{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3n38pz2m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3n38pz2m/", "kind": "article", "headword": "நுரையீரல் மாற்றம்", "romanization": "nuraiyīral māṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.615042+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திசுக்களையும், உறுப்புகளையும் இடம் பெயர்த்து மாற்றி, மாற்று இடத்தில் பொருத்துவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.", "body_ta": "திசுக்களையும், உறுப்புகளையும் இடம் பெயர்த்து மாற்றி, மாற்று இடத்தில் பொருத்துவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. கி.மு. 1000இலேயே தோல் இட மாற்றம் செய்யப் பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், விழிப் பளிங்குப் படலமும், எலும்பும் இட மாற்றம் செய்யப் பட்டன. அலெக்சிஸ் கார்வெல் என்பார், பல உறுப்புகளின் இட மாற்றத்திற்கு வழி வகுத்தார். தடுப்பாற்றல் நிகழ்வான மறுதலித்தலே சிக்கலாக இருந்தது. தற்போது பெருமளவில் செய்யப் படுவது சிறுநீரக இட மாற்றமேயாகும்.\n\n1986ஆம் ஆண்டு யார்க்ஷயரில் 7 மணி நேரத்தில், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப் பட்டுப் புதியன பொருத்தப் பட்டன. 35 வயதான அந்நோயாளி, அறுவைக்குப் பின்னர், ஒரு சில வாரங்களே உயிர் வாழ்ந்தார்.\n\nநுரையீரல் மாற்றம் மிக அரிதாகச் செய்யப் படுகிறது. இவ்வகை நோயாளிகள் 6 வாரங்களே உயிருடன் இருந்தனர். 1980ஆம் ஆண்டு வரை 37 நோயாளிகளுக்கு அறுவை செய்யப் பட்ட போதும், ஒருவர் கூட உயிருடன் இல்லை. 10 மாதங்கள் வரை உயிர் வாழ்ந்த சிலர் உள்ளனர். மூச்சுக் கிளைக் குழலைத் தைக்கும் போது ஏற்படும் நசிவும், பின்னப் பட்டு இணைந்த குருதி நாளங்களின் குறுகலும், சிக்கல்களாக உள்ளன.\n\nபெருமளவிலான எம்பசீமாவிலும், நார்ப் பொருள் கொண்ட காற்று நுண்ணறைகளில் அழற்சி இருக்கும் போதும், நுரையீரல் இட மாற்றம் செய்யலாம். மறுதலிப்பைத் தவிர்ப்பதற்கு, அசோதயோப்பிரின். பிரட்னிசோலன், ஆக்டினோமைசீன் ஸ்டீராய்டு ஆகியவை கொடுக்கப் படுகின்றன. —அ. கதிரேசன்"}}