்ப் பொருளைக் கொடுத்துப் பெறுதலில் இவ்விரண்டும் நேரடியாகத் தொடர்புடையனவே.\n\nதன்னுயிர் மாய்த்தல்\n\nமற்றையோரின் பொருட்டு மனிதர் தம்மைத் தாமே பலியிட்டுக் கொள்ளல் (Self Sacrifice) உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மறுஉலகில் தம் கணவரைத் தொடர்ந்து சென்று பணிவிடை செய்தற்குப் பெண்டிர் தம் கணவரின் உடலுக்குத் தீ மூட்டிய சிதையில் தாமும் விழுந்து உயிர்விடும் ‘உடன்கட்டை ஏறுதல்’ இந்தியாவில் காணப்பட்டது என்பது வரலாறு காட்டும் செய்தி.\n\nஉயிர்ப் பலியின் படிமுறை வளர்ச்சி\n\nவேட்டையாடுதல் உணவு சேகரித்தலை மேற்கொண்ட நிலையில் முந்தைத் தொல்மனிதர்கள் இரத்தப் படையலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது வரலாற்றில் முதல்நிலை எனலாம். பின்னர், இரத்தம் போன்ற சிவப்பு நிறமுடைய பொருள்களான செம்மண் துகள்கள், செந்தூரரம் போன்றவற்றிற்கும் உயிர்ப்புச் சக்தி உண்டு என்று கருதிய நிலையில் இரத்தப் படையலையடுத்து உயிரற்ற பொருள்களாகிய படையல் பயன்பாட்டிற்கு வந்தது இரண்டாம் நிலை. இதைத் தொடர்ந்து செழிப்புச் சடங்குப் பொருள்களான கோழிகளும், பெண் உருவங்களும் படையலாக்கப்பட்டதைக் காணலாம். பிறகு, குலக்குறி வழிபாட்டினர் தமது இரத்தத்தையளித்துத் தம் குலக்குறிகளுடன் ஒருவித பிணைப்பை மேற்கொள்ளும் நிலையை வரலாறு காட்டுகிறது. இதற்கு அடுத்த நிலையில், பயிர்த் தொழில் மேற்கொண்ட மனிதர் இரத்தப் படையலுக்கு மாறாகத் தாவரப் படையலை அறிமுகப்படுத்தியதைக் காணலாம். எனினும், இரத்தப் படையலுடன் கலந்த தாவரப் படையலே பிற்காலம் நிலைபெற்றதென அசுதெக்கு, மாயன், கொந்தர் பழங்குடியினரின் மனிதப் பலியிடும் வழக்கமும், போர்னியோ, பர்மா, அசாம், வடகிழக்கு எல்லைப் பகுதி (NEFA) ஆகியவற்றில் வாழும் மக்களின் தலை வேட்டையாடுதல் முறையும் உணர்த்துகின்றன. நாட்டுப்புறங்களின் சமய வழிபாட்டில் இரத்தப் படையல் இன்றளவும் நிலைத்து நிற்க, நகர்ப்புறங்களில் அரிசிச்சோறு முதலியன படையல் பொருளானது ஒரு மாற்றமே. இன்றைய இந்துக் கோயில்களில் உள்ள பலிபீடமும் அவற்றில் இடப்படும் மலர், எண்ணெய், சோற்றுருண்டைகள் ஆகியனவும் இக்கருத்திற்கு அரணாகக் காணலாம். வேதகாலம் முதற்கொண்டே, பிணத்துடன் ஒருவிலங்கைப் பலி கொடுத்தல் நிகழ்ந்து வந்தது. இவ்வழக்கமே பெருங்கற்காலத்தில் முதன்மையானதாகக் கொள்ளப்படலாயிற்று. அதாவது, பெருங்கற்காலம் தொடங்கி, இறந்தோருக்குச் செய்யும் ஈமச்சடங்குானிலும் மூதாதையர் வழிபாட்டிலும் உயிர்ப்பலி தலையாய பங்கை வகித்த- மையைக் காணலாம். விரும்பியது பெற உயிர்ப் பலிகொடுக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்துற்றது. அடிக்கடி உடைபடும் பாலம், கட்டடங்கள் ஆகியவற்றிற்கும் புதையல் எடுத்தற்கும் சட்டத்தின் கண்களுக்கு மறைவாக மனிதப்பலி கொடுப்பது இன்றளவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறுவதாகச் செய்தித்தாள்களில் காண்பது இதற்கு அடுத்த நிலை. இது போன்றே அரேபியாவில் இன்றும் புது நிலங்கள், புது வீடுகள், புதுக் கிணறுகள் மீது இரத்தத்தைத் தெளிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். நாகரிகம் மீதுயர்ந்து காணப்படும் இக்கால உலகிலும் உயிர்ப்பலி தொடர்ந்து வருகிறது என்பது இதனால் பெறப்படும்.\n\nஉயிர்ப்பலிக்குக் காரணங்கள் பலவாகும். உயிர்ப்பலியின் போது செய்யும் சடங்குகள் ஒரு சமுதாயத்திலிருந்து பிறிதொன்று ஒன்றுக்கொன்று மாறுபட்டாலும், உயிர்ப்பலிக்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவானவை எனலாம்.\n\n:: தாம் வழிபடும் கடவுள் அல்லது ஆவியானது மண்ணுலகில் நடத்த விழையும் நற்செயல்களை நடத்துதற்குரிய சக்தியை அளித்தற்கு.\n\n:: உயிர்ப்புச் சக்தி மிகுந்த புது இரத்தப் பெருவழி இறப்பின் வலிமையையும் அழிவையும் எதிர்கொள்வதற்கும் – இதனால், வழிபடுநரைத் தீய சக்திகளின் தாக்கத்திற்கெதிராக வலிமைப்படுத்துதற்கும் – தெய்வ ஆணையை மீறுதலை மறைத்தற்கும் அல்லது முழுமையாக நீக்குதற்கும்;\n\n:: வழிபடுநருக்கும் வழிபடு பொருள்களுக்குமிடையே ஒரு சீரிய உறவு நிலையை நிலைப்படுத்துதற்கு ஏற்ற வகையில் நன்மையியற்றும் சக்திகளுடன் உறவுநிலையை நிறுவுவதற்கு அல்லது நிறுவிய உறவு நிலையை மறுநிலைப்படுத்துதற்கு. இதன் வழி ‘இயற்கை விதிக்கும்’ (Natural Order) இயற்கை கடந்த விதிகளுக்குமிடையே தடையற்ற தகவல் தொடர்பைப் பெறுதலின் பொருட்டு.\n\nகணக்கீட்டிற்குள் அடங்கா ‘மனிதப் பட்டறிவின்’ கூறினைக் கட்டுப்படுத்தும் வழியாகவும், உயிர்ப்புச் சக்தியைப் புத்துருவாக்கிப் பெறும் வழியாகவும் உயிர்ப்பலிக் கட்டமைப்பில்லம் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. உயிர்ப்பலிக் கட்டமைப்பில்லமும் அதோடு தொடர்புடைய சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இந்தப் ‘பின்னல் வடிவமைப்பு’ (Network) வேறுபட்டதாக அமைகின்றது.\n\nஎவ்வாறாயினும், ஒவ்வொரு வடிவமைப்பிலும் ‘ஓங்கு நிலைக் கூறாக’க் காணப்படுவது ‘வாழ்வுக் கோட்பாட்டையும்’ (Concept of Life) உண்மை நிலையையும் (Reality) நோக்கியமையும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையே என்பது இங்குக் குறிப்பிடத் தக்க செய்தியாகும். அதாவது, உயிர்ப்புச் சக்தி வெளியேற்றப்படுவதால் ஏற்படுவதே இறப்பு. ஓர் உயிரை மேம்படச் செய்யவும் பாதுகாக்கவுமே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது; உயிர்ப்பலியின் பொழுது, இயற்கை கடந்தவற்றிற்கே உயிர்ப்பொருள் மாற்றப்படுகின்றது என்பதே உலகளாவிய கருத்தாகும். எனவே இந்நிலையில் பலியாக்கப்படுவது அல்லது பலியாக்கப்படுபவர் அழிக்கப்படுதல் முதன்மையானதாகக் கருதப்படத் தேவையில்லை என்பர் மானிடவியலார். சி.ம.\n\nதுணை நூல்கள்\n\nArens, W., The Man - Eating Myth, Oxford University Press, New York, 1979.\n\nFrazer, J.G., Golden Bough: A Study in Magic and Religion, Macmillan and Company, New York, 1890.\n\nHoog, G., Cannibalism and Human Sacrifices, Coles the Book People, Inc., New York, 1980.\n\nJames, E.O., Origines of Sacrifice: Study in Comparative Religion, Hazell, Waston and Viney Ltd, London, 1933.\n\nShastri, Dakshinaranjan., Origin and Development of the Rituals of Ancestor Worship in India, Boodland Pvt. Ltd, Calcutta, 1963.\n\nShulman, D.D., Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Asian Saiva Tradition, Princeton University Press, Princeton, 1980."}}